ஒரே நாளில் பங்குச்சந்தையில் டீச்சர் கவிதா ரூ.14 லட்சம் சம்பாதித்தது எப்படி?
மேற்குவங்கத்தைச் சேர்ந்த கவிதா கூடுதல் வருமானம் பெறுவதற்காக பங்குச்சந்தையை கற்றுக் கொண்டு தன்னுடைய போர்போலியோவை ரூ.2 கோடிக்கும் அதிகமானதாக மாற்றிக் காட்டி இருக்கிறார்.
சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய பங்குச்சந்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக படிக்கலாம் என்று கவிதா முடிவு செய்தார். அந்த நேரத்தில் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ.30,000 ஊதியத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இன்று கவிதாவின் போர்ட்போலியோ ரூ.2 கோடிக்கும் அதிக மதிப்புமிக்கதாக உயர்ந்து இருக்கிறது.
பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பண சம்பாதிப்பதற்கு மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான இடங்களில் ஒன்றாக உலகில் இருக்கிறது, அதிலும், குறிப்பாக ஃபியூச்சர் மற்றும் ஆப்ஷன்ஸ் டிரேடிங்கில் ஆபத்து அதிகம். இருப்பினும், இதனையும் சிலர் முறியடித்து விடுகின்றனர். தங்களது முழு நேர வேலையை பார்த்துக் கொண்டே ஆப்ஷன் டிரேடிங்கிலும் லாபம் சம்பாதிக்கின்றனர்.
மேற்குவங்கத்தின் பர்த்வானைச் சேர்ந்த கவிதா தற்போது ஆஸ்திரேலியாவில் முழு நேர ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார், அதே சமயம் ஆப்ஷன் டிரேடிங்கிலும் நன்கு நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்கிறார்.

கவிதா, ஆப்ஷனல் டிரேடர்
டியூஷன் டீச்சர் டு பங்கி வர்த்தகர்
சின்ன வயதிலேயே கவிதா பணத்தை எப்படி சம்பாதிப்பது என்பதன் மதிப்பையும் அதனை எப்படி சேமிக்க வேண்டும் என்ற கலையையும் கற்றிருந்தார். படிப்பில் நம்பர் ஒன்னாக சிறு வயது முதலே திகழ்ந்தவர், 14 வயதில் இருந்தே டியூஷன் நடத்தி, ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் மாதம் ரூ.250 வீதம் கட்டணம் வசூலித்து வருமானம் பெறத் தொடங்கி இருக்கிறார்.
“நான் சின்ன பிள்ளையா இருந்த போது, உறவினர்கள் மற்றும் தாத்தா பாட்டியை பார்க்கச் செல்லும் சமயத்தில் அன்பின் அடையாளமாக அவர்கள் எனக்கு பணம் கொடுப்பார்கள். நான் அந்த பணத்தை என்னுடைய அம்மாவிடம் கொடுத்து வைத்திருப்பேன் காலத்திற்கு ஏற்ப அந்த பணத்திற்கு வட்டியையும் சேர்த்து வைப்பதை அம்மா வழக்கமாக கொண்டிருந்தார்,” என்று நினைவுபடுத்துகிறார் கவிதா.
ஒருவர் எவ்வாறு பணத்தை சேமிக்கலாம்?
உங்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் பெற்றோரின் ஆதரவு இன்றியமையாதது மற்றும் உங்கள் வெற்றியை தீர்மானிக்கும் காரணியும் அவர்களே என்று கவிதா நம்புகிறார். பணத்தை செலவழிப்பதற்கு ஒரு வரம்பை வைத்துக்கொண்டால் ஒருவரால் அதனை சேமிக்க முடியும் என்பதை அவரின் பெற்றோர் கற்றுத்தந்ததாகக் கூறுகிறார்.
கல்லூரி நாட்களிலும் கூட பகுதி நேரமாக பாடமெடுப்பதை அவர் தொடர்ந்து கொண்டிருந்தார். குழந்தைப் பருவம் முதலே படிப்பில் டாப்பர் என்றாலும், தனது தந்தையால் விடுதிச் செலவை ஏற்க முடியாது என்பதால் தனது சொந்த ஊருக்கு அருகில் இருந்த ஒரு கல்லூரியில் உயர்கல்வியை படிக்க கவிதா தேர்வு செய்துள்ளார்.
தினந்தோறும் 3 மணி நேர பேருந்து பயணம். மாலையில் வீட்டிற்கு வந்த உடன் இரவு 9 மணி வரையிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
நேரம் ஒத்துழைக்காத நிலையிலும் டியூஷன் எடுத்ததால் கட்டணத்தை ரூ.400 வரை உயர்த்தி மாணவர்களுக்கு கணினி மற்றும் அறிவியல் பாடங்களை கற்பித்தார். கூடுதல் வருமானம் ஈட்டும் அந்த எண்ணம் கவிதாவிற்கு ’சுதந்திரமாக’ இருக்கிறோம் என்கிற உணர்வைத் தந்தது.
அறிமுகமான பங்குச்சந்தை
புனேயில் உள்ள ஐடி நிறுவனத்தில் முதல் முதலாக வேலையில் சேர்ந்த பிறகு தன்னுடைய கற்பித்தல் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் இவர். தனது பயிற்சிக் காலத்தில், தன்னுடன் இருப்பவர்கள் பங்குச்சந்தைகளில் மூழ்கிக் கிடப்பதை கண்டுள்ளார் கவிதா.
பங்குச்சந்தை பற்றி கேட்டது அதுவே அவருக்கு முதல் முறை. எப்பொழுதும் தனக்கென கூடுதல் வருமானம் ஈட்டும் பழக்கத்தை கொண்டிருந்ததால், பங்கு வர்த்தகம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள முடிவெடுத்தார்.
தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர் மூலம் ஸ்டாக் பரிவர்த்தனை அறிமுகமானதாக கவிதா கூறுகிறார். மேலும், வர்த்தக செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களைப் படித்தும் அவர் புரிதலை ஏற்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார். சீக்கிரத்திலேயே கவிதா இன்ட்ராடே வர்த்தகம் செய்யத்தொடங்கி நாளொன்றிற்கு ரூ.200 முதல் ரூ.400 வரை லாபம் பெற ஆரம்பித்தார்.
ஆனால், அவரைப் பொறுத்த வரையில் வர்த்தகம் என்பது எப்போதாவது தொடர்பில் இருக்கும் ஒரு விஷயமாக இருந்தது. தனக்கான போர்ட்போலியோ உருவாக்குவதற்காக வங்கியில் இருந்து ரூ.3 லட்சம் தனிநபர் கடன் பெற்ற நேரத்தில் கவிதா பங்குச்சந்தை முதலீட்டில் பெரிய முன்னேற்றம் கண்டார்.
தனது சக ஊழியர் கேரியர் பாயின்ட் ஐபிஓவிற்கு விண்ணப்பித்ததையும், லிஸ்டிங்கில் பெரிய வருமானத்தைப் பெற்றதையும் பார்த்த பிறகே, தான் கடன் வாங்கியதாகக் கூறினார். அந்த முடிவு ஒரு திருப்புமுனையாக அமைந்தது, ஏனெனில், அது பங்குச் சந்தையில் அவருடைய ஆர்வத்தைத் தூண்டியது மட்டுமல்லாமல், எல்லா முரண்பாடுகளையும் சமாளிக்க முடியும் என்கிற ஒரு வியாபாரியின் வைராக்கியத்தை அவருக்குள் விதைத்துள்ளது
பெற்றோருக்கு அதிர்ச்சி
ஆனால், கடன் விவரங்கள் அவருடைய வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் அதனைப் பார்த்ததும் அவருடைய பெற்றோர் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர்.
“பங்கு வர்த்தகம் என்பதும் ஒரு வகை சூதாட்டமே அதில் யாராலும் பணம் சம்பாதிக்கவே முடியாது என்று எல்லா குடும்பங்களும் நினைப்பது போலவே என்னுடைய பெற்றோரும் கருதினர். அவர்களை பெருமையாக உணர வைத்த விஷயம் என்னவென்றால் கவிதா தன்னுடைய போர்ட்போலியோவின் அளவு ரூ. 20 லட்சம் அளவிற்கு உயர்ந்திருப்பதாக அவர்களிடம் காட்டியபோது அவரின் பெற்றோர் மனம் மகிழ்ந்து போயுள்ளனர்."
முதலீடும் நஷ்டமும்
இருப்பினும், 2016ம் ஆண்டில் ஃபியூச்சர் மற்றும் ஆப்ஷன் டிரேடிங் பற்றிய பயிற்சி வகுப்பு ஒன்றில் இருந்து தான் வர்த்தகத்தின் இதர அம்சங்களைத் தான் புரிந்து கொண்டதாகக் கூறுகிறார் கவிதா. அதன் பிறகே கவிதா ஃபியூச்சரில் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளார்,
ஆனால், அதில் பணத்தையும் இழந்தார். அதே நேரத்தில், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பெரிய முதலீட்டாளர்கள் நஷ்டத்தை மீட்பதற்கு என்ன செய்தார்கள் என்பதையும் படிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் அவர் covered call options உத்தியைக் கண்டுபிடித்தார்.
ஆப்ஷன் வர்த்தகம் (Option Trading)
"ஆப்ஷன் வர்த்தகம் என்னுடைய ஒரு நீண்ட கால பிரச்சனையான சந்தையில் இதர வழிகளிலும் பணம் சம்பாதிக்கும் பிரச்னையை தீர்த்து வைத்தது" என்று அவர் கூறினார்.
ஆப்ஷன் உத்திகளில் விரைவிலேயே நிபுணத்துவம் பெற்று தன்னுடைய முதலீடுகளுக்கு தக்க லாபத்தை ஈட்டுபவராக அவரால் செயல்பட முடிந்தது. தன்னை Positional வர்த்தகர் (Positional trader) என்று அழைத்துக் கொள்ளும் கவிதா, வார மற்றும் மாத ஆப்ஷன்களின் வர்த்தகம் செய்கிறார்.
முழுநேரப் பணியல்ல
வர்த்தகத்தில் கவிதா வெற்றி கண்டாலும், ஒருவரின் வருமானம் என்பது இதனைச் சார்ந்து மட்டுமே இருக்கக் கூடாது என்று நம்புகிறவர்.
பங்குச் சந்தையை முழுமையாக நம்பியிருப்பதற்குப் பதிலாக, ஒருவர் கூடுதல் வருமான ஆதாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார். பங்குச் சந்தையில் புதிதாக நுழைபவர்களுக்கு அவர் கூறும் அறிவுரையானது, பங்குச் சந்தையில் போதுமான நிதி, அறிவு மற்றும் நம்பிக்கையை நீங்கள் சேகரிக்கும் வரை, தொடர்ந்து பணியாற்றுங்கள் மற்றும் பங்குச் சந்தையை உங்கள் பகுதி நேரப் பணியாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரே நாளில் ரூ.14 லட்சம் லாபம்
கவிதாவுக்கும் பங்குச்சந்தைகளில் இழப்புகள் இருந்தது. பங்குச் சந்தையில் அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு ₹8 லட்சம் ஆகும். இருப்பினும், அவரது கற்றல் மற்றும் அனுபவத்தின் மூலம், அவர் இப்போது ஆண்டுதோறும் ஆப்ஷன் வர்த்தகத்தின் மூலம் நியாயமான வருமானத்தை உருவாக்குகிறார். ஆப்ஷன் டிரேடிங்கில் கவிதாவின் மிகப்பெரிய லாபம் இன்றுவரை ஒரே நாளில் ₹14 லட்சம் சம்பாதித்ததாகும்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்
பங்குச்சந்தையில் தற்போது ‘குரு’வாக இருக்கும் கவிதா, பரிதுரைப்பது என்னவெனில் பங்குச்சந்தை பற்றி மக்கள் ஆழமான அறிவைப் பெற்ற பிறகே முதலீடு செய்ய வேண்டும், ஆனால்,
“எப்போதும் சிறிய தொகை முதலீட்டில் இருந்து தொடங்குவது நல்லது,” என்கிறார். "ஒருவரிடம் ₹10 லட்சம் மூலதனம் இருந்தால், முதலில் ₹50,000 முதல் ₹1 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஒருவர் தனது எல்லா பணத்தையும் சந்தையில் போடக்கூடாது," என்று அவர் விவரிக்கிறார்.
'கடின உழைப்பு,' 'நிலைத்தன்மை' மற்றும் 'ஒழுக்கம்' ஆகியவையே தனது வெற்றிக்கான மந்திரங்கள் என்றும், சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பதே தனது இறுதி இலக்கு என்றும் கவிதா கூறுகிறார்.
தனது குறிக்கோள்களைப் பற்றி அதிகம் வெளிப்படுத்தாத அவர், "நாட்டில் பல சமூகப் பிரச்சினைகள் உள்ளன, ஆனால், பெண்கள் தொடர்பான பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தி அவற்றைத் தீர்க்க முயற்சிப்பேன்," என்கிறார்.