பிரதமர் நிதிக்கு தொழிலதிபர் லட்சுமி மிட்டல் ரூ.100 கோடி நன்கொடை!
வெளிநாட்டு வாழ் இந்திய தொழிலதிபர் லட்சுமி மிட்டல், கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் நிதிக்கு ரூ.100 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
வெளிநாட்டு வாழ் இந்திய தொழிலதிபரான லட்சுமி மிட்டல் இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பிரதமரின் நிதிக்கு (PM CARES Fund) ரூ.100 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார்.
லட்சுமி மிட்டலின் ஏர்சலர் மிட்டல் மற்றும் ஜப்பானின் நிப்பான் ஸ்டீல் இடையிலான கூட்டு முயற்சியான ஏர்சலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் மிட்டல் எனர்ஜி இன்வெஸ்ட்மண்ட்ஸ் இடையிலான கூட்டு முயற்சியான எச்.எம்.இ.எல் ஆகியவை, கோவிட்-19 தாக்குதலால் இந்தியக் குடும்பங்களை காக்கும் முயற்சியை வலுப்படுத்துவதற்கான உதவித் தொகுப்பை அறிவித்துள்ளன.
"இந்தியாவில் எங்கள் இரண்டு நிறுவனங்களும் மொத்தமாக ரூ.100 கோடி பிரதமர் நிதிக்கு அளிக்கின்றன,” என்று லட்சுமி மிட்டல் கூறியுள்ளார்.
"இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்த நெருக்கடியான நேரத்தில், அர்ப்பணிப்பு, துணிவு மற்றும் பரிவை வெளிப்படுத்தியுள்ளனர். எங்கள் ஆதரவு மற்றும் தேசத்திற்கான நன்றி அவர்களுக்கு உரித்தானது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாடும் கொரோனாவில் இருந்து தப்பவில்லை மற்றும், அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாடுகளுக்கு பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்றும் கூறியுள்ள மிட்டல் இது போன்ற நேரங்களில் ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
அரசுகள், நிறுவனங்கள், குடிமக்கள் தங்கள் வளங்களை ஒன்றிணைத்து இந்தத் தொற்று நோயைக் கட்டுப்படுத்த தேவையான எல்லாவற்றையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தங்கள் நிறுவனம் தினமும் 5,000 பேருக்கு மேல் உணவு வழங்குவதாகவும், 30,000 பேருக்கு மேல் உணவுப் பொருட்களை வழங்கியிருப்பதாகவும் மிட்டல் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன், தொழிலதிபர் கவுதம் அதானி, தனது நிறுவன நன்கொடை பிரிவு மூலம் பிரதமர் நிதிக்கு ரூ.100 கோடி நிதி அளித்தார்.
டாடா குழுமம், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பிரதமர் நிதிக்கு நன்கொடை அறிவித்துள்ளன.
“#கோவிட்-19 க்கு எதிரான இந்தியாவின் போரில், அதானி குழுமம் ரூ.100 கோடி தொகையை பணிவுடன் வழங்குகிறது,” என அதானி டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
செய்தி : பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்