200 சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் தரும் கரூர் தம்பதி: புல்லினங்களின் சரணாலயமான இல்லம்!
கரூரில் ஆசிரியர் தம்பதிகளின் வீடு சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பறவைகளில் சொர்க்க பூமியாக மாறியுள்ளது. புல்லினங்களின் பாதுகாவலர்களாக மாறிய தம்பதி பற்றி அறிந்து கொள்ளலாம்....
கரூரில் ஆசிரியர் தம்பதிகளின் வீடு சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பறவைகளில் சொர்க்க பூமியாக மாறியுள்ளது. புல்லினங்களின் பாதுகாவலர்களாக மாறிய தம்பதி பற்றி அறிந்து கொள்ளலாம்..
காலையில் பறவைகளின் கீச் ஒலியோடு கண் விழிக்கும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்காது. ஆனால், கரூரைச் சேர்ந்த ஆசிரியர் தம்பதி, பறவைகளின் ‘கீச் கீச்’ ஒலியையே அலராமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
சிட்டுக்குருவிகளின் பாதுகாவர்களான ஆசிரியர் தம்பதி:
கரூர் மாவட்டம், டி.செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்த வனிதா, இவரது கணவர் ராஜசேகரன் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது வீட்டில் பால்கனி, மொட்டை மாடியின் மேற்கூரை, வீட்டின் முற்றம் என எங்கு பார்த்தாலும் சிறிய அளவிலான மண் பானைகள் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. அதனுள் அரிசி, முத்துச்சோளம், தண்ணீர் என பறவைகளுக்குத் தேவையான உணவு காத்திருக்கிறது.
ஒரு காலத்தில் சுமார் 20 சிட்டுக்குருவிகள் தங்கும் இடமாக இருந்த இடம், தற்போது 200க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகளுடன் ரம்மியமாக மாறியுள்ளது. ராஜசேகரன், வனிதாவின் முயற்சியால் ஆண்டுதோறும் ‘உலக சிட்டுக்குருவி தினம்’ கொண்டாடும் அளவிற்கு இவர்களது வீடு பிரபலமடைந்துள்ளது.
இதன் மூலம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பறவைகளின் நலன் குறித்து இந்த ஆசிரியர் தம்பதி எடுத்துரைத்து வருகின்றனர். இதுகுறித்து ராஜசேகரன் கூறுகையில்,
“சில வருடங்களுக்கு முன்பு, வனிதா சமையலறை எக்ஸாஸ்ட் ஃபேனை ஆன் செய்தபோது, அது வேலை செய்யவில்லை. அதனை பழுது நீக்கம் செய்வதற்காக ஏறிய போது, அந்த இடத்தில் ஒரு சிட்டுக்குருவி கூடு கட்டி வாழ்ந்து வருவதைக் கண்டோம். அதற்கு உணவளித்தோம். அன்றைய தினம் முதல் நமது சுற்றுச்சூழலலில் இருந்து மறைந்து கொண்டிருக்கும் ஒரு சின்னச்சிறு உயிரினத்திற்கு உதவ வேண்டும் என முடிவெடுத்தோம்,” என்கிறார்.
பறவைகளுக்கு தங்குமிடங்களை அமைப்பதில் எந்த அனுபவமும் இல்லாத தம்பதிக்கு யூடியூப் வீடியோக்கள் உதவியது. கொரோனா காலத்தின் போது ஆன்லைன் வகுப்புகளை நடத்திய ஆசிரியை வனிதா, தனது மாணவர்களுக்கு தங்களது வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள கூடுகளையும், அதில் பறவைகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளையும் மாணவர்களுக்கு காண்பித்து விளக்கியுள்ளார்.
அதுகுறித்து நினைவு கூர்ந்த வனிதா,
“அடுத்த தலைமுறையினரிடையே அக்கறை உணர்வை உருவாக்க விரும்புகிறேன். பறவைகளைக் காப்பாற்றுவதற்கும், விருப்பத்தைப் பற்றி அதிகமான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நாம் ஒவ்வொருவரும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வது முக்கியம்," எனக்கூறுகிறார்.
தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தொகுப்பு: கனிமொழி