கொல்கத்தாவின் புதிய அடையாளம் - ‘இந்தியாவின் முதல் சோலார் டோம்’
இந்தியாவிலேயே முதன் முறையாக சோலார் டோம் கொல்கத்தாவின் சிலிக்கான் வேலியான நியூ டவுனில் உள்ள எக்கோ பார்க்கில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன் முறையாக 'சோலார் டோம்' கொல்கத்தாவின் சிலிக்கான் வேலியான நியூ டவுனில் உள்ள எக்கோ பார்க்கில் அமைக்கப்பட்டுள்ளது.
2010ல் தொடங்கப்பட்ட இந்தியாவின் தேசிய சோலார் மிஷன் கீழ் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 20GW ஆற்றலை உற்பத்தி செய்யும் இலக்கை இந்தியா கொண்டிருந்தது.
மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ளன. சூரிய சக்தி உற்பத்தியில் இந்தியா ஆசியாவில் மூன்றாவது இடத்திலும், உலகில் நான்காவது இடத்திலும் உள்ளது.
20GW என்ற ஆரம்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு நீண்ட காலத்திற்கு முன்பே கடந்துவிட்டது. 2022ஆம் ஆண்டுக்குள் 100GW சூரிய சக்தியைப் பயன்படுத்த இந்திய அரசு புதிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
தற்போது கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள சோலார் டோம் இந்தியாவில் சூரிய ஆற்றல் பட்டியலில் மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. மின் பயன்பாட்டை குறைத்தல், மறு சூழற்சி மற்றும் சூரிய சக்தியின் முக்கியத்துவத்தை சாமானிய மக்களுக்கு உணர்த்தும் விதமாக சோலார் டோம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவின் புதிய அடையாளம்:
ஹவுரா பாலம், புதிய மார்க்கெட், பார்க் ஸ்ட்ரீட், சவுத் பார்க் கல்லறை மற்றும் பழைய சைனாடவுன் ஆகியவற்றுடன் நியூ டவுனில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சோலார் டோம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சோலார் டோமை மேற்கு வங்க வீட்டுவசதி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் மற்றும் மேற்கு வங்க மாநில மின்சார விநியோக நிறுவனம் ஆகியவை கூட்டாக செயல்படுத்தி வருகின்றன.
இந்த சோலார் டோம் 28.950 மீட்டர் உயரமும் 45 மீட்டர் விட்டமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட வரும் பார்வையாளர்கள் எவ்வித கட்டணமும் இன்றி சோலார் டோமை பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது முதற்கட்டமாக தரைத்தளம் மட்டுமே பார்வையாளர்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த குவி மாடம் 2.89 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. கேட் எண் 4 வழியாக சோலார் டோமை சீக்கிரமாக அடைய வழி செய்யப்பட்டுள்ளது.
சோலார் டோம் சிறப்பம்சங்கள்:
- சோலார் டோமில் 2000 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. 150Wp மற்றும் 260Wp என இரண்டு விதமான சோலார் பேனல் பொருத்தப்பட்டு, அதன் மூலமாக தொடர்ச்சியாக சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. தூரத்தில் இருந்து பார்த்தால் கண்ணாடி மளிகை போல் காட்சியளிக்கிறது.
- சோலார் டோம் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையும் பட்சத்தில் 180 கிலோ வாட் அளவிலான மின் உற்பத்தி செய்யப்படும் என்றும், இது சோலார் டோமின் உட்பகுதியில் உள்ள விளக்குகள், மின்விசிறிகள், கணினிகள், தொலைக்காட்சிகள், லிஃப்ட்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள தெருவிளக்குகளுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சோலார் டோமின் மேற்புறத்தில் சுழல் வடிவிலான பாதை அமைக்கப்படும். அதன் மீது இருந்து பார்க்கும் போது 3டி காட்சியில் எக்கோ பார்க்கை கண்டுரசிக்க வழிவகை செய்யப்பட்ட உள்ளது.
- ஆன்லைன் யுகத்தில் எங்கு என்றாலும் செல்ஃபி எடுக்க விரும்புவோர் அதிகமாக உள்ளனர். எனவே, சோலார் பேனல்களை வெளியே இருந்து செல்ஃபி எடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
- மேலும், சோலார் டோமுக்குள் கோளரங்கம், கடல் மீன் கூடம், கேலரி ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
- இந்தியாவிலேயே முதன் முறையாக கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சோலார் டோமின் திட்ட மதிப்பீடு சுமார் 30 கோடி ரூபாய் ஆகும்.
- தற்போது பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ள இந்த சோலார் டோமின் கீழ் பகுதி முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது.
- சோலார் டோமின் தரைத்தளத்தில் அலை ஆற்றல், புவிவெப்ப ஆற்றல், காற்றாலை ஆற்றல் மற்றும் சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட பல பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயரும் கடல் மட்டம், புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் மற்றும் அவை பூமியை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றிய தகவல்களும் அதில் இடம் பெற்றுள்ளது.
தண்ணீர், உணவு, எரிவாயு என தன் வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் தானே உருவாக்கும் 'சோலார்’ சுரேஷ்!