டீச்சராக பணிபுரியும் தோனியின் அக்கா - ‘தல’யை ஆளாக்கிய புகழ் வெளிச்சம் விரும்பாத மனசு!
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த தோனியை ஆளாக்க உறுதுணையாக இருந்த அவரது அக்கா ஜெயந்தி குப்தா புகழ் வெளிச்சம் விரும்பாமல் ஓர் ஆசிரியராக வலம் வருகிறார்.
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனிக்கு ஓர் ஆரோக்கியமான குடும்பப் பின்னணி உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தோனியின் வளர்ச்சியின் பின்னணியில் அவரது அக்கா ஜெயந்தி குப்தா இருப்பது பலரும் அறியாததே.
ஆம்! கிரிக்கெட் உலகில், உலக கிரிக்கெட்டில் பிரபலமான தல என்றும், எம்.எஸ். என்றும், எம்.எஸ்.டி என்றும் பலவிதமாக செல்லமாக அழைக்கப்படும் தோனி ஓய்வு பெற்றபோதிலும், டீம் இந்தியாவின் கேப்டனாக இருந்த காலம் இன்றும் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலமாகப் பாராட்டப்படுகிறது.
ஏனெனில், 2007, 2011 டி20, 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை இருப்பினும், அவரது வெற்றியில் அவரது மூத்த சகோதரி ஜெயந்தி குப்தா ஆற்றிய பங்கு தோனியின் நெருங்கிய சுற்றத்தார் தவிர மற்ற் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஐபிஎல் தவிர அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி, தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து ஆண்டுக்கு சுமார் ரூ.50 கோடி சம்பாதிக்கிறார்.
தம்பிக்கு உறுதுணையாக அக்கா!
தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பு, அவரது குடும்பம் நடுத்தர வர்க்க பின்னணியைச் சேர்ந்தது. ஏனெனில், அவரது தந்தை நடுத்தர அளவிலான அரசாங்க ஊழியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியின் அக்கா ஜெயந்தி குப்தாயின் சரியான வயது தெரியவில்லை என்றாலும், மகேந்திர சிங் தோனியை விட அவர் 3-4 வயது மூத்தவர் என்று நம்பப்படுகிறது.
ஜெயந்தி குப்தா தனது தம்பி மீது அளவுக்கதிகமான பாசம் கொண்ட நிலையில், தோனி ஒரு கிரிக்கெட் வீரராகவும், தனது நாட்டுக்காக விளையாடவும் விருப்பம் தெரிவித்தபோத, அவருக்கு அளவிட முடியாத ஆதரவைக் காட்டினார். எம்.எஸ்.தோனியின் கிரிக்கெட் மீதான ஆர்வத்தைத் தொடர அவரை ஊக்குவித்தார். தோனி ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற எண்ணத்தை தோனியின் தந்தை அவ்வளவாக விரும்பவில்லை. ஆனால், அக்கா ஜெயந்தி குப்தாதான் தோனியின் இந்த ஆசைக்கு ஆதரவாக நின்றார்.
புகழ் வெளிச்சம் விரும்பாதவர்
ஜெயந்தி குப்தாவின் சிறப்பு குணாம்சம் என்னவெனில், தோனியின் புகழ் வெளிச்சத்தில் இவர் அண்ட விரும்பவில்லை. தோனி உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்தும், ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருந்தாலும், ஜெயந்தி குப்தாவோ தோனி குறித்த ஊடக வெளிச்சங்களிலிருந்து விலகி இருக்க முயற்சித்தார். மேலும், ராஞ்சியில் தொடர்ந்து ஒரு சாதாரண வேலையிலும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியின் அக்கா தற்போது ராஞ்சியில் உள்ள ஒரு பொதுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார் என்று பல ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெயந்தி குப்தா ராஞ்சியைச் சேர்ந்த தோனியின் நீண்ட நாள் நண்பர்களில் ஒருவரான கௌதம் குப்தாவை மணம் புரிந்துகொண்டார். எம்.எஸ். தோனியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் கெளதம் குப்தா. தோனி மாநில மற்றும் மாவட்ட வீரராக இருந்த நாட்களில் அவருக்கு உதவியவர்தான் கெளதம் குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக நம் உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் புகழின் உச்சத்தில் ஊடக வெளிச்சத்தில் இருக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளவே பார்ப்போம். ஆனால், தோனியின் அக்கா, தோனியின் புகழ் வெளிச்சத்தில் ஒண்ட விரும்பாமல் தன்னிச்சையாக செயல்படும் ஓர் அதிசயப் பெண் என்றால் மிகையல்ல.
தோனி முதல் நடராஜன் வரை - ஏழ்மையை வென்று கோபுரம் அடைந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
Edited by Induja Raghunathan