கரூர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது!
கரூரை சேர்ந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகண்ணன் மற்றும் கோபியைச் சேர்ந்த மன்சூர்அலி கான் ஆகியோருக்கு தேசிய நல்லாசிரியர் விருது!
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ’ஆசிரியர் தினம்’ கோலாகலமாய் கொண்டாடப்படும் வேளையில், அந்நாளில் சிறப்பாகச் செயலாற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதும் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், 2018ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதினை தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் பெறவுள்ளனர்.

பட உதவி: . தினமணி
1958-59ம் ஆண்டில் ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் தனித்துவமான பங்களிப்பை அளித்து, அர்ப்பணிப்புடன் மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்திய நாட்டின் மிகச் சிறந்த ஆசிரியர்களை கவுரவிப்பதே இதுன் நோக்கமாகும்.
இவ்விருதுக்காக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (mhrd.gov.in)ஆசிரியர்களே விண்ணப்பிக்க வேண்டும். அவற்றில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பபடும். அந்த விண்ணப்பங்களை, மாவட்டக் கல்வி அலுவலகர் உள்ளிட்ட குழு ஆராய்ந்து, முதல் மூன்று இடங்களை மாநில மையத்துக்கு அனுப்பிவைக்கும். அதிலிருந்து ஆறு பேரை மட்டும் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யமுடியும். அப்படி பரிந்துரை செய்யப்பட்ட ஆறு பேரில் இருவரே செல்வக்கண்ணன் மற்றும் மன்சூர் அலிகான்.
செல்வகண்ணன்:
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள மோளப்பாளையத்தைச் சேர்ந்த செல்வக்கண்ணன், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வசதிகளுடன், மாணவர்களுக்கு யோகா, கராத்தே, கீ போர்டு, நடனம், ஆகியவை பள்ளியில் கற்றுதரப்படுகிறது.

பட உதவி: இந்து தமிழ்
2005ம் ஆண்டு முதல் அப்பள்ளியில் பணியாற்றிவரும் அவர் முதன் முதலில் கல்விச்சீர் விழாவை நடத்தியுள்ளார். மேலும், குழந்தைகளை அரசுப்பள்ளிகளிலே சேர்க்க வலியுறுத்தி, குறும்படம் ஒன்றையும் தயாரித்துள்ளார். ‘மாவட்டத்தின் சிறந்த கிராம கல்விக் குழுவிற்கான விருது’, ‘மாவட்டத்தின் சிறந்த புதுமை பள்ளிக்கான விருது’, மாவட்ட அளவில் ‘தூய்மை பள்ளிக்கான விருது’ ஆகிய பல விருதுகளை குவித்துள்ளது இப்பள்ளி. பள்ளிக்கு மட்டுமின்றி செல்வகண்ணனுக்கும் 2016ம் ஆண்டு தமிழக அரசின், ‘ராதாகிருஷ்ணன் விருது’ அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலே, தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

பட உதவி: .asiriyar.net
இதுகுறித்து அவர் தினமலர் பத்திரிக்கையிடம் கூறியதாவது,
“பள்ளியின் சூழலை மாற்றினால், மாணவ சேர்க்கையை அதிகரிக்கமுடியும் என்ற எண்ணத்தில் பள்ளியில் பல மாற்றங்களை கொண்டு வந்தேன். தற்போது, இப்பள்ளியில், 250 மாணவ-மாணவியர் படிக்கின்றனர். அடுத்தவர்களிடம் கோரிக்கை வைக்கும் முன், நாம் அதற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதால் என் மகள்களை அரசுப் பள்ளியில் படிக்க வைத்தேன். ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்து முன்னுதாரணமாக இருந்தால் மக்களுக்கும் நம்பிக்கை வரும்,: என்றுள்ளார்.
மன்சூர்அலி கான்:
தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தேர்வாகியுள்ள மற்றவர் மன்சூர் அலிகான் ஈரோடு மாவட்டம் கோபி கல்வி மாவட்டம் வைரவிழா மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர். மன்சூர் அலிகானுக்கு கிடைக்கும் 7வது விருது இது.
“1991ம் ஆண்டு முதல் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். மாணவர்களுக்கு புதிய யுக்தியில் ‘3டி’ வரைபடம் மற்றும் சுவர் ஓவியம் மூலம் சமூக அறிவியல் பாடம் நடத்தியதற்காக, தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இதுவரை, ஏழு விருதுகள் வாங்கியுள்ளேன். புதிய அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியை கற்பிப்பதே என் நோக்கம்.” என்று தினமலரிடம் தெரிவித்துள்ளார் அவர்.
தகவல் உதவி: தினமணி