FarmersFZ | ஐ.நா. திட்டத்தில் தேர்வாகி நாட்டுக்குப் பெருமை சேர்த்த கேரள அக்ரி-டெக் நிறுவனம்!

கேரளாவில் விவசாயிகளுக்கும், நகர்ப்புற நுகர்வோருக்கும் பாலமாகத் திகழும் இந்த நிறுவனம், ஐ.நா. திட்டத்தின் கீழ் உலகின் 12 ஸ்டார்ட்-அப்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

FarmersFZ | ஐ.நா. திட்டத்தில் தேர்வாகி நாட்டுக்குப் பெருமை சேர்த்த கேரள அக்ரி-டெக் நிறுவனம்!

Thursday June 15, 2023,

4 min Read

கேரளாவைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘ஃபார்மர்ஸ் ஃப்ரெஷ் ஜோன்’ (FarmersFZ), ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஏற்பாடு செய்த ஐக்கிய நாடுகளின் ‘ஆக்சிலரேட்டர் புரோக்ராம்’ (Accelerator Programme) என்ற திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளது.

ஐ.நா. அமைப்பினால் வணிகங்களை மேம்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகெங்கிலும் உள்ள 12 வேளாண் - உணவு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பட்டியலில் ‘ஃபார்மர்ஸ் FZ’ இடம் பெற்றுள்ளது. கொச்சியை தலைமையிடமாக் கொண்டு கேரள ஸ்டார்ட்-அப் மிஷன் (KSUM) கீழ் செயல்படும் இந்த நிறுவனம், ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘கேரள ஸ்டார்ட்-அப் மிஷன்’ என்பது மாநிலம் முழுவதும் தொழில்முனைவோரின் வளர்ச்சியையும், மேம்பாட்டையும் ஊக்குவிக்க கேரள அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

ஐ.நா.வின் ரோம் நிகழ்வில் பங்கேற்பு

அக்ரி-டெக் டி2சி ஸ்டார்ட்அப் நிறுவனமான FarmersFZ-ன் சி.இ.ஓ பி.எஸ்.பிரதீப் அடுத்த ஜூலை மாதம் ரோம் நகரில் நடக்கும் ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பல்வேறு நாடுகளுக்கும் பங்கேற்கும் ஐ.நா. திட்ட கூட்டத்தில் ‘ஃபார்மர்ஸ் ப்ரெஷ் ஜோன்’ நிறுவனத்தின் வர்த்தக ஸ்டார்ட்-அப் மாதிரியை பற்றி விவரிக்கப்படும் என்கிறார் பிரதீப்.

இந்த ‘ஐ.நா உணவு அமைப்புகள் சரக்கு நிலவரக் கணிப்பு உச்சி மாநாடு’ (UN Food Systems Summit Stocktaking Moment') ஜூலை 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வரை இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) வளாகத்தில் நடைபெறுகிறது.

“ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பொருளாதார நிலவரங்களைப் பொறுத்து இந்த வர்த்தக மாதிரியில் மாற்றங்கள் தேவைப்படும். இதற்கு நிதி ஆதாரம் அவசியம். ஐ.நா. வளர்ச்சித் திட்டம் மூலம் இந்த நிதி ஆதாரம் கிடைக்கும்” என்கிறார் பிரதீப்.

‘ஃபார்மர்ஸ் ஃப்ரெஷ் ஜோன்’ கிராமப்புற விவசாயிகளுக்கும் நகர்ப்புற நுகர்வோருக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கிறது. ஆரோக்கியமான, பிரீமியம் - தரமான வேளாண் விளைபொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லி இல்லாத காய்கறிகளை அறுவடை செய்த 24 மணி நேரத்துக்குள் வயல்களில் இருந்து சந்தைக்கு வழங்குகிறது. கேரளாவில் 3 லட்சத்திற்கும் அதிகமான நுகர்வோர் மற்றும் 2,000 விவசாயிகள் இதனால் பயனடைந்து வருகின்றனர்.

கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பிடெக் முடித்த பிறகு, இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் விவசாயத் துறையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளை ஆய்வு செய்தார். சிறு விவசாயிகளுக்கு சந்தையில் தங்கள் விளைபொருட்களுக்கு உத்தேசித்த விலை கிடைக்கவில்லை என்பது அவர் கண்டறிந்த சில பிரச்சினைகளில் பிரதானமாக இருந்துள்ளது. இது தொடர்பாக பிரதீப் கூறியது,

“சரியான விலையைப் பெற வேண்டியிருந்தாலும், வணிகர்களின் பின்னால் அவர்கள் செல்ல வேண்டியிருக்கிறது. விற்கப்பட்ட பொருட்களுக்கு ரசீது கூட கிடைப்பதில்லை,” என்று கூறும் பிரதீப், பிறகு விவசாயிகளிடம் நேரில் பேசி சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார். அதாவது, மார்க்கெட்டிங்கிற்கான இடம் இல்லை என்பதை அறிந்து கொண்டார்.

இதனையடுத்து, இ-காமர்ஸ் சாளரம் ஒன்றை திறப்பது பற்றிய சிந்தனை இவர் மனதில் தோன்றியது. பிறகு தொடர்ந்து இந்தத் துறை சார்ந்து கற்றுக்கொள்ளும் ஆர்வம் உந்தவே, கொச்சியிலிருந்த ‘ஃபிஞ்ஜெண்ட்’ (Fingent) என்ற நியூயார்க்கைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் வெப் டெவலப்பராக இணைந்தார்.

ஸ்டார்ட்-அப் உருவான கதை

நியூயார்க்கை தளமாகக் கொண்ட அந்த நிறுவனத்தில் அவர் பணியாற்றிய காலத்தில், ‘ஃபார்மர்ஸ் FZ' இணையதளத்தை உருவாக்கினார் பிரதீப். இந்த இணையதளம் தொடங்கிய 8 மாதங்களிலேயே 52 பேரை தனது ஸ்டார்ட்-அப்பில் இருந்து வாங்கும்படி அவரால் வெற்றிகரமாக திருப்திப்படுத்த முடிந்தது.

இந்த நம்பிக்கையை மனதில் கொண்டு, சொந்த ஊருக்குச் சென்று, எட்டு விவசாயிகளிடம் பேசி, அவர்களின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என உறுதியளித்தார். விவசாயிகள் வெண்டைக்காய், பாக்கு, புடலங்காய் உள்ளிட்ட 21 பயிர்களை பயிரிட்டனர்.

farmers fz

“ஆரம்பத்தில், எங்களது வேலை நேரத்திற்குப் பிறகு, கொச்சியில் உள்ள இன்போ பார்க்கில் உள்ள எங்கள் பணியிடத்திற்கு வெளியே நாங்கள் விற்பனை செய்தோம். அப்போதும், நாங்கள் ஆன்லைன் சாளரத்தின் மீது நம்பிக்கையுடன் இருந்தோம். நாங்கள் பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தோம். இது நடந்தது 2015-இல்.

”மேலும், எங்களை அதிகம் பேர் அணுக முடிந்தது. யுஎஸ்டி குளோபல் மற்றும் டிசிஎஸ் போன்ற நிறுவனங்களின் ஆதரவு எங்களுக்கு இருந்தது. நாங்கள் அவர்களுடன் இணைந்து ஒரு கார்ப்பரேட் மாதிரியை உருவாக்க விரும்பினோம். அவர்கள் தங்கள் அலுவலக வளாகத்தில் கடைகளை அமைக்க அனுமதித்தனர்" என்று நினைவுகூர்கிறார் பிரதீப்.

2016-ஆம் ஆண்டில், தலைமைச் செயல் அதிகாரி பிரதீப் தனது வேலையை விட்டுவிட்டு, ஃபார்மர்ஸ் FZ நிறுவனத்தில் முழுமையாக கவனம் செலுத்த முடிவு செய்தார். மூன்றே மாதங்களில் லாபம் ஈட்டத் தொடங்கியதாக பிரதீப் கூறுகிறார்.

நிறுவனம் வளர்ந்தது எப்படி?

இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமானது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதோடு, அவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், மகசூல் கணிப்பு மற்றும் லாபத்தைக் கணக்கிடுவதற்கான தொழில்நுட்ப அடிப்படையிலான தரவு உள்ளீடு மாதிரி (அல்காரிதம்) ஒன்றையும் உருவாக்கியுள்ளது.

இது, ஒவ்வொரு விவசாயிக்கும் நிலம், பயிர்கள் பற்றிய அனுபவத்தைப் பற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது.

“விவசாய தொழில்நுட்பங்களைப் புரிந்துகொள்ளவும், இயற்கை வேளாண் முறையைப் பின்பற்றுவதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கவும் வழிவகுத்தோம்,” என்கிறார் பிரதீப்.

“லாபகரமான விவசாயிகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம். தற்போது ஆண்டுக்கு 20,000 ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர். அதை 1.2 லட்ச ரூபாயாக உயர்த்துவதே எங்கள் நோக்கம். அடிப்படை விலை விவசாயிக்கு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் 10,000 ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும்” என்று தனது ஸ்டார்ட்-அப் தொடங்கப்பட்ட 2016-ல் பிரதீப் குறிப்பிட்டிருந்தார்.

pradeep

2018-ஆம் ஆண்டில், இந்திய ஏஞ்சல் நெட்வொர்க், மலபார் ஏஞ்சல்ஸ் மற்றும் நேட்டிவ்லீட் அறக்கட்டளை ஆகியவற்றில் இருந்து ரூ.2.5 கோடியை திரட்டியது பிரதீப்பின் நிறுவனம். இந்த முதலீட்டுச் சுற்றுக்கு நாகராஜ பிரகாசம் மற்றும் பி.கே.கோபாலகிருஷ்ணன், மலபார் ஏஞ்சல்ஸ் மற்றும் நேட்டிவ் லீட் ஆகியோர் தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விவசாயிகளும் நுகர்வோரும் பயன்பெற வழிவகுக்கும் இந்நிறுவனம் இப்போது ​​​​ஐ.நா.வின் ஸ்டார்ட்-அப் வளர்ச்சித் திட்டத்திற்கான உலகின் 12 ஸ்டார்ட்-அப்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, மேலும் வளர்ச்சியடைவதற்கும், செழிப்பதற்குமான ஸ்டார்ட்அப் பயணத்தில் மற்றொரு பெரிய படியாகும்.


Edited by Induja Raghunathan