'நதி மீட்டெடுப்பு' - தமிழகப் பெண்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி பாராட்டு!
நாக நதியை மீட்டெடுத்த தமிழக பெண்கள்!
பிரதமர் மோடி, அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ளார். என்றாலும் அமெரிக்கா செல்வதற்கு முன்னதாகவே, இந்த மாதத்துக்கான மன் கி பாத் நிகழ்ச்சி ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு, நேற்று ஒளிபரப்பப்பட்டது. இதில், தமிழகப் பெண்கள் குறித்து பேசியிருந்தார்.
திருவண்ணாமலை அருகே ஒரு நதியை மீட்டெடுத்த பெண்கள் பத்தி தான் அவர் பேசியிருக்கிறார். தனது பேச்சில் பிரதமர்,
“நண்பர்களே, நாடெங்கிலும் உள்ள நதிகளுக்கு மீளுயிர்ப்பு அளிக்க, நதியின் தூய்மையின் பொருட்டு, அரசும் சமூகசேவை அமைப்புக்களும் தொடர்ந்து ஏதோ ஒன்றைச் செய்து வருகின்றன. இன்று தொடங்கி அல்ல, பல பத்தாண்டுகளாகவே இதைச் செய்து வருகின்றனர். சிலர் இவை போன்ற பணிகளுக்காக தங்களையே அர்ப்பணம் செய்திருக்கிறார்கள். இதே பாரம்பரியம், இதே முயற்சி, இதே நம்பிக்கை தாம் நமது நதிகளைக் காத்தளித்திருக்கின்றன.”
இந்தியாவின் எந்த ஒரு மூலையிலிருந்தும் இப்படிப்பட்ட பணிகளை ஆற்றுவோர் பற்றிய செய்திகள் கிடைக்கப் பெறும் வேளையில், அவர்கள் மீது ஒரு மிகப் பெரிய மரியாதையுணர்வு மனதில் தோன்றுகிறது; இவை பற்றி உங்களோடு கலந்து கொள்ள வேண்டும் என்று என் மனம் அவாவுகிறது.
தமிழ்நாட்டின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் எடுத்துக்காட்டுக்களை நான் அளிக்கிறேன். இங்கே இருக்கும் ஒரு நதியின் பெயர் நாகநதி. இந்த ஆறு பல ஆண்டுகளுக்கு முன்பே வறண்டு விட்டது.
இதன் காரணமாக இந்த நிலப்பரப்பில் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது. ஆனால், இங்கே இருக்கும் பெண்கள் இந்தச் சவாலை சிரமத்துடன் எடுத்துக்கொண்டு, இந்த நதிக்கு மீளுயிர்ப்பளித்தார்கள். இவர்கள் மக்களை இணைத்தார்கள், மக்கள் பங்களிப்பு வாயிலாக கால்வாய்களைத் தோண்டினார்கள், தடுப்பணைகளை உருவாக்கினார்கள், மறுசெறிவுக் குளங்களை வெட்டினார்கள். இந்த நதி இன்று நீர் நிரம்பி இருக்கிறது என்பதை அறிந்து உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் நண்பர்களே.
நதியில் நீர் நிரம்பி இருக்கும் காட்சி மனதிற்கு ஒரு அமைதியை ஏற்படுத்துகிறது, இதை நானே கூட அனுபவித்திருக்கிறேன்.
எந்த சபர்மதி நதிக்கரையில் காந்தியடிகள் சபர்மதி ஆசிரமத்தை அமைத்தாரோ, அங்கே சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே சபர்மதி ஆறு வறண்டு விட்டது. ஆண்டில் 6-7 மாதங்கள் வரை கண்ணுக்கு நீரே தட்டுப்படாது. ஆனால் நர்மதையாறும், சாபர்மதி ஆறும் இணைக்கப்பட்ட பிறகு, இன்று நீங்கள் அஹ்மதாபாத் சென்றால், சபர்மதி ஆற்றில் நீரைக் கண்டு உங்கள் மனம் மலரும். தமிழ்நாட்டின் நமது சகோதரிகள் புரிந்துள்ள இதே போன்ற பல பணிகள் நாட்டின் பல்வேறு பாகங்களில் நடந்து வருகின்றன.
நம்முடைய மதப் பாரம்பரியங்களோடு இணைந்த பல புனிதர்கள், குருமார்கள் உள்ளார்கள், அவர்களும் தங்களுடைய ஆன்மீகப் பயணத்தோடு கூடவே, நீருக்காக, நதிகளுக்காக, பல நதிக்கரைகளில் மரங்களை நடும் இயக்கம் போன்ற பல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள் என்பதை நான் அறிவேன். இதனால் நதிகளில் பெருகும் மாசுபட்ட நீர் தடுக்கப்படும்.
நண்பர்களே, உலக ஆறுகள் தினத்தை நாம் கொண்டாடும் வேளையில், இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும், வாழ்த்த வேண்டும். ஆனால் ஒவ்வொரு நதியோரமும் வசிப்போரிடத்திலும், நாட்டுமக்களிடத்திலும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், பாரதத்திலே, அனைத்து பாகங்களிலும் ஆண்டுக்கொரு முறையாவது நதித்திருவிழாவைக் கொண்டாட வேண்டும் என்பது தான்," என்றுள்ளார்.