பிரதமர் மோடி தொடங்கி வைத்த 'ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்' - முழு விவரம் இதோ!
சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த உதவும் என நம்பிக்கை!
கடந்த சுதந்திர தின உரையின்போது, பிரதமர் மோடி தனது அறிவிப்பில் தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் குறித்து வெளியிட்டார். அதன்பெயர் 'ஆயூஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம்' என்று அறிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடி அறிவிப்புக்கு பிறகு சோதனை முயற்சியாக இந்தியாவின் 6 யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த வெற்றியால் இன்று இந்த இயக்கத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வைத்தார். பின்னர், பேசிய பிரதமர் மோடி,
“ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மருத்துவச் சிகிச்சை பெறுவதில் இருக்கும் தடைகளை களைய இந்த திட்டம் முக்கிய பங்காற்றும்," என்றார்.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் என்றால் என்ன?!
ஜன் தான், ஆதார் மற்றும் மொபைல் ஆகிய மூன்று டிஜிட்டல் தளங்களை இணைந்து மேலும் கூடுதலான சில டிஜிட்டல் சேவைகள் உடன் உருவாக்கப்பட்ட திட்டமே ’ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்’. இந்தத் திட்டம், பொதுமக்களின் சுகாதாரத் தரவுகளை அவர்களின் அனுமதியுடன் பயன்படுத்தி சுகாதார வசதிகளை மேம்படுத்துவதுடன், இந்தத் தகவல்களை இத்துறை அமைப்புகள் மத்தியில் பரிமாற்றம் செய்யவும் இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஒரு ’ஹெல்த் ஐடி’ (சுகாதார அடையாள அட்டை) உருவாக்கப்படும். இந்த ஹெல்த் ஐடி மக்களின் ஹெல்த் அக்கவுன்ட் ஆக இயங்கும். இந்த சுகாதார கணக்கில் ஒவ்வொரு நபரின் உடல்நலம் குறித்தத் தகவல்கள் சேமிக்கப்படும். இந்த திட்டத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள மொபைல் ஆப் மூலம் இந்த தகவல்களை சரிபார்த்து கொள்ள முடியும். மருத்துச் சேவை அளிக்கும் நிறுவனங்களும் இந்த தரவுகளை பயன்படுத்திகொள்ள முடியும்.
இப்படி செய்யும் கட்டமைப்புகளால் அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள், மருத்துவச் சேவை அளிக்கும் அமைப்புகளும் ஒன்றாக வர்த்தகம் செய்யப்படுவது மட்டுமல்லாமல் மருத்துவ நிறுவனங்களை எளிதாகக் கண்காணிப்பில் வைக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தில் தனியார் அமைப்புகளும் பங்குகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.