ரத்தத் தானம் செய்வதற்காக ரமலான் நோன்பை பாதியிலேயே கைவிட்ட நபர்!
அசாமின் தேமாஜி மாவட்டத்தில் வசிக்கும் பனவுல்லா அஹ்மத், ரத்தம் தேவைப்பட்ட நோயாளி ஒருவருக்கு ரத்ததானம் வழங்க தனது ரமலான் நோன்பை பாதியிலேயே கைவிட்டார்.
புனித ரமலான் மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் மாலை வரை நோன்பு இருப்பது வழக்கம். அசாமின் மங்கல்டாய் பகுதியில் வசிக்கும் 26 வயதான பனவுல்லா அஹ்மத் ரமலான் நோன்பைக் கடைப்பிடித்து வந்தார். ஆனால் திடீரென்று கௌஹாத்தியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு ரத்ததானம் செய்வதற்காக தனது நோன்பை பாதியிலேயே கைவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மே 8-ம் தேதி அஹ்மதின் நண்பர் மற்றும் சக ஊழியரான தபாஷ் பகவதிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நோயாளி ஒருவருக்கு ரத்தம் அவசரமாக தேவைப்படுவதாக அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டது. தபாஷ், அஹ்மத் இருவருமே ‘Team Humanity – Blood Donors and Social Activists in India’ என்கிற ஃபேஸ்புக் குழுவில் இணைந்துள்ளனர். தபாஷ் ’டைம் 8’ உடன் உரையாடுகையில்,
“தேமாஜியைச் சேர்ந்த நோயாளி ஒருவரின் உடம்பில் இருந்த கட்டியை நீக்குவதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் இவரைப் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. நான் ரத்த தானம் அளிக்கும் சிலரைத் தொடர்பு கொண்டேன். ஆனால் யாரும் அருகில் இல்லை. என் நண்பர் நோன்பு இருந்தாலும் ரத்தத் தானம் செய்ய முன்வந்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.
அந்த நோயாளி அசாமின் தேமாஜி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜன் கோகோய். அவருக்கு உடனடியாக ரத்தம் தேவைப்பட்டது. அவருக்கு ரத்தத் தானம் அளிக்க சரியான நபரை அவரது குடும்பத்தினரால் கண்டறிய முடியவில்லை. அத்தகைய சூழலில்தான் அஹ்மத் உதவியுள்ளார். அஹ்மத் ரத்த தானம் செய்வதற்கு முன்பு சிறிதளவு உணவும் தண்ணீரும் எடுத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக ’நியூஸ் 18’ தெரிவிக்கிறது.
அஹ்மத் தனது நோன்பை பாதியிலேயே கைவிட்டது குறித்து தெரிவிக்கையில்,
“நான் ரத்தத் தானம் வழங்கலாம் என்றும் அதனால் உடல்நலம் பாதிக்க வாய்ப்புள்ளதால் நோன்பு இருப்பது வீணாகிவிடும் என்றும் தெரிவித்தனர். அப்போதுதான் நோன்பை முடித்துக்கொண்டு ரத்ததானம் செய்ய தீர்மானித்தேன்,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அனைத்தையும்விட மனித உயிரும் மனித நேயமுமே முக்கியம். எனவே சற்றும் சிந்திக்காமல் ரத்தத் தானம் செய்ய தீர்மானித்தேன். நல்ல உடல்நிலையுடன் இருக்கும் அனைவரும் ரத்தத் தானம் செய்ய முன்வரவேண்டும். ரத்த தானம் செய்வதே கடவுளுக்குச் செய்யும் சிறந்த சேவை. அது ஒரு அற்புதமான உணர்வைத் தரும்,” என்றார்.
’டீம் ஹ்யூமானிட்டி’ குழு இந்தியா முழுவதும் இருந்து ரத்த தானத்திற்கான கோரிக்கையைப் பெறுகிறது. இந்தக் குழு ரத்த தானம் செய்பவர்களை விரைவாக ஏற்பாடு செய்து தருவதற்குப் பெயர் போன குழுவாகும்.
கட்டுரை : THINK CHANGE INDIA