துணி ஹேங்கரில் மொபைல் போனை வைத்து ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியை!
புனேவைச் சேர்ந்த வேதியியல் ஆசிரியை மௌமிதா போன் வைக்க ட்ரைபாட் இல்லாததால், தன்னிடம் இருப்பதை வைத்து ஆன்லைனில் வகுப்பு எடுக்கிறார்.
கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் முறையை கையிலெடுத்துள்ளது. ஆசிரியர்கள் ஜூம் போன்ற வீடியோ தளங்களின் மூலம் மாணவர்களுக்கு வகுப்பெடுத்து வருகின்றனர்.
மாணவர்கள் லாக்-இன் செய்து இந்த வகுப்புகளில் பங்கேற்கின்றனர். ஆசிரியர்கள் வழக்கம்போல் மாணவர்களுக்காக பாடங்களை தயார் செய்தாலும் வகுப்பறைச் சூழலை உருவாக்குவது சவாலாக உள்ளது.
புனேவைச் சேர்ந்த வேதியியல் ஆசிரியை ஒருவர் டிரைபாட் (tripod) இல்லாத காரணத்தால் புதுமையான முறையில் வகுப்பறைச் சூழலை உருவாக்கியுள்ளார்.
மௌமிதா என்கிற ஆசிரியை ஒரு ஹேங்கரையும் சில துணிகளையும் பயன்படுத்தி மொபைல் வைப்பதற்காக தற்காலிக ஸ்டாண்ட் உருவாக்கியுள்ளார். துணிகளைக் கொண்டு ஹேங்கரை நாற்காலியுடன் சேர்த்து கட்டி அதில் மொபைலைப் பொருத்தியுள்ளார்.
"என்னிடம் டிரைபாட் இல்லை. எனவே என் வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்காக வித்தியாசமான முறையில் இப்படி ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளேன்,” என்று குறிப்பிட்டுள்ள மௌமிதா தனது லிங்க்ட்இன் பக்கத்தில் வகுப்பெடுக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
வகுப்பறைச் சூழலை உருவாக்குவதற்காக இவர் ஒரு பலகையில் எழுதி வகுப்பெடுக்கிறார். இதன் மூலம் மாணவர்கள் சிறப்பாக பலனடையவேண்டும் என்பதே இந்த ஆசிரியையின் நோக்கம்.
இவரது புதுமையான முறை பல நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது. பலர் இவரைப் பாரட்டியுள்ளனர்.
“இவர் யார், எங்கிருக்கிறார் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் இந்த வீடியோ எனக்கு உற்சாகமூட்டுகிறது. தன்னிடம் இருக்கும் பொருட்களைக் கொண்டு ஆன்லைன் வகுப்பெடுக்க அருமையான ஒரு சூழலை இந்த ஆசிரியை உருவாக்கியுள்ளார். இவரது ஆர்வம் இதில் வெளிப்படுகிறது,” என்று நெட்டிசன் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
ஐஎஃப்எஸ் அதிகாரி சுதா ராமன், “இந்தப் படம் நேர்மறையான சிந்தனையை ஊக்குவிக்கிறது,” என்று குறிப்பிட்டு மௌமிதாவின் ட்விட்டர் பதிவை மறுட்வீட் செய்துள்ளார்.
பயனர் ஒருவர் இவரது ஆர்வத்தைக் கண்டு இவர் வகுப்பெடுக்க உதவும் வகையில் டிரைபாட் வாங்கி வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“மௌமிதா, இதற்கு முன்பும் ஒருமுறை நான் உங்களுக்கு பதிலளித்திருந்தேன். நீங்கள் இன்னமும் டிரைபாட் வாங்கவில்லை என்றால் உங்கள் இருப்பிடத்திற்கு ஒரு டிரைபாட் அனுப்பிவைக்கலாமா? உங்களுக்கு சம்மதமானால் அனுப்பவேண்டிய முகவரியைப் பகிர்ந்துகொள்ளுங்கள். ஆர்டர் செய்த உடன் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். உங்கள் சக ஆசிரியர்கள் யாருக்காவது டிரைபாட் தேவைப்படுமானால் அந்தத் தகவலையும் தெரிவிக்கலாம். உங்களது சிறப்பான சேவைக்கு வாழ்த்துக்கள்,” என்று அந்தப் பயனர் பதிவிட்டுள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA