கிரிக்கெட் ஸ்டார் ஆக மின்னும் கேரளப் பழங்குடியினப் பெண் - யார் இந்த மின்னு மணி?
வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கேரளாவைச் சேர்ந்த பட்டியல் பழங்குடியினரில் ஒன்றான குறிச்சியா பழங்குடியினத்தைச் சேர்ந்த மின்னு என்ற இளம் பெண் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கேரளாவைச் சேர்ந்த பட்டியல் பழங்குடியினரில் ஒன்றான குறிச்சியா பழங்குடியினத்தைச் சேர்ந்த மின்னு என்ற இளம் பெண் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய தேசிய அணியில் கேரள மாநிலத்தில் இருந்து விளையாடிய முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார் ’மின்னு மணி.’
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் தொடக்கப் பதிப்பில் மகளிர் பிரீமியர் லீக் உரிமையாளரான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மின்னு பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். அவர் ரூ.30 லட்சத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். இவர் ஒரு ஆல்-ரவுண்டர் மற்றும் வலது கை ஆஃப்ஸ்பின் பந்துவீச்சாளர். MI பெண்கள், GG பெண்கள் மற்றும் MI பெண்களுக்கு எதிராக WPL 2023 இல் DC பெண்களுக்காக மூன்று போட்டிகளில் விளையாடினார். உள்நாட்டு அரங்கில், மின்னு மணி தனது மாநில கேரள பெண்களுக்காக விளையாடுகிறார்.
யார் இந்த மின்னு மணி?
கேரளாவின் வயநாடு மாவட்டம் மானந்தவாடியில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி வந்த மின்னு மணி, நாளாக நாளாக அந்த விளையாட்டை நேசிக்க ஆரம்பித்தார். ஆனால், மின்னுவின் குடும்பத்திற்கு அவர் கிரிக்கெட் விளையாடுவது சுத்தமாக பிடிக்கவில்லை. ஏனெனில், அப்போது பெண் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவது பெரிதாக விருப்பப்படவில்லை.
மின்னுவின் குடும்பம் மிகவும் வறுமையானது. இவரது தந்தை மணி சி.கே. கூலித்தொழிலாளி, தாய் வசந்தா இல்லத்தரசியாக இருந்து வருகிறார். இதனால் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த மின்னுவின் குடும்பத்தினர், விளையாட்டில் கவனம் செலுத்தவிடவில்லை.
கிரிக்கெட் பயணம்:
மின்னுவின் கிரிக்கெட் கனவிற்கு அவரது, உடற்கல்வி ஆசிரியையான எல்சம்மா உயிர் கொடுத்தார். வயநாடு கிரிகெட் சங்கத்தின் பயிற்சியாளர் ஷானவாஸிடம் அறிமுகப்படுத்தினார். அதுவரை மாவட்ட அளவில் விளையாடி வந்த மின்னு, மாநில அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க ஆரம்பித்தார். அவரின் வளர்ச்சி அதோடு நின்றுவிடவில்லை. அங்கிருந்து தென் இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டார். இந்தப் போட்டிகள் அனைத்திலும் இவரது ஆல்-ரவுண்டர் திறமை வெளிப்பட்டது. அடுத்தது தான் அவரை உச்சானி கொம்பில் ஏற்றி வைத்தது.
மின்னு, தனது 16 வயதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சீனியர் கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். தனது கனவை மெய்ப்பிக்க போராடிக்கொண்டிருந்த மின்னுவின் வாழ்க்கையில் 2018ம் ஆண்டு சோதனைக்காலமாக அமைந்தது. அந்த ஆண்டு கேரளாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மின்னுவின் வீடு இடிந்து விழுந்தது.
இருப்பினும், மனம் தளாராமல் மின்னு தனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். அதே ஆண்டு U23 T20 கோப்பையில் கேரளாவுக்காக அதிக ரன் குவித்த வீராங்கனை என்ற பெருமை சேர்ந்தார். 7 இன்னிங்ஸ்களில் 188 ரன்கள் குவித்து, கேரளா U-23 இறுதிப் போட்டியில் மகாராஷ்டிராவை வீழ்த்தி பட்டத்தை வென்றது.
WPL இடம் பிடித்த மின்னு?
இந்தியாவில் ஆடவர்களுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போல, இந்த ஆண்டு மகளிருக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. ஆடவர் ஐபிஎல் தொடரில் உள்ள அணிகளும் இந்த மகளிர் ஐபிஎல் தொடரில் அணிகளை எடுத்துள்ளது. குஜராத் ஜெய்ன்ட்ஸ், UP வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மகளிருக்கான ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளது.
மகளிருக்கான முதல் பிரீமியர் லீக் தொடர் என்பதால் ஏலத்தின் போதே கடும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. இந்த ஏலத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேரளாவை சேர்ந்த மின்னு மணி எனும் வீராங்கனையை 30 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
“என்னுடைய மகிழ்ச்சியை விவரிக்க என்னிடத்தில் வார்த்தைகளே இல்லை. இவ்வளவு பெரிய தொகையை நான் பார்த்தது கூட கிடையாது. இந்த பணத்தை கொண்டு எனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்க வேண்டும் என நினைக்கிறேன். அதன்மூலம் நான் 4 பேருந்துகளை பிடித்து பயிற்சிக்கு சொல்லவேண்டியது இருக்காது. கூடுதல் நேரத்தை பயிற்சியில் செலவிட முடியும்,” எனத் தெரிவித்திருந்தார்.
பெண்கள் ப்ரீமியர் லீக்கில் மொத்தம் 3 போட்டிகளில் விளையாடிய மின்னு, இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்தார். மொத்தம் மூன்று ஓவர் மட்டுமே பவுலிங் செய்தார்.
டி20 போட்டியில் மின்னு மணி:
தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் குரிச்சியா இனத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணான மின்னு மணி, இந்திய மகளிர் அணிக்கு தேர்வாகியுள்ளார். சீனியர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் கேரள கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல்முறை.
டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் வலது கை ஆஃப் ஸ்பின்னர் மட்டுமல்ல, மின்னு சிறந்த பீல்டரும் கூட. இந்திய அணிக்கான ஆல்-ரவுண்டராக மின்னுவின் தேர்வு கேரளாவின் இளம் பெண் கிரிக்கெட் வீராங்கனைக்கு உத்வேகம் அளித்துள்ளது.