நீங்கள் பணக்காரர் ஆகவேண்டுமா? அப்போ இந்தப் பழக்கங்களை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள்!
எதை செய்யவேண்டும் என்பதற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதேபோல் எதை செய்யக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும்.
பணக்காரர் ஆகவேண்டும் என்று விரும்பாதவர்கள் இருக்கிறார்களா என்ன? வீடு வாங்க, நிலம் வாங்க, வீடு கட்ட, கார் வாங்க இப்படி எந்த ஒரு தேவையையும் பணம் இருந்தால் மட்டுமே பூர்த்தி செய்துகொள்ள முடியும். இந்த இலக்கை நோக்கிதான் நம்மில் பலர் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இலக்கு ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். பணத்தை சம்பாதிக்கவும் சேமித்து வைக்கவும் வெவ்வேறு விதங்களில் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
ஆனால், ’ஹார்ட் வொர்க்’ செய்தால் மட்டும் போதாது ‘ஸ்மார்ட் வொர்க்’ செய்வதும் முக்கியம். ஒருவர் பணக்காரர் ஆவதற்கு கடின உழைப்பு, புத்திசாலித்தனம் போன்றவை மட்டும் போதாது. நம்முடைய பழக்க வழக்கங்களும் முக்கியம்.
எதை செய்யவேண்டும் என்பதற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதேபோல் எதை செய்யக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும் அல்லவா?
அந்த வகையில், நமக்கே தெரியாமல் நான் பின்பற்றும் சில கெட்டப் பழக்கங்கள் நாம் பணக்காரர் ஆவதற்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றன. இவற்றைத் தெரிந்துகொண்டு மாற்றிக்கொண்டால் இலக்கை எட்டுவது எளிதாகும். அவை என்ன என்று பார்ப்போம்.
வருமானத்திற்கு ஒரே ஆதாரத்தை நம்பியிருப்பது
எல்லோரும் வேலைக்குப் போகிறோம். மாதச் சம்பளம் வாங்குகிறோம். செலவு போக மீதமிருக்கும் தொகையை சேமித்து வைக்கிறோம். ஆனால், வருமானத்திற்கு ஒரே ஒரு வேலையை மட்டும் சார்ந்திருப்பது நல்லதல்ல. வருமானம் வருவதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்வது நல்லது.
சொத்து இருக்குமானால் அதை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம். வேலை தவிர கூடுதலாக ஏதேனும் தொழில் செய்து சம்பாதிக்கலாம். அவரவர் தனித்திறனுக்கும் ஆர்வத்திற்கும் தகுந்தபடி வேலையைத் தேர்வு செய்து வருமானத்திற்கு வழி செய்துகொள்ளலாம். வேலை நிரந்தரமில்லாத சூழலில் திடீரென்று வேலை போனாலும் இந்த மாற்று வருவாய் ஆதாரம் கைகொடுக்கும்.
சம்பளம் உயர்வு கேட்டு மேலதிகாரியிடம் முறையிடுவதில்லை
முன் அனுபவமின்றி ஃப்ரெஷ்ஷராக வேலைக்கு சேரும்போது பலர் சம்பளத்தைப் பற்றிய பேச்சுவார்த்தையில் அதிகம் ஈடுபடுவதில்லை. குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பதுண்டு. வேலையில் சேர்ந்து அனுபவம் பெறவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கும்.
ஆனால், சிலர் பல ஆண்டுகளாக வேலை செய்து அனுபவம் கிடைத்த பிறகும் சம்பளத்தை உயர்த்துவது பற்றி மேலதிகாரியிடம் கோரிக்கை வைப்பதில்லை. உங்கள் திறமையின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால் நிச்சயம் மேலதிகாரியிடன் சம்பள உயர்வு பற்றி பேசுவதில் தவறில்லை.
ஆர்வம் குறைவதால் கற்றல் குறைந்துபோகிறது
கேரியர் ஆரம்பிக்கும் சமயத்தில் பலர் ஊக்கமாகவும், உற்சாகமாகவும் இருப்பதுண்டு. ஆனால் இது நீடிப்பதில்லை. ஆர்வமாக வேலை செய்தபோது நிறைய கற்றுக்கொண்டவர்கள் ஒருகட்டத்தில் ஆர்வம் குறைந்து போவதால் கற்றலிலும் தேக்கம் வந்துவிடுகிறது.
இன்றைய தொழில்நுட்ப உலகில் நாம் நம்மைத் தொடர்ந்து அப்டேட் செய்துகொள்வது அவசியமாகிறது. அதற்கு ஆர்வம் குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
நாம் நம்மில் முதலீடு செய்துகொள்வதில்லை
முதலீடு என்றவுடன் வீடு, பங்குசந்தை, ரியல் எஸ்டேட் போன்றவையே நினைவிற்கு வரும். ஆனால், எல்லாவற்றையும் விட நாம் நமக்காக முதலீடு செய்துகொள்ளவேண்டும்.
நம் அறிவை, திறனை, அனுபவத்தைத் தொடர்ந்து மேம்படுத்தி வந்தால் மட்டுமே நம்மால் நம் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். அதை அடிப்படையாகக் கொண்டு முன்னேறவும் முடியும்.
ஒரு நிறுவனத்தின் எல்லா வளங்களைக் காட்டிலும் மனித வளம் முக்கியமானது. நம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நாம் சிறந்த முறையில் பங்களிக்க வேண்டுமானால் முதலில் நமக்காக முதலீடு செய்துகொண்டு நம்மை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். இதனால் நம்மால் அதிகம் சம்பாதிக்கமுடியும் என்பதுடன் கூடுதல் போனஸாக நம் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
இலக்கு எட்டப்பட்டதும் தொய்வு ஏற்படுகிறது
வாழ்க்கையில் நாம் தொடர்ந்து செயல்பட உத்வேகம் அளிப்பது நாம் நிர்ணயிக்கும் இலக்குகள் மட்டுமே. ஆனால், இலக்குகள் என்பது ஒரு குறுகிய காலகட்டத்திற்கானது அல்ல. ஒரு இலக்கு எட்டப்பட்டதும் நம் லட்சியத்தில் தொய்வு ஏற்படுவதால் அத்துடன் நிறுத்திக்கொள்கிறோம். இந்த அணுகுமுறை சரியல்ல.
வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறவேண்டுமானால் அடுத்தடுத்த இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டே இருக்கவேண்டும். தொடர் இலக்குகள் நம்மை உயர்த்திக்கொண்டே இருக்கும். இதனால் வருமானமும் அதிகரிக்கும்.
பணத்தைக் கொண்டு எதுவும் செய்வதில்லை
பலர் தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை சேமித்து வைத்திருப்பார்கள். ஆனால், இதை எதிலும் முதலீடு செய்யமாட்டார். ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் அதை பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராயவேண்டும்.
பங்குகள், சேமிப்புப் பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். எதில் நம் பணம் பாதுகாப்பாக இருக்கும், எதில் லாபம் கிடைக்கும் என்பதை ஆழமாக ஆய்வு செய்து அதன் பிறகு முதலீடு செய்து பணம் சேர்க்கலாம்.
தொகுப்பு: ஸ்ரீவித்யா