அமெரிக்க கொரோனா கட்டுப்பாடு குழுவில் இடம்பெற்ற மொடக்குறிச்சிப் பெண் செலின் கவுண்டர்!
அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஜோ பைடன் அமைத்த குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த செலின் கவுண்டர் என்கிற பெண் மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஜோ பைடன் அமைத்த குழுவில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் மருத்துவர் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வாகியுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் துணை அதிபர் பதவி வகிக்கும் முதல் கருப்பின பெண் மற்றும் முதல் தெற்காசிய அமெரிக்க பெண் என்கிற பெருமை கமலா ஹாரிஸுக்குக் கிடைத்துள்ளது. இந்தியா இந்த வெற்றியைக் கொண்டாடி வரும் நிலையில், அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு தமிழ் பெண்ணும் முக்கியக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
ஜோ பைடன் தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று பிரச்சாரத்தின்போதே குறிப்பிட்டிருந்தார்.
இதை நிறைவேற்றும் விதமாக அவர், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்தக் குழுவில் 13 பேர் உள்ளனர். இதில் தலைமைப் பொறுப்பில் உள்ள மூன்று பேரில் இந்திய வம்வாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி இடம்பெற்றுள்ள நிலையில் மேலும் ஒரு பெண் மருத்துவர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செலின் கவுண்டர் என்கிற பெண் மருத்துவரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளார்.
செலின் கவுண்டரின் அப்பா ராஜ் கவுண்டர். இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே பெருமாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் 1966ம் ஆண்டு அமெரிக்கா சென்று போயிங் விமான நிறுவனத்தில் பணியாற்றினார். அமெரிக்கப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு அங்கேயே வசித்து வருகிறார்.
செலின்; நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு அமெரிக்க காசநோய் தடுப்புப் பிரிவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
1998-2012 காலகட்டத்தில் தெற்காசியா, லெசோதோ, மலாவி, எத்தியோப்பியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் காசநோய் மற்றும் ஹெச்.ஐ.வி தொடர்புடைய ஆய்வுகள் மேற்கொண்டார் செலின்..
இவர் மொடக்குறிச்சியில் ராஜ் ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பின் மூலம் மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மேம்பாட்டிற்காக பல்வேறு உதவிகள் செய்துள்ளார். செலின் கவுண்டரின் கணவர் பெயர் கிராண்ட். இவர் அமெரிக்காவில் ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார்.