அன்று அக்கவுண்டில் 500 ரூபாய் மினிமம் பேலன்ஸ் இல்லை, ஆனா இப்போ ஃபோர்ப்ஸ் டாப் 30ல் ஒருவன்!
தெலுங்கு திரைப்பட உலகில் இளம் சூப்பர் ஹீரோவாக பிரபலமாகியுள்ள விஜய் தேவரகொண்டா நிஜத்திலும் ஹீரோதான் !
’எனக்கு 25 வயதிருக்கையில் குறைந்தபட்ச இருப்புத் தொகையான ரூ.500 கூட இல்லாததால் என் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. அப்போ என் அப்பா என்னிடம் 30 வயதுக்குள் வாழ்வில் செட்டில் ஆகிவிடு என்றார். 4 ஆண்டு கடந்த நிலையில், இன்று ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 சாதனைப் பட்டியலில் நான் இடம் பெற்றிருக்கிறேன்...’
இப்படி பெருமிதத்துடன் தனது டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
இந்த வசனம் யாரோ ஒரு கதாசிரியர் எழுதிக் கொடுத்து, அவர் ஏதோ ஒரு சினிமாவில் பேசியது அல்ல. தன் சொந்தவாழ்வில் படிப்படியாக திட்டமிட்டு முன்னேறி, இன்று நிஜ வாழ்க்கையிலும் வெற்றி நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா அனுபவ ரீதியாக ஆழ்மனதில் இருந்து ஆத்மார்த்தமாகக் கூறியுள்ள வார்த்தைகளே இவை...
சினிமாவில் வருவது போல் ஒரு சில காட்சிகளில் அவரது வாழ்க்கை இப்படியாக அதளபாதாளத்தில் இருந்து ஆகாயத்திற்கு உயர்ந்துவிடவில்லை. சினிமாப் பின்னணியே இன்றி வெள்ளித்திரையில் அறிமுகமாகி, நான்கு வருடங்களில் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உயர்ந்து, இன்று ஃபோர்ப்ஸ் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா.
ஃபோர்ப்ஸ் பட்டியல்:
ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகை 6-வது முறையாக 2019-ம் ஆண்டுக்கான 30 வயதுக்குட்பட்ட இளம் சாதனையாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. விளையாட்டு, பொழுதுபோக்கு, தொழில் உள்ளிட்ட 16 பிரிவுகளில் இருந்து சாதனையாளர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். 16 பிரிவுகளில் 300-க்கும் அதிகமானோர் பட்டியலிடப்பட்டு, அவர்களில் இருந்து 30 இளம் சாதனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள்.
தனிமனித சாதனைகளால் ஏற்படும் தாக்கம், சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்கள், அவர்கள் இருக்கும் துறையில் அடைந்த உயரம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த சாதனையாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதன்படி இந்தாண்டுக்கான பட்டியலில் 30 சாதனையார்களில் ஒருவராகத் தேர்வாகியுள்ளார் தெலுங்கு மற்றும் தமிழிலும் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா. இந்தப் பட்டியலில் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, தடகள வீரர்கள் நீரஞ் சோப்ரா, ஹிமா தாஸ் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால், இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே நடிகர் விஜய் மட்டும் தான். சென்ற ஆண்டு அதிக சம்பளம் பெறும் இந்திய பிரபலங்கள் பட்டியலில் அவர் 72-ம் இடம் பிடித்திருந்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் தனது 25 வயதில் வங்கிக் கணக்கில் குறைந்தபட்சத் தொகையான ரூ. 500கூட இல்லாத அளவிற்குத் தான் அவரது வாழ்க்கை இருந்துள்ளது. ஆனால் இன்று படங்களைத் தயாரிக்கும் அளவிற்கு பொருளாதார ரீதியாகவும், தன் அப்பா கூறியது போல் 30 வயதிற்கு முன்பாகவே வாழ்க்கையில் செட்டிலாகி மற்ற இளைஞர்களுக்கு வாழும் உதாரணமாகி இருக்கிறார் விஜய். இதனைத்தான் தனது டிவீட்டில் அவர் இப்படித் தெரிவித்திருக்கிறார்.
யார் இந்த விஜய் தேவரகொண்டா?
1989ம் ஆண்டு மே மாதம் 9ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர் விஜய் தேவரகொண்டா. இவரது பெற்றோர் கோவர்த்தன் தேவரகொண்டா மற்றும் மாதவி தேவரகொண்டா. விஜயின் முழுப்பெயர் விஜய் சாய் தேவரகொண்டா ஆகும். கோவர்த்தன் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநராகவும், மாதவி சாப்ட் ஸ்கில் மற்றும் பர்சனாலிட்டி டெவலப்மென்ட் பயிற்சியாளராகவும் பணி புரிந்து வருகின்றனர்.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல, விஜய்க்குள் இருந்த நடிகன், அவரது குழந்தைப் பருவத்திலேயே வெளியே தெரிய ஆரம்பித்து விட்டான். இதனால், ஹைதராபாத்தில் இருந்த நாடக, தியேட்டர் குழுக்களில் இணைந்து அவர் நடிக்கத் துவங்கினார். அப்போதே அவரது நடிப்பிற்கு நல்ல அப்ளாஸ் கிடைத்தது.
இதனால் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆரம்பத்தில் துணை நடிகர் வாய்ப்பு தான் அவருக்கு கிடைத்தது. சில குறும்படங்களிலும் நடித்தார் விஜய். 'பெல்லி சூப்பலூ' படத்தின் மூலம் 2016ம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் நாயகனாக அறிமுகமானார். அப்படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டாலும், இந்தியா முழுக்க, அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் அவரை பிரபலமாக்கியது ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தான்.
கோபத்தை கட்டுப்படுத்த முடியாத மருத்துவ மாணவராக/மருத்துவராக, காதலுக்காக உருகி, ஆக்ரோஷமாக சண்டையிட்டு ஒரே படத்தில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, இளம்பெண்களின் கனவு நாயகனாக மாறினார். நெகடிவ்வான கதாபாத்திரத்தில் நடித்து, அவரே எதிர்பார்க்காத அளவிற்கு ரசிகர்களிடையே பாஸிடிவ்வான ஆதரவை அர்ஜுன்ரெட்டி படம் மூலம் விஜய் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து `கீத கோவிந்தம்', ’டாக்ஸிவாலா' உள்ளிட்ட தெலுங்குப் படங்கள் மூலம் தெலுங்கிலும், தமிழிலும் அதிக ரசிகர்களைப் பெற்றார். அதிலும் குறிப்பாக, கீத கோவிந்தம் படத்தில் இடம் பெற்ற ‘இம்கே இம்கே’ பாடல் அவரைப் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. தற்போது ‘டியர் காம்ரேட்’ என்ற ரொமான்டிக் காமெடி படத்தில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி, இவர் 'மேடம் மீறேனா' என்ற குறும்படத்தை இயக்கியும் இருக்கிறார்.
தமிழில் நேரடி நாயகன்:
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் தமிழிலும் தனக்கான ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிய விஜய், ’நோட்டா’ படம் மூலம் நேரடியாக தமிழில் அறிமுகமானார். அவரது டப்பிங் படங்களுக்கு கிடைத்த அளவிற்கு இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும், “நோட்டா படத் தோல்விக்கு நாயகனான தானே காரணம்’”என பழியை ஏற்றுக் கொண்டு தமிழ் ரசிகர்களின் மனதில் மேலும் நல்ல அபிப்பிராயத்தைப் பெற்றார்.
விஜயை ஒரு வெற்றியாளராக, நடிகராக்க வேண்டும் என்பது அவரது அப்பாவின் கனவாகவும் இருந்துள்ளது. காரணம் தனது சொந்த ஊரான அச்சம்பேட்டையில் இருந்து சினிமா கனவுடன் தான் அவர் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்துள்ளார். ஆனால், அவரால் நடிகராக முடியவில்லை, தொலைக்காட்சி இயக்குநராகத் தான் ஆக முடிந்தது. எனவே, தன் மகன் மூலம் தனது கனவை அவர் நிறைவேற்றிக் கொள்ள நினைத்தார். விஜய்க்கும் நடிப்பில் ஆர்வம் இருக்கவே, அவரது எண்ணம் சுலபமாக நிறைவேறத் தொடங்கியது.
ரியல் நாயகன்:
கேமராவுக்கு முன்பு மட்டுமல்ல, அதற்கு பின்புறமும் விஜயின் செயல்பாடுகள் மற்றும் பேச்சிற்கு ரசிகர்கள் ஏராளம். வாய்ச் சொல் வித்தகர் என்று தான் விஜயைக் கூற வேண்டும். அந்தளவிற்கு பக்கத்து வீட்டுப் பையன் போன்று அனைவரிடமும் சகஜமாகப் பேசக்கூடியவர் அவர். அனைவரையும் கவரும் வகையில் பேசுவதில் வல்லவர்.
அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வெளியாவதற்கு முன், அதன் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விஜய் பேசியது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கும், வெற்றிக்கும் விஜய்யின் பேச்சும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.
பொழுதுபோக்கு:
நடிப்பைத் தாண்டி, விஜய்க்கு பிடித்தமான விசயங்களில் ஒன்று பயணம். அதிலும் குறிப்பாக நண்பர்களுடன் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வது அவருக்கு பிடித்தமானது. இது போக, அவர் வாலிபால், பேட்மிட்டன், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் விளையாடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
உடற்பயிற்சி செய்வதில் கூடுதம் ஆர்வம் உடையவரான விஜய், உடலை எப்போதும் பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர். நோட்டா பட புரொமோசனுக்காக தமிழ் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ஒரு சாக்லெட் துண்டைச் சாப்பிட விஜய் எவ்வளவு யோசித்தார் என்பது நாம் கண்கூடாக கண்ட உண்மை.
தெலுங்கானா முதல்வர் விஜய்க்கு தூரத்து உறவினர் முறை. ஆனால், ‘கே.டி. ராமாராவ் தனக்கு மிகவும் பிடித்தமான அரசியல் தலைவர் என்றும், அவரது தலைமைப் பண்பு தனக்கு மிகவும் பிடிக்கும்’ என்றும் ஒரு பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் விஜய்.
ரோட்டில் கண்ட இடத்தில் குப்பை போடுவது, கியூவில் வராமல், இடையே புகுந்து வருவது போன்றவை விஜய் தேவரகொண்டாவை நிஜத்திலும் அர்ஜுன் ரெட்டியாக்கி விடுமாம்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விஜய், ரவுடி என்ற ஆப் மூலம் எப்போதும் ரசிகர்களுடன் டச்சில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் விஜய்:
சினிமாவில் ஹீரோக்கள் செய்வதைப் பார்த்து நாமும் இதே போல் செய்து, ஒரே பாடலில் பணக்காரர்களாக வேண்டும் எனப் பலர் நினைப்பதுண்டு. ஆனால், அது சினிமாவில் மட்டுமே சாத்தியம். அதையும் தாண்டி கடின உழைப்பும், ஈடுபாடும் இருந்தால் குறைந்த காலத்திலேயே எத்துறையைச் சேர்ந்தவர்களும் சாதனையாளர்களாக உருவாக முடியும் என்பதற்கு நல்ல உதாரணமாகி இருக்கிறார் விஜய்.
“ஒரு விஷயத்தை நீங்கள் எப்படிப் பார்த்து, அதைப் எப்படிப் புரிந்து, எப்படி செயல்படுத்துகிறீர்கள் என்பதில் தான் வெற்றியின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது,” என்கிறார் விஜய் தேவரகொண்டா.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த அவருக்கு திரைத்துறையினரும், அவரது ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நாமும் நம் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம். வரும் வருடங்களில் இன்னும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து மென்மேலும் அவர் சாதனைகளைப் படைக்க வாழ்த்துக்கள்.