இறந்த மகன் நினைவாக 61 பேர் கேரளா திரும்ப விமானச் செலவுகளை ஏற்ற கிருஷ்ணகுமார்!
கிருஷ்ணகுமாரின் மகன் கடந்த ஆண்டு விபத்து ஒன்றில் உயிரிழந்ததால் அவரது நினைவாக இந்த உதவியை செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் படிப்பவர்களும் பணிபுரிபவர்களும் தங்களது சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். இவர்களை சொந்த ஊர் அழைத்து வர அரசாங்கமும் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகிறது.
கேரளாவைச் சேர்ந்த டிஎன் கிருஷ்ணகுமார் கடந்த 32 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகிறார். இவர் துபாயில் சிக்கிக்கொண்ட கேரளாவைச் சேர்ந்த 61 பேர் விமானம் மூலம் ஊர் திரும்ப உதவியுள்ளார். இவரது மகன் கடந்த ஆண்டு கார் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். தனது மகனின் நினைவாகவே இந்த உதவியை செய்துள்ளார்.
“இவர்கள் கடும் வேதனையில் உள்ளனர். இவர்கள் வேலையிழந்து சொந்த ஊர் திரும்ப பணமும் இல்லாமல் அவதிப்பட்டனர். இவர்கள் ஊர் திரும்பி தங்கள் அன்பானவர்களுடன் இருக்க உதவவேண்டும் என்று விரும்பினேன்,” என்றார் கிருஷ்ணகுமார்.
கிருஷ்ணகுமார் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் பொறியியல் பட்டதாரி. இவர் கேரளாவில் உள்ள 85 அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளின் முன்னாள் மாணவர்கள் அடங்கிய All Kerala College Alumni Front (AKCAF) என்கிற குழுவில் உறுப்பினராக உள்ளார். இந்தக் குழு அரபு நாடுகளில் நிறுவப்பட்டுள்ளது. இந்த குழு ஏற்பாடு செய்யும் பல்வேறு நலப் பணிகளில் கிருஷ்ணகுமார் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.
கிருஷ்ணகுமார் ஏற்கனவே ஆறு பேரின் விமானச் செலவுகளை ஏற்றுக்கொண்ட நிலையில் AKCAF 191 பயணிகள் ஊர் திரும்ப ஏற்பாடு செய்தபோது 55 பேரின் டிக்கெட் செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். இவர் டிக்கெட் செலவுகளுக்காக கிட்டத்தட்ட 14 லட்ச ரூபாய் தொகையை அளித்துள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் இயக்குநராக பணிபுரியும் கிருஷ்ணகுமார் இது கூட்டு முயற்சி என்றே குறிப்பிடுகிறார்.
“இது ஒரு கூட்டு முயற்சி. பலர் தங்களால் இயன்ற வகையில் உதவியுள்ளனர். விமானத்தில் பயணித்த பெரும்பாலானோர் வேலையிழந்தவர்கள்; அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள்,” என்கிறார் கிருஷ்ணகுமார்.
இக்கட்டான சூழல் ஏற்படும்போது பிறருக்கு உதவ முன்வரவேண்டும் என்கிற குணத்திற்கு பெற்றோரின் வளர்ப்பே காரணம் என்கிறார் கிருஷ்ணகுமார். கல்லூரி நாட்களில் கேரளாவின் பழங்குடி பகுதிகளுக்குச் சென்று உள்ளூர் சமூகத்தினருக்கு வீடு கட்டுவது, ஏரிகளை தூய்மைப்படுத்துவது என பல்வேறு நலப்பணிகளில் பங்களித்ததை நினைவுகூர்ந்தார்.
கட்டுரை: Think Change India