ஓடிடி சேவையை துவங்கியது முன்னணி யூடியூப் சேனல் 'Blacksheep'
புகழ்பெற்ற யூடியூப் சேனலான பிளாக்ஷீப்பின் ஓடிடி மேடையான ‘பிஎஸ் வேல்யூ’வை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
தமிழகத்தின் புகழ்பெற்ற யூடியூப் சேனலான 'பிளாக்ஷீப்', தனது ஓடிடி மேடையான 'பிளாக்ஷீப் வேல்யூ'வை (Blacksheep Value) துவக்கியுள்ளது, சென்னையில் புதிதாக துவக்கப்பட்டுள்ள மார்க்கெட் ஆப் இந்தியா எக்ஸ்பிரியன்ஸ் சென்டரில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு இந்த புதிய சேவையை துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் இருந்து செயல்படும் முன்னணி யூடியூப் சேனல்களில் ஒன்றாக பிளாக்ஷீப் விளங்குகிறது. தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் இந்த சேனல், ஸ்டிரீமிங் முறையில் உள்ளடக்கத்தை வழங்கும் ஓடிடி மேடையில் அடையெடுத்து வைத்துள்ளது. பிளாக்ஷீப் வேல்யூ (BS Value) எனும் பெயரில் இதற்கான சேவையை துவக்கியுள்ளது.
சென்னையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள மார்க்கெட் ஆப் இந்தியா எக்ஸ்பிரியன்ஸ் சென்டரில் முதல் நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்த துவக்க விழாவில், இச்சேவை சார்பாக 110 மணி நேர இடைவெளி இல்லாத ஸ்டிரீமிங் துவக்கப்பட்டது.
இந்த நேரலை ஸ்டிரீமிங்கின் போது, 50 பிரபலங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள 50 தமிழ்ச் சங்கங்கள் பங்கேற்க உள்ளன. இம்மாதம் 6ம் தேதி வரை இந்த ஸ்டிரீமிங் நிகழ உள்ளது. இந்த ஸ்டிரீமிங்கை பிளாக்ஷீப்பின் யூடியூப், ஃபேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் காணலாம்.
30,000 சதுர அடியில் அமைந்துள்ள எக்ஸ்பிரியன்ஸ் சென்டர், உலக அளவில் சென்றடையக் கூடிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. கருத்தரங்குகள், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவற்றை இதில் நிகழத்தலாம். எஸ்பிஆர் குழுமத்தின் மார்க்கெட் ஆப் இந்தியா திட்டத்தின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.
இந்த ஸ்டிரீமிங் நிகழ்ச்சியில், பிரபலங்கள் பங்கேற்பு, வாடிக்கையாளர் உரையாடல் ஆகியவற்றுடன், பிளாக்ஷீப்பின் புதிய நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புகளும் இடம்பெற உள்ளன.
மார்கெட் ஆப் இந்தியாவை உருவாக்கியுள்ள எஸ்பிஆர் குழுமம், இந்தியாவின் மிகப்பெரிய மொத்த கடைகள், அலுவலக மையமாக திகழ்கிறது. சீனாவில் உள்ள பெரிய வர்த்தக அரங்குகளுக்கு போட்டியாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.