நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகமாகும் 26 மசோதாக்கள்: முழு விவரம்!
வேளாண் சட்ட ரத்து முதல் குடியேற்ற மசோதா வரை!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான சூழலுக்கிடையே தொடங்கும் இந்த கூட்டத் தொடரில், மொத்தம் 26 முக்கிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
டிசம்பர் 23 ஆம் தேதி முடிவடைய உள்ள குளிர்காலக் கூட்டத்தொடரின் போது விவாதத்திற்கு வரும் மசோதாக்கள் முழு விவரங்கள் இதோ.
1) வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா, 2021: சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்கள் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்த, ஒரு வருடமாக தலைநகர் டெல்லியின் எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் திரண்டு போராடினர். இந்த போராட்டத்துக்கு பணிந்து பிரதமர் மோடி கடந்த 19ம் தேதி வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.
தேர்தல் நடைபெறும் பஞ்சாப் மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கோபத்தை உணர்ந்து, விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற அரசாங்கம் முடிவு செய்து இன்றே இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2) கிரிப்டோகரன்சி மசோதா : தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடைசெய்யும் மசோதா இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி மசோதா கடந்த பிப்ரவரி கூட்டத் தொடரிலேயே, அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
3) மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (திருத்தம்) மசோதா, 2021: மத்திய விஜிலென்ஸ் கமிஷன் சட்டம், 2003-ஐ திருத்துகிறது இந்த மசோதா. இது ஊழல் தடுப்பு நடவடிக்கையின் கீழ் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு அனுமதி வழங்குகிறது. இந்த மாதத் தொடக்கத்தில், மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) சட்டம், 2003ல் திருத்தம் செய்வதற்கான அவசரச் சட்டத்தை அரசு கொண்டு வந்தது. மேலும், அமலாக்கத்துறை இயக்குநரின் நியமனம் மற்றும் பதவிக்காலம் ஆகியவற்றைக் நீடிக்கவும் இந்த மசோதா உதவும்.
4) டெல்லி சிறப்புக் காவல் (திருத்தம்) மசோதா, 2021: விஜிலென்ஸ் கமிஷன் சட்டம், 2003 உடன், அரசாங்கம் மற்றொரு அரசாணையை கொண்டு வந்தது. அது தான் டெல்லி சிறப்பு காவல் ஸ்தாபன (DSPE) சட்டம், 1946. DSPE சட்டம் நியமனம் மற்றும் சிபிஐ இயக்குநர் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு இந்த மசோதா உதவும்.
5) போதை மருந்துகள் மற்றும் மனநோய் மருந்துகள் (திருத்தம்) மசோதா, 2021: செப்டம்பரில் வெளியிடப்பட்ட அவசரச் சட்டத்திற்கு பதிலாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இது வரைவு பிழையை சரிசெய்ய போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம், 1985 ஐ திருத்த முயல்கிறது.
6) அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (திருத்தம்) மசோதா, 2021: உத்தரபிரதேச தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள நிலையில், அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (திருத்த மசோதா) திருத்தும் மசோதா மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
7) அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை (திருத்தம்) மசோதா, 2021: இது திரிபுரா மாநிலத்தில் உள்ள பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினரை திருத்துவதற்கான மசோதா ஆகும்.
8) ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (திருத்தம்) மசோதா, 2021: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் (PFRDA) இருந்து தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளையை பிரிப்பது தொடர்பான பட்ஜெட் 2019 அறிவிப்பை இந்த மசோதா நிறைவேற்றும்.
9) மெட்ரோ ரயில் (கட்டுமானம், செயல்பாடு மற்றும் பராமரிப்பு) மசோதா, 2021: மெட்ரோ இரயில்வே (செயல்பாடு மற்றும் பராமரிப்பு) சட்டம், 2002 மற்றும் மெட்ரோ இரயில்வே (வேலைகள் கட்டுமானம்) சட்டம், 1978 ஆகியவற்றை மாற்றியமைத்து, சட்டப்பூர்வ உரிமை வழங்குவதற்கு இந்த மசோதா திட்டமிடப்பட்டுள்ளது.
10) உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2021: இந்த மசோதா உயர் நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டம், 1954 மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் நிபந்தனைகள்) ஆகியவற்றை மாற்றியமைக்கும்.
11) எரிசக்தி பாதுகாப்பு (திருத்தம்) மசோதா, 2021: இந்தியாவின் பாரிஸ் உடன்படிக்கையை பூர்த்தி செய்வதற்கும், தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDCs) சரியான நேரத்தில் முழுமையாக செயல்படுத்துவதற்கும் மேம்படுத்தப்பட்ட புதிய மற்றும் கூடுதல் நிதி, தொழில்நுட்ப மற்றும் திறன்-வளர்ப்பு ஆதரவை வழங்குவதற்காக இந்த திருத்த மசோதா கொண்டுவரப்படவுள்ளது.
இது போக மேலும் பல மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. அவை:
12) குடியேற்ற மசோதா, 2021
13) கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா, 2021
14) தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு மசோதா, 2021
15) இந்திய கடல்சார் மீன்பிடி மசோதா, 2021
16) தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, 2021
17) உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா, 2020
18) தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (திருத்தம்) மசோதா, 2021
19) வங்கி கடன் மற்றும் திவால் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2021
20) கண்டோன்மென்ட் (ராணுவம்) மசோதா, 2021
21) வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2021
22) தேசிய நர்சிங் மருத்துவச்சி ஆணைய மசோதா, 2021
23) மின்சாரம் (திருத்தம்) மசோதா, 2021
24) தேசிய போக்குவரத்து பல்கலைக்கழக மசோதா, 2021
25) மத்தியஸ்த மசோதா, 2021 (The Mediation Bill, 2021)
26) பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் (திருத்தம்) மசோதா, 2019.