போன வருஷம் 31, இந்தாண்டு 3ம் இடம்: ‘உலகின் மதிப்புமிக்க நிறுவனங்கள்’ பட்டியலில் Infosys!
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட ‘உலகின் மதிப்பு மிக்கநிறுவனங்கள்’ பட்டியலில் இன்ஃபோசிஸ் 3வது இடத்தில் உள்ளது. பட்டியலில் இடம்பிடித்துள்ள் மற்ற இந்திய நிறுவனங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்ப்ஸ் இதழ், உலகின் மதிப்புமிக்க 250 நிறுவனங்களை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் இதழானது ஸ்டாடிஸ்டா எனும் நிறுவனத்துடன் இணைந்து நிறுவனங்களின் நம்பகத்தன்மை, சமூக நடத்தை, அவற்றின் தயாரிப்புகள், சேவைகளின் வலிமை மற்றும் முதலாளிகளாக நிறுவனத்தார்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு 250 நிறுவனங்களை உள்ளடக்கிய உலகின் சிறந்த மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலை தயாரித்துள்ளது.
இந்த பட்டியலில் பெங்களூரைச் சேர்ந்த இன்ஃபோசிஸ் 3வது இடத்தை பிடித்ததுடன், டிசிஎஸ், ஹெச்சிஎல், ஹெச்டிஎஃப்சி பேங்க் போன்ற 18 இந்திய நிறுவனங்களும் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) 22வது இடத்தையும், 31வது இடத்தில் டாடா மோட்டார்சும் இடம்பிடித்து பட்டியலில் முதல் 50 நிறுவனங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.
பட்டியலிடப்பட்ட 250 நிறுவனங்களில் 59 நிறுவனங்கள் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டவைகளாகும். ஜப்பான், சீனா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த 82 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பட்டியலின் முதல் இடத்தை பணப்பட்டுவாடா நிறுவனமான விசாவும், கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரி இரண்டாவது இடத்தையும் கைப்பற்றின.
அந்நிறுவனங்களைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. நெட்ஃபிளிக்ஸ் நான்காவது இடத்திலும், பேபால் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. அதைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் (6), வால்ட் டிஸ்னி(7), டொயோட்டா மோட்டார் (8), மாஸ்டர்கார்டு (9), காஸ்ட்கோ ஹோல்சேல் (10) ஆகிய நிறுவனங்கள் முதல் பத்து இடங்களை தனதாக்கி கொண்டன.
டாப் 10ல் 7வது இடத்துக்கு பின் தள்ளப்பட்ட வால்ட் டிஸ்னியே கட ந்தாண்டு பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தது. அதே போல் மூன்றாம் இடத்தை பிடித்த இந்திய நிறுவனமான இன்ஃபோசிஸ் கடந்தாண்டு பிடித்திருந்த இடம் 31.
இதற்கு முன்னதாக 2018ம் ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட ‘சிறந்த 100 டிஜிட்டல் நிறுவனங்கள்’ பட்டியலில் 44வது இடத்தினையும், 2017ம் ஆண்டு போர்ப்சின் ‘சிறந்த பன்னாட்டு நிறுவனங்கள்’ பட்டியலில் 46வது இடத்தினையும் பிடித்துள்ளது ஃபோர்ப்ஸ் நிறுவனம்.
1981ம் ஆண்டு பெங்களூரில் நாராயண மூர்த்தி என்பவரால் நிறுவப்பட்ட இன்போசிஸ் நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளராக திகழ்கிறது. இந்த நிதியாண்டில் 11.6 பில்லியன் டாலர் வருவாயும் ஈட்டி உள்ளது இந்நிறுவனம். இந்தாண்டு மார்ச் மாத வரையிலான நிலவரப்படி நிறுவனத்தில் 2,04,107 ஊழியர்களும், 1,279 வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
பட்டியலில் இடம்பெற்ற இந்திய நிறுவனங்களாவன: டாடா ஸ்டீல் (105), எல் அண்ட் டி (115), மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (117), ஹெச்டிஎஃப்சி (135), பஜாஜ் பைனாஸ் சர்வீஸ் (143), பிரமல் எண்டர்பிரைசஸ் (149), ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா (153), ஹெச்சி எல் டெக்னாலஜிஸ்(155), ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் (157), விப்ரோ (168), ஹெச்டிஎஃப்சி வங்கி (204), சன் பார்மா இண்டஸ் ட்ரீஸ் (217), ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா (224), ஐடிசி (231), ஆசியன் பெயிண்ட்ஸ் (248) ஆகியனவும் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
தகவல் உதவி : The news minute & outlookindia | பட உதவி : The news minute