கரன்ட் இன்றி இயங்கும் ‘ஸ்மார்ட் மிக்ஸி’ - 20+ கண்டுபிடிப்புகள் வைத்துள்ள ‘வில்லேஜ் விஞ்ஞானி’ பிஜூ சேட்டா!
கேரளாவைச் சேர்ந்த 52 வயது பிஜூ நாராயணன் மின்சாரம் இல்லாமல் வீட்டு வேலைகளை ஒரே இயந்திரத்தில் செய்யக் கூடிய 15 அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் மிக்ஸியை கண்டுபிடித்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
கேரளாவின் தொடப்புழாவைச் சேர்ந்த பிஜூ நாராயணன். இவருக்கு சிறு வயது முதலே மின்சாதனப் பொருட்கள் இயக்க முறையை கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. அவருடைய வளர் பருவத்தில் முதன் முதலாக ரேடியோவைக் கேட்ட போது மின்சாதன பொருட்கள் எப்படி இயங்குகிறது என்பதை அறிந்து கொள்வதற்கான கேள்வி அவருக்குள் எழுந்திருக்கிறது.
பிஜூ தனது 12வது வயதில் ரேடியோவை தானாகவே உருவாக்கத் தொடங்கியதாக தி பெட்டர் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
எனக்கு சிறுவயதாக இருந்த போது எங்கள் ஊரில் ஒரு சிலரின் வீட்டில் ரேடியோ பெட்டி இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கும் ஆசை, ஆனால் என்னுடைய பெற்றோருக்கு ரேடியோ வாங்கும் அளவிற்கு வசதி இல்லை. அதனால் நானே சொந்தமாக வானொலிப் பெட்டியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன்.
“என்னுடைய ஆர்வத்தின் காரணமாகவே நான் சுயமாக எலக்ட்ரானிக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளத் தொடங்கினேன். எனக்கு வழிகாட்டி என்று யாரும் இல்லை. புத்தகங்களில் படித்தவை மற்றும் என்னுடைய கண்டுபிடிப்புகளில் கிடைத்த அனுபவங்களை வைத்தே மின்சாதனப் பொருட்களை உருவாக்கத் தொடங்கினேன்,” என்கிறார் பிஜூ.
வானொலிப் பெட்டியை உருவாக்கும் முயற்சி அவருக்கான வாழ்க்கைப் பாதையை மாற்றி இருக்கிறது. தன்னுடைய எலக்ட்ரானிக்ஸ் பரிசோதனைகளை தொடர்ந்து கொண்டிருந்தவர் அதையே தன்னுடைய தொழிலாகவும் மாற்றிக் கொண்டு இருக்கிறார். இப்படியே சில காலங்கள் கடந்து காண்டிருந்த தன்னுடைய கண்டுபிடிப்புகளால் புதிய மின்சாதன கருவிகளை உருவாக்கத் தொடங்கினார் பிஜூ.
12 வயதில் தொடங்கிய இந்த கண்டுபிடிப்புகளின் விளைவாக 52 வயது வரை சுமார் 20 தனித்துவமான கருவிகளை உருவாக்கி இருக்கிறார் பிஜூ. இவருடைய 20 ஆண்டு கண்டுபிடிப்புகளில், ‘கிரைண்டருடன் கூடிய ஸ்மார்ட் சோலார் டிசி மிக்ஸி’ பிரத்யேக படைப்பாக இருக்கிறது.
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு தரக்கூடிய பொருட்களை கண்டறிய வேண்டும் என்று நான் விரும்பினேன். அப்படியான கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் இந்த மிக்ஸி, இதனை சூரிய சக்தி அல்லது மின்சார வசதியுடனோ இயக்கலாம். கூடவே 8 மணி நேரங்கள் இயங்கக் கூடிய பேட்டரி வசதியும் இதில் உள்ளது.
ஸ்மார்ட் மிக்ஸியில் அரைப்பது மட்டுமின்றி, தேங்காய் துருவலாம், வெவ்வேறு வடிவங்கள், அளவுகளில் காய்கறிகளை நறுக்கலாம், செல்போன் சார்ஜ் செய்யலாம், wifi modem இணைக்கலாம் மற்றும் வீட்டை சுத்தம் செய்யும் vaccum cleanerஆகவும் பயன்படுத்தலாம்,” என்கிறார்.
புதுமை கண்டுபிடிப்புகளுக்கான விதை
பிஜூவின் குடும்பச் சூழல் பொருளாதார பிரச்னைகளை சமாளிக்க வேண்டியதாக இருந்தது. எனினும் சிறு வயதில் வானொலியில் பாடல் கேட்பது அவருக்கு பிடித்த விஷயமாக இருந்தது.
நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது வானொலியை உருவாக்குவது எப்படி என்பதற்கான அடிப்படைகள் அடங்கிய புத்தகம் எனக்குக் கிடைத்தது. அதில் இருந்தவற்றை படித்து கற்றுக் கொண்டேன். சில ஆண்டுகளில் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு பழுதான ரேடியோக்களை சரிசெய்யத் தொடங்கினேன்.
கடைசியில் ரேடியோவின் இயக்கம் முழுவதையும் தெரிந்து கொண்டு நானே சொந்தமாக ரேடியோ உருவாக்கி முதன்முதலில் என்னுடைய ரேடியோவில் விவித் பாரதி நிகழ்ச்சியை கேட்டேன் என்று மகிழ்கிறார் பிஜூ.
காலங்கள் செல்லச் செல்ல பிஜூவின் கற்றல் ஆர்வம் அடுத்த கட்டமான ரேடியோவில் இருந்து தொலைக்காட்சி பெட்டிக்கு மாறியது. பள்ளி இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்த போதே பழுதான தொலைக்காட்சிப் பெட்டிகளை சரிபார்க்கத் தொடங்கி இருக்கிறார். பள்ளிப் படிப்பை முடித்ததுமே முழுநேர எலக்ட்ரீஷியனாக பணியைத் தொடங்கி இருக்கிறார் பிஜூ.
பள்ளிக்குப் பிறகு கல்லூரி சென்று படிக்காவிட்டாலும் எலக்ட்ரிக்கல் தொடர்பான கற்றலுக்கு மட்டும் முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்து அறிவை விரிவு செய்து வந்திருக்கிறார்.
”சொந்த அனுபவம், படித்து தெரிந்து கொண்டவற்றை வைத்து சொந்தமாக உபகரணங்களை தயாரிக்கத் தொடங்கினேன். 1990ம் ஆண்டு முதலே மின்சாதன பொருட்கள் பழுதுபார்க்கும் கடையோடு பயனுள்ள மின்சாதன பொருட்களை தயாரித்து வருகிறேன். டிவியின் ஒயரை பிடுங்கும் போது ஏற்படும் எலக்ட்ரிக் ஷாக்கை தடுக்கும் விதத்தில் வயரில்லாத டிவி பூஸ்டரை உருவாக்கினேன்,” என்கிறார் இவர்.
ஆல் ரவுண்டர் சோலார் மிக்ஸி
டெக்னாலஜியின் தினந்தோறும் புதுமைகள் உருவாகிக் கொண்டே இருந்த சமயத்தில் நிதி நெருக்கடியால் பிஜூ தன்னுடைய கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அதன் பின்னர், வீட்டில் இருந்தே வேலை செய்து வந்தவர் தன்னுடைய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு அதிகம் நேரம் செலவிடத் தொடங்கி இருக்கிறார். இதன் விளைவாக 2010ம் ஆண்டில் ’ஸ்மார்ட் சோலார் மிக்ஸி’யின் முதல் மாடலை உருவாக்கி இருக்கிறார்.
வீட்டு சமயலறையில் மிக்ஸி முக்கிய இடம் வகிக்கிறது. கரண்ட் இல்லாவிடில் அது பயனற்றதாக இருக்கிறது. பருவமழை காலங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடைகளால் மிக்ஸியை பயன்படுத்த முடியாமல் என்னுடைய மனைவி மிகவும் கஷ்டப்பட்டார். இதனால் மின்சாரமில்லாத நேரத்திலும் பயன்படுத்தக் கூடிய வகையில் அரைத்தலுக்கு மட்டுமே பயன்படுத்தும் விதமாக முதன்முதலில் மிக்ஸியை உருவாக்கி இருக்கிறார்.
சிறப்பம்சங்கள் என்ன?
10 ஆண்டுகள் தன்னுடைய ஆராய்ச்சியை தொடர்ந்தவர் மிக்ஸியை மேலும் அதிக சிறப்பம்சங்களுடன் கூடியதாகத் தயாரித்துள்ளார். மிக்ஸியின் மோட்டாரே அதன் இயக்கத்திற்கான சக்தி படைத்தது. இந்த ’ஸ்மார்ட் மிக்ஸி’யை 20Wசோலார் சக்தி அல்லது மின்சாரம் கொண்டு சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டு விட்டால் மின்சாரம் இல்லாவிட்டாலும் இடி மின்னல் நேரத்திலும் கூட 8மணி நேரம் வரை அதனை பயன்படுத்தலாம்.
https://www.facebook.com/reel/1555881208199368
கூடவே இந்த மிக்ஸியில் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி, எமர்ஜென்சி விளக்கு, wifi modem உடன் இணைக்கும் வசதி மற்றும் பென் டிரைவ்களை இணைப்பதற்கான USB portகள் உள்கட்டமைக்கப்பட்ட ரேடியோ வசதி உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.
மின்சார உதவியுடன் இயங்கும் போது அதிக சத்தம் இருக்காது என்பதோடு அடுப்பங்கறையில் கேஸ் கசிவு அல்லது புகையை கண்டுபிடிப்பதற்காக ஒரு சென்சாரும் பொருத்தப்பட்டுள்ளது. அதிக புகை இருப்பதை கண்டறிந்தால் மிக்ஸி விசில் சத்தமிடும். மேலும், இதனை மின்விசிறியாகவும் vaccum cleanerஆகவும் கூட பயன்படுத்தலாம். பல ஆண்டுகளாக பிஜூவின் குடும்பத்தினர் இந்த மிக்ஸியை பயன்படுத்தி வருகின்றனர்.
கிராமப்புற கண்டுபிடிப்பாளர்
இந்த கண்டுபிடிப்பிற்காக பல விருதுகளை வாங்கி இருப்பதாக பிஜூ குறிப்பிடுகிறார். 2021ம் ஆண்டில் கேரள அரசின் ’கிராமப்புற கண்டுபிடிப்பாளர்’ விருதை இவர் பெற்றிருக்கிறார். ஏரோபிளேன்களில் இருப்பதைப் போன்றே ஆடியோ வீடியோவை பதிவு செய்து காரில் பயன்படுத்தும் கருப்புப் பெட்டி, வாகன ஓட்டி அலட்சியமாகவோ அல்லது அசம்பாவிதங்கள் ஏதேனும் ஓட்டுநருக்கு நிகழ்ந்தாலோ எச்சரிக்கும் கருவி, எளிதாக தேங்காயை உடைக்கும் கருவி போன்றவை இவருடைய கண்டுபிடிப்புகளில் தனித்துவமானவையாகும்.
விண்ணப்ப கட்டணம் செலுத்த முடியாது என்பதால் தன்னுடைய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கோராமல் இருப்பதாகக் கூறுகிறார் பிஜூ.
“என்னுடைய சோலார் ஸ்மார்ட் மிக்ஸியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஆனால் வணிக ரீதியில் இதனை உற்பத்தி செய்து விற்பதற்கான காப்புரிமை பெற முடியாததால் துரதிஷ்டவசமாக அது தள்ளிப் போகிறது. எனினும், இந்த மிக்ஸியை ரூ.4,500 முதல் ரூ.5,000 என்கிற நியாயமான விலையில் எல்லோரிடத்திலும் கொண்டு சேர்க்க விரும்புகிறேன் என்கிறார் இவர்.”
எலக்ட்ரானிக்ஸ் மட்டுமின்றி எளிய முறையில் வகுத்தல், பெருக்கல் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொடுக்கும் இவரது வீடியோக்களும் சமூக வலைதளத்தில் செம வைரல். இந்த கிராமத்து விஞ்ஞானியை தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இந்த மின்னஞ்சலில் கருத்துகளை பதிவிடலாம் [email protected].
தகவல் உதவி: நன்றி தி பெட்டர் இந்தியா
6 லட்சம் மக்கள், 2 லட்சம் லிட்டர் சர்பத்; இலவச வாழைத்தண்டு சர்பத் வழங்கிய ‘வாழைவிஞ்ஞானி’முருகன்!