தோனி முதல் நடராஜன் வரை - ஏழ்மையை வென்று கோபுரம் அடைந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
இளமைப் பருவத்தில் ஏழ்மைக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் கிரிக்கெட்டில் தீவிரம் காட்டி வெற்றி பெற்ற தோனி, ஜடேஜா, பாண்டியா பிரதர்ஸ், ரோஹித் சர்மா, சிராஜ் முதலானோரின் சுருக்கமான கதைகள்.
இளமைப் பருவத்தில் ஏழ்மைக்கு மத்தியில், தங்களது விடாமுயற்சியாலும் திறமையாலும் கிரிக்கெட்டில் தீவிரம் காட்டி வெற்றி பெற்ற தோனி, ஜடேஜா, ரோஹித் சர்மா, சிராஜ், நடராஜன், பாண்டியா சகோதரர்கள், பதான் சகோதரர்கள், முனாஃப் படேல் முதலானோரின் சுருக்கமான வெற்றிக் கதைகள் இவை:
டிக்கெட் பரிசோதகர் தோனி
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்த தோனி பள்ளிக் காலத்தில் பாட்மின்டனும், கால்பந்தும் விளையாடினார். இவரது பயிற்சியாளர்தான் உள்ளூர் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக தோனியைக் களம் இறக்கினார். அந்தச் சுட்டிப் பையன் தோனிக்கு புரதச் சத்துக்கு இறைச்சி வாங்கக் கூட காசு இல்லை. அதனால், புரதத்துக்காக லிட்டர் கணக்கில் பால் குடித்தார்.
கிரிக்கெட்டில் நுழைந்த நேரத்தில் குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய பொறுப்பு வந்ததால், கோரக்பூர் ரயில் நிலையத்தில் 21 வயதில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார்.
அதன்பின் தன் தனித்துவ திறமையால் கிடைத்த வாய்ப்புகளை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு, இந்திய அணியில் இடம்பெற்றது, பின்னாளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியது, நாட்டுக்கு உலகக் கோப்பையை வென்று தந்தது, கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியது, ஐபிஎல் மூலம் கோப்பைகளையும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் வசப்படுத்தியது எல்லாம் அனைவரும் அறிந்த வரலாறு.
ஏழ்மை சூழ்ந்த சாமானிய குடும்பத்தில் இருந்து எவராலும் சரித்திர சாதனைகளை நிகழ்த்த முடியும் என்ற வாழும் உத்வேக நாயகனாகத் திகழ்கிறார் மகேந்திர சிங் தோனி.
வாட்ச்மேன் மகன் ரவீந்திர ஜடேஜா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் சரி, இந்திய கிரிக்கெட் அணியிலும் சரி, தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் ரவீந்திர ஜடேஜாவும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்து சாதித்தவர்தான்.
குஜராத்தில் அன்று ஜடேஜாவின் குடும்பத்தினர் ஒற்றைப் படுக்கையறை கொண்ட வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஜடேஜாவின் அம்மா லதா அரசு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்தார். அந்தக் காலத்தில் அவரது சம்பாத்தியத்தில் வீடு இயங்குவதை பலரும் வியப்பாக பார்த்தனர். ரவீந்திர ஜடேஜாவின் அப்பா அனிருத் ஜடேஜா சரியான வேலை இல்லாமல் வாட்ச்மேன் உள்ளிட்ட சின்னச் சின்ன வேலைகளை செய்து குறைந்த வருமானத்தை மட்டுமே ஈட்டினார்.
ரவீந்திர ஜடேஜா தனது 17 வயதில் தாயை இழந்தார். அவரை தன் தோளில் சுமந்து அன்புடன் வளர்த்தவர் அவருடைய சகோதரி. தன் தாயின் நர்ஸ் பணியில் வேலை செய்துகொண்டே குடும்பச் சுமையை தன் தோளில் சுமந்துகொண்டு தம்பியையும் கவனித்துக்கொண்டார்.
பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஜடேஜாவுக்கு 10 வயதிருந்த போதே விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்தார். கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய அவர், பல நெருக்கடிகளை எதிர்கொண்டு சாதனைப் பாதையில் பயணிக்கத் தொடங்கியவர். தன் அக்காவின் அன்புக்கும் அரவணைப்புக்கும் தன் வெற்றிகளை காணிக்கையாக வழங்கி வரும் ஜடேஜா, இன்று எட்டியுள்ள நிலைமை என்பது கிரிக்கெட் அறிந்த யாவருக்கும் தெரிந்ததே. அவரது பயணமும் நம் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் தரவல்லதே.
ஆட்டோ டிரைவர் மகன் சிராஜ்
2021ல் ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி, அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டது. அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக சிராஜும் சென்றார்.
அவர் அங்கு இருக்கும்போதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் வந்து சேர்ந்தது. தனது தந்தை முகமது கவுஸ் நுரையீரல் நோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதே அந்த அதிர்ச்சித் தகவல். சிராஜால் தனது அன்புத் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தியா வர முடியாத நிலை. அப்போது சிராஜ் பகிர்ந்து உருக்கமான செய்தி:
“என் மகனே நீ என் நாட்டை பெருமைப்படுத்த வேண்டும் என்று என் தந்தை கூறுவார். நான் என் வாழ்க்கையில் மிகப் பெரிய ஆதரவை இழந்துவிட்டேன். என் அப்பாவின் ஆசையை நான் நிறைவேற்றுவேன். எனது ஆரம்ப காலக்கட்டத்தில் அப்பா என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை நானறிவேன். நான் நாட்டிற்காக விளையாடுவதை பார்ப்பது அவருக்கு கனவாக இருந்தது,” என்றார் சிராஜ்.
ஆட்டோ டிரைவராக இருந்து பெரும்பாடுபட்டு தன் மகனை கிரிக்கெட் வீரராக உருவாக்கிய தந்தைக்கு அவரது கனவான நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய வீரராகத் திகழும் சிராஜ் கடந்து வந்த பாதை எளிய பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் என்றென்றும் ஊக்கம் தரும் கதை!
பால் பாக்கெட் போட்ட ரோஹித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியை இப்போது வழிநடத்தும் ரோஹித் சர்மாவும் எளிய பின்புலத்தில் இருந்து வந்தவர்தான். நாக்பூரில் பிறந்து வளர்ந்தவர். அம்மா பூர்ணிமா விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். அப்பா குருனாத் சர்மா மிகக் குறைந்த வருமானம் ஈட்டி குடும்பத்தை நடத்தி வந்தார். இதனால், தனது பாட்டி, மாமாவுடன் வசித்தார் ரோஹித் சர்மா.
விடுமுறைகளில் மட்டும் ஒற்றை அரை கொண்ட தன் வீட்டுக்குச் செல்வார். கிரிக்கெட் மட்டையை ஏழ்மையை விரட்டும் ஆயுதமாக்கினார். இதோ இன்று ஹிட்டராக இந்திய அணியை வழிநடத்தும் தலைவராகவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனைக் கேப்டனாகவும் திகழ்கிறார்.
தன் இளமைக் காலத்தில் தன் செலவுக்கும், கிரிக்கெட் கிட் வாங்கவும் பால் பாக்கெட் போட்டு பணம் சேர்த்திருக்கிறார் ரோஹித் சர்மா. இதனை, கிரிக்கெட் வீரர் பிராக்யன் ஓஜா சமீபத்தில் பகிர்ந்தார். அந்த விவரம்:
“ரோகித் சர்மா ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது ஆரம்ப காலம் பற்றி என்னிடம் அவர் பலமுறை உணர்ச்சிவசப்பட்டு பகிர்ந்திருக்கிறார். குடும்பத்தில் இருந்து ஓரளவுதான் உதவி கிட்டியதால், மற்ற செலவுகளுக்கும், கிரிக்கெட் கிட் வாங்குவதற்கும் ரோஹித் சர்மா பால் பாக்கெட்டுகளை விநியோகிக்கும் பணியைச் செய்திருக்கிறார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு கிரிக்கெட் செலவுகளை ஓரளவு சமாளித்தார். இன்று அவர் எட்டிய நிலையைக் கண்டு பெருமையாக இருக்கிறது.”
ஓஜாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் ரோஹித் சர்மாவால் பெருமிதத்துடன் உத்வேகம் கிட்டுவது உறுதி.
‘சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்’ நடராஜன்
தமிழக மக்களால் வெகுவாகக் கொண்டாடப்படும் வீரர்களில் ஒருவர்தான் நடராஜன். ‘சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்’ என வர்ணிக்கப்படும் இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. சேலத்திலில் இருந்து 36 கி.மீ தொலைவியில் உள்ள சின்னப்பம்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். 3 சகோதரிகள், ஒரு தம்பி. இவர்தான் பெரிய பிள்ளை. அப்பாவுக்கு நெசவுத் தொழில். அம்மா தெருவோரத்தில் சிக்கன் கடை வைத்திருந்தவர்.
அரசுப் பள்ளியில் பயின்றவர். நோட்டுப் புத்தகங்கள் கூட வாங்க முடியாத அளவுக்கு வறுமை. இதில் இருந்து மீள உறுதுணைபுரிந்தது கிரிக்கெட். உறவினர்களின் துணையுடன் கிரிக்கெட் கரியரில் முன்னேறியவர். இந்திய அணியில் இடம்பிடித்த பிறகு அறுவை சிகிச்சை, காயத்தால் பின்னடவை சந்தித்தார்.
அவற்றில் இருந்து மீண்டு கடந்த சில சீசன்களாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூலம் கம்பேக் கொடுத்து வருகிறார். தன்னைப் போல் எளிய பின்னணி கொண்ட திறமையான இளைஞர்களை கிரிக்கெட்டில் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தும் விதமாக பல முன்னெடுப்புகளையும் செய்து வரும் நடராஜன் தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் சான்றாகத் திகழ்கிறார்.
5 ரூபாய் நூடுல்ஸ் சாப்பிட்டு வளர்ந்த பாண்டியா பிரதர்ஸ்
இந்திய கிரிக்கெட் உலகில் இன்று அசைக்க முடியாத நம்பிக்கைகளாக வலம் வரும் ஹர்திக் பாண்டியா - க்ருணால் பாண்டியா சகோதரர்களும் இளம் வயதில் வறுமையில் வாடியவர்கள்தான். குஜராத்தின் சூரத்தில் பிறந்தவர்கள். ஒரு சிறிய கார் ஃபைனான்ஸ் பிசினஸ் செய்து வந்த பாண்டியாவின் அப்பா தன் மகன்களுக்கு நல்ல கிரிக்கெட் கோச்சிங் கிடைப்பதற்காக தன் நிறுவனத்தை மூடிவிட்டு வதோதராவுக்கு இடம்பெயர்ந்தார்.
ஒரு லோன் ஏஜெண்ட்டாக வேலை செய்துகொண்டு இரு பிள்ளைகளையும் கரை சேர்த்தார். சிறு வயதில் வெறும் 5 ரூபாய் நூடுல்ஸ் மட்டுமே முழுநாள் உணவாக இருந்த காலத்தையும் பாண்டியா சகோதர்கள் கடந்தனர். அப்பாவின் உறுதுணையாலும், தங்களது திறமையாலும் இன்று கிரிக்கெட்டில் நல்ல இடத்தை அடைந்துள்ளனர்.
ஏழை விவசாயி மகன் முனாஃப் படேல்
குஜராத்தில் உள்ள குக்கிராமத்தில் பிறந்தவர் முனாஃப் படேல். அப்பா ஏழை விவசாயி. குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து மகனை பெரிய ஆளாக்கியவர். பள்ளிப் பருவத்தில் கிரிக்கெட் மீது தீரா ஆர்வம் கொண்ட முனாஃப் படேல், விடுமுறை நாட்களில் ஒரு டைல்ஸ் ஆலையில் ரூ.35-க்கு தினக்கூலி வேலை செய்தவர்.
யூசுஃப் பாய் என்பவர்தான் முனாஃபின் திறமையை அறிந்து, அவரை புரொஃபஷன்ல் கிரிக்கெட் ஆவதற்கு உறுதுணை புரிந்திருக்கிறார். எந்தக் கிராமத்தில் ஏழ்மையில் தன் குடும்பம் தவித்ததோ அதே கிராமத்தில் பெரிய வீடு ஒன்றை கட்டி தன் கனவை நனவாக்கிய முனாஃப் படேலும் நம் வாழ்க்கையில் சிறந்த முன்னுதாரணம்.
250 ரூபாய் சம்பள வேலை செய்த பதான் சகோதர்கள்
இந்திய கிரிக்கெட்டில் இர்ஃபான் பதான், யூசுஃப் பதான் பங்களிப்பு குறித்து சொல்லவே வேண்டாம். குறிப்பாக, கபில் தேவுக்கு அடுத்து வேகப் பந்துவீச்சில் புகழ்பெற்றவர் இர்ஃபான் பதான். குஜராத்தின் வதோதராவில் மாஸ்க் ஒன்றில் இவர்களது தந்தை பணிபுரிந்து வந்தார். குடும்பம் மிகவும் ஏழ்மையில் கஷ்டப்பட்டது.
எனினும், பதான் சகோதரர்கள் தங்கள் கிரிக்கெட் கனவை நோக்கி நகர முடிந்தது. இளம் வயதில் சைக்கிள், கிரிக்கெட் உபகரணங்களை பகிர்ந்து கொண்டு பயிற்சிகளில் ஈடுபட்டனர். ஆரம்ப காலத்தில் ரூ.250-க்கு வேலைகளை செய்தனர். தீவிர முயற்சிகளின் பலனாகவே இருவருமே கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க இடத்தை அடைந்தனர்.
ஏழ்மையை வென்ற கிரிக்கெட் ஹீரோ - 5 பந்துகளில் 5 சிக்சர்கள் பறக்கவிட்ட ரிங்கு சிங்-ன் இன்ஸ்பிரேஷன் கதை!
Edited by Induja Raghunathan