வெள்ளை மாளிகை டிஜிட்டல் டீம் முக்கியப் பொறுப்பில் காஷ்மீர் பெண் ஆயிஷா ஷா!
வெள்ளை மாளிகையில் முக்கியப் பொறுப்பில் காஷ்மீர் பெண்!
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் திங்களன்று தனது வெள்ளை மாளிகை டிஜிட்டல் வியூக அலுவலக உறுப்பினர்களை அறிவித்தார். அதில், காஷ்மீரில் பிறந்த ஆயிஷா ஷா ஒரு மூத்த பதவியைப் பெற்றுள்ளார்.
பைடன் குழுவின் அறிவிப்பின்படி, இயக்குநர் ராப் ஃப்ளாஹெர்டி தலைமையிலான டிஜிட்டல் வியூக அலுவலகத்தின் மேலாளராக ஆயிஷா நியமிக்கப்பட்டுள்ளார். லூசியானாவில் வளர்ந்த ஆயிஷா, முன்பு பைடென்-ஹாரிஸ் பிரச்சாரத்தில் டிஜிட்டல் கூட்டு மேலாளராக (digital partnerships manager) ஆக பணியாற்றினார்.
ஸ்மித்சோனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவருக்கு இத்தகைய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஆயிஷா, ஜான் எஃப் கென்னடி சென்டர் ஃபார் பர்ஃபாமிங் ஆர்ட்ஸ் (John F Kennedy Center for the Performing Arts)-ன் கார்ப்பரேட் ஃபண்டில் உதவி மேலாளராக பணியாற்றினார். அப்போது மறைந்த முன்னாள் அதிபர் கென்னடியின் நினைவுச்சின்னத்தை முதன்முதலில் விரிவுப்படுத்தக் காரணமாக இருந்தார்.
சமூக தகவல்தொடர்புகளில் நிபுணத்துவம் பெற்ற ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் நிறுவனமான புவாயில் (Buoy) ஒரு மூலோபாய தகவல் தொடர்பு நிபுணராகவும் ஆயிஷா பணியாற்றியுள்ளார். வெள்ளை மாளிகையில் உள்ள டிஜிட்டல் வியூக அலுவலகத்தின் மற்ற உறுப்பினர்களில் பிரெண்டன் கோஹன் (பிளாட்ஃபார்ம் மேலாளர்), மஹா கந்தூர் (டிஜிட்டல் பார்ட்னர்ஷிப் மேலாளர்), ஜொனாதன் ஹெபர்ட் (வீடியோ இயக்குனர்), ஜெய்ம் லோபஸ் (தளங்களின் இயக்குநர்), காரஹ்னா மேக்வுட் (கிரியேட்டிவ் டைரக்டர்), அபே பிட்ஸர் (வடிவமைப்பாளர்), ஒலிவியா ரைஸ்னர் (பயண உள்ளடக்க இயக்குநர்), ரெபேக்கா ரிங்கெவிச் (டிஜிட்டல் வியூகத்தின் துணை இயக்குநர்), கிறிஸ்டியன் டாம் (டிஜிட்டல் வியூகத்தின் துணை இயக்குநர்) மற்றும் கேமரூன் டிரிம்பிள் (டிஜிட்டல் ஈடுபாட்டின் இயக்குநர்) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
”மாறுபட்ட நிபுணர்கள் அடங்கிய இந்த குழு டிஜிட்டல் வியூகம் வகுப்பதில் பரந்த அளவிலான அனுபவத்தைக் கொண்டுள்ளது. வெள்ளை மாளிகையை அமெரிக்க மக்களுடன் புதிய மற்றும் புதுமையான வழிகளில் இணைக்க இந்த குழு உதவும். அமெரிக்காவை சிறப்பாகக் கட்டியெழுப்புவதில் அவர்கள் முழு அர்ப்பணிப்பைக் கொண்டு செயல்பட இருகிறார்கள், அவர்களை எங்கள் அணியில் சேர்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று பைடன் கூறினார்.
கொரோனா ஊரடங்குக்கு பிறகு, டிஜிட்டல் தளங்கள் மற்றும் ஆன்லைனுக்கான தளம் இன்னும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமெரிக்கர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு குழுவை உருவாக்குகிறோம்.
எங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதி ஆன்லைனில் இருப்பதால், இந்த நிர்வாகம் டிஜிட்டல் தளத்தில் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் விரிவாகவும் இருப்பது மிகவும் முக்கியமானது, என்று துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் கூறினார்.
"டிஜிட்டல் அணுகல் பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் பொதுமக்களுடன் ஈடுபடுவதற்கான ஒரு முக்கியத் தூணாக இருக்கும். திறமையான நிபுணத்துவம் பெற்ற டிஜிட்டல் மூலோபாயவாதிகள் குழுவை வெள்ளை மாளிகைக்குக் கொண்டு வருவதன் மூலம், அமெரிக்க மக்கள் எங்கிருந்தாலும் ஒரு வலுவான உரையாடலை உறுதி செய்ய முடியும்," என்று வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ரான் க்ளெய்ன் தெரிவித்துள்ளார்.