பள்ளிகள் மூடப்பட்டதால் திறந்த வெளியில் வகுப்பு எடுக்கும் ஜம்மு ஆசிரியர்!
காஷ்மீர் பகுதிகளில் இணைய வசதி முறையாக இல்லாத நிலையில் முனீர் ஆலம் என்கிற கணித ஆசிரியர் திறந்தவெளியில் வகுப்பெடுத்து வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில் வாழ்க்கை ஸ்தம்பித்தது போன்றே கல்வி நிறுவனங்களும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என அனைவரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
வழக்கமான பள்ளி செயல்பாடுகள் தடைபட்டதால் பல பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பெடுக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளன.
இந்த நடைமுறை நகர்புறங்களில் சாத்தியம் என்றாலும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு இது பலனளிக்காமல் போகிறது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் இணைய வசதி முறையாக இல்லாததால் அங்குள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் முனீர் ஆலம் என்கிற கணித ஆசிரியர் திறந்தவெளிகளில் வகுப்புகளை எடுத்து வருகிறார்.
இதற்கு முன்பு முனீர் தனது பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு வகுப்பெடுத்து வந்தார். 11 மற்றும் 12-ம் வகுப்பு என ஒவ்வொரு வகுப்பிலும் காஷ்மீரின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த கிட்டத்தட்ட 80 மாணவர்களுக்கு இவர் பயிற்சியளித்து வந்தார். இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. காஷ்மீரில் இணைய இணைப்பு முறையாக இல்லாத காரணத்தால் இவரால் வகுப்பெடுக்க முடியாமல் போனது.
“நான் ஆன்லைனில் வகுப்பெடுக்க முயற்சி செய்தேன். வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கினேன். ஒவ்வொரு குழுவிலும் எட்டு மாணவர்களுடன் குழு உருவாக்கினேன். பாடங்களை ஆடியோ, வீடியோ, புகைப்படம் என வெவ்வேறு வடிவங்களில் பகிர்ந்துகொள்ள முயற்சித்தேன். 2ஜி சேவை மட்டுமே இருந்ததால் இவற்றை பகிர்ந்துகொள்ள முடியாமல் போனது. ஒருவேளை அனுப்ப முடிந்தாலும் ஸ்ரீநகர் பகுதிகளுக்கு வெளியே இருக்கும் மாணவர்களால் அவற்றைப் பதிவிறக்கம் செய்ய முடியாமல் போனது. அதுமட்டுமின்றி பல குடும்பங்களில் ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே வைத்திருந்தனர். ஒன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள வீட்டில் அனைவராலும் படிப்பது சாத்தியமில்லாமல் போனது,” என்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் அவர் தெரிவித்துள்ளார்.
முனீரின் பயிற்சி மையத்தின் பெயர் `Gaash – the Light of Knowledge’. இந்த மையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் திறந்தவெளியில் வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். இந்தப் பகுதியில் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலே பள்ளிப் படிப்பு தடைபட்டுள்ளது. பயிற்சி மையங்களும் மூடப்பட்டதால் கல்வி கற்க வாய்ப்பே இல்லாமல் போனது.
“மாணவர்களின் எதிர்காலத்தை நினைக்கும்போது தூக்கம் வர மறுக்கிறது. இதுவே எனக்கு உந்துதலாக இருந்து இந்த முயற்சியை எடுக்க வைத்தது,” என்று இவர் WION News இடம் தெரிவித்துள்ளார்.
திறந்த வெளியில் முனீர் வகுப்பெடுப்பதால் மாணவர்கள் எளிதாக சமூக இடைவெளியைப் பின்பற்றி வகுப்புகளில் பங்கேற்கின்றனர். அதுமட்டுமின்றி ஒரே சமயத்தில் பல மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் முடிகிறது.
“இரண்டு பேட்ச்களாக இரண்டு வகுப்புகள் நடக்கிறது. அதிகாலையில் அனைவரும் இங்கு வந்துவிடுவோம். அனைவரும் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுகிறோம். வெயில் அதிகரிக்கும் முன்பு வகுப்பை முடித்துவிட வேண்டும் என்பதால் அதிகாலையில் வகுப்பு தொடங்கிவிடுகிறது,” என்றார் 11-ம் வகுப்பு மாணவரான அஃபாஸ் யூசுஃப் புஷூ.
அவர் மேலும் கூறும்போது,
“ஸ்ரீநகர் பகுதிக்கு வெளியே இருந்தும் மாணவர்கள் வருகின்றனர். இருப்பினும் சரியான நேரத்திற்கு வந்துவிடுகின்றனர். பல மாதங்களுக்குப் பிறகு முறையாக வகுப்புகளில் கலந்துகொள்கிறோம்,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA