இயற்கையோடு கலந்த ஒரு எதார்த்த கல்வி அளிக்கும் ‘குக்கூ காட்டுப்பள்ளி’
ஒரு பட்டாம் பூச்சியாக, சிட்டுக்குருவியாக, மெல்ல ஊர்ந்து போகும் குட்டி நத்தையாக, தத்தித்தாவி நடக்கப்பழகும் மான்குட்டி போல, கடலையே குடிக்க நினைக்கும் சின்னஞ்சிறு மீன்குஞ்சு போல... இயற்கையோடு கலந்த ஒரு கல்வி மனிதர்களான நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்? அதான் குக்கூ காட்டுப்பள்ளி!
குழந்தைகளின் செயல்பாடுகளில் கோடிப்புதையல்கள் கொட்டிக்கிடக்கின்றன. வாழ்தலின் இன்பத்தை நோக்கியே குழந்தைகளின் சிறகுகள் விரிந்து பறக்கிறது. இவர்களின் உணர்வும் உலகமும் தனித்துவமானவை. இக்குழந்தைகளின் மாயஜால உலகில் காயம் என்பது கீழே விழுந்தால் மட்டுமே வரும்.
ஆனால், தற்போது இவர்களின் கரங்களில் கத்தை கத்தையாக பாடப்புத்தகங்களை திணித்து ஓர் அறைக்குள் அடைப்பதால், குழந்தைகள் தாம் ஒரு தனித்துவம் மிக்க தனி உயிர் என்பதை உணராமல் போய்விடுகின்றனர். இப்படி பரபரப்பும் பதைபதைப்பும் நிறைந்த அவசர வாழ்க்கையால் காணாமல்போன குழந்தைகளின் இயல்பை மீட்பதற்கு என உருவாக்கப்பட்டது தான் ’குக்கூ காட்டுப் பள்ளி.’ கிருஷ்ணகிரி, புலியனூரில் உள்ளது இந்தப் பள்ளில்
ஒரு பட்டாம் பூச்சியாக, சிட்டுக்குருவியாக, மெல்ல ஊர்ந்து போகும் குட்டி நத்தையாக, தத்தித்தாவி நடக்கப்பழகும் மான்குட்டி போல, கடலையே குடிக்க நினைக்கும் சின்னஞ்சிறு மீன்குஞ்சு போல... இயற்கையோடு கலந்த ஒரு கல்வி, மனிதர்களான நமக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்?
ஒரு வேளை, அப்படியொரு பள்ளிக்கூடம் எல்லா கிராமங்களிளும் இருந்தால்?
இயற்கை, கடவுள், மனம், கனவு விளையாட்டு, நிம்மதி, புரட்சி, மகிழ்ச்சி, அன்பு..., என எல்லாமும் அதில் அமைந்துவிடும். தேர்வுகள் இல்லாமல், பிரம்படி இல்லாமல், போட்டி மனப்பான்மை ஏதுமில்லாமல் ஆசிரியரும் மாணவரும் ஒன்றுசேர்ந்து இயற்கையிடம் கற்றுக்கொள்ளும் ஒரு பள்ளிக்கூடம், அடர்ந்த காட்டுக்கு உள்ளே அமைந்தால், நம் மனது எவ்வளவு மகிழ்ச்சி அடையும் அல்லவா!
இந்தக் கனவை நினைவாக்கும் முயற்சியில், 2016 ஆம் ஆண்டு ஜவ்வாது மலை அடிவாரம் புளியானூர் கிராமத்தில் கட்டப்பட்ட ஒரு தர்மப் பள்ளிக்கூடம் தான் 'குக்கூ காட்டுப்பள்ளி'. காளான் பூப்பது மாதிரி கல்வி பூக்கும் குக்கூ, குழந்தைகள் வெளியை கல்வியாளர் அரவிந்த் குப்தா அவர்கள் திறந்து வைத்தார்.
இங்குள்ள கட்டிடம் முதல் உணவு வரை இயற்கையை சிதைக்காமல் இயற்கையாகவே வடிவமைக்கப்பட்டுள்ளதால், அந்தப் பள்ளியே குழந்தைகளுக்குப் பாடமாக இருக்கிறது.
பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் கற்றுக் கொள்ள விரும்பும் அனைத்தும் இங்கு கற்றுக் கொள்ளும் விதமாக இந்நிலம் இருக்கும். மேலும், புரட்சிகளை காட்டிலும், கருணையும், பேரன்புமே இச்சமூகத்திற்கு தற்போது தேவையான ஒன்று. அப்படி ஒரு விஷமற்ற தூய உலகத்தை குழந்தைகளுக்கு கொடுக்க விரும்புகிறது இந்த குக்கூ காட்டுப்பள்ளி.
தாத்தா பாட்டிகளுடான உறவு தற்போதைய சூழலில் குழந்தைகளுக்குக் கிடைக்க பெறாமல் போய்விடுகிறது. அவ்வழகிய உறவு குக்கூ நிலத்தில் இருக்க வேண்டும் எனவும் விரும்புகின்றனர். ஓரிரு வருடங்களில் வாழ்வை நிறைவு செய்யும் மூத்தோரும், பிறந்து சில வருடங்களே ஆன குழந்தைகளும் இருக்கும் நிலத்தில் கற்றல் இயல்பாய் அமையும்.
இப்படி குழந்தைகளுக்கு இயற்கையோடு கலந்த ஒரு எதார்த்த மாற்றுக் கல்வியை தருவது அவ்வளவு எளிதன்று. அந்த மிகப்பெரிய கனவை நிறைவேற்றுவதற்கு நூறு சிறிய கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை உணர்ந்தார்கள்.
மாற்றம் வேண்டும் என எண்ணுவோர் முதலில் மாற்றத்தின் சாட்சிகளாக வேண்டும் எனவும் முடிவெடுத்தார்கள். அதன்படி, குக்கூ குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தங்களை சமூகம் மற்றும் குழந்தைகள் சார்ந்த விசயங்களில் முற்றும் முழுதாய் ஈடுபடுத்திக் கொண்டனர்.
குக்கூ குடும்பத்தினரின் சமூக செயல்பாடுகள் :
தும்பி சிறார் இதழ் :
மண்ணில் விழுந்து புரண்டு விளையாடிய குழந்தைகள், இன்று வரவேற்பறைக்குள் கார்ட்டூன் சேனல்களுக்குள் தொலைந்து போகிறார்கள். மேலும் கதைகளால் நிரம்பிய குழந்தைகளின் உலகம், தாத்தாக்களும் பாட்டிகளும் நிறைந்த நம் வீடுகளில் கதைகள் தழும்ப தழும்ப நிறைந்திருந்தன. இன்று கூட்டுக்குடும்பங்கள் சிதறி தனிக்குடித்தனங்கள் அதிகரித்துவிட்டதால் தாத்தா பாட்டிகள் இல்லாத கதைகள் அற்ற குடும்பங்களில் குழந்தைகள் வெறுமையாக நிற்கின்றன.
அம்மாதிரி குழந்தைகளுக்கென தும்பி என்ற மாத இதழை நடத்துகின்றனர். குழந்தைகளை அவர்களுடைய மாயாஜால உலகத்திற்குக் கொண்டு செல்லும் படியான அழகிய ஓவியங்கள் மற்றும் கதைகளை ஒரு துளி ஜீவன் கூட குறையாமல் தாங்கி வருகிறது தும்பி சிறார் இதழ்.
வண்ணங்கள் நிரம்பிவழியும் அழகிய ஓவியங்களும், கற்பனைத் திறனை வளர்க்கக் கூடிய உலகத் தரம் வாய்ந்த கதைகளும் தமிழகத்தின் பெரும்பாலான அரசுப் பள்ளி குழந்தைகளை குதூகலப்படுத்திவருகிறது தும்பி சிறார் இதழ்.
குக்கூ வைத்தியசாலை :
எங்கெங்கோ இருந்து ஒவ்வொரு கைப்பிடி மண்ணாக வந்து சேர்ந்து வைத்தியசாலையாக எழுந்து நிற்கும் மண்குடில், இன்று பலருடைய உடல் உபாதைகளை போக்கும் ஜீவனாக மாறிருக்கிறது.
தொடு சிகிச்சை முறையில் இங்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படுகிறது.பக்கவாதம், குழந்தையின்மை, கை, கால், பாத, மூட்டு வலிகள் போன்ற இயற்கை உபாதைகள் அனைத்தும் குணப்படுத்தபடுகின்றது.
வைத்திய தொடர்புக்கு : 9750192229
குக்கூ ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம் :
தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் பழங்கிணறுகளைத் தூர்வாரி, அவற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு உகந்த நீராதாரமாக மாற்றித்தரும் பொருட்டு உருவானதே ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம். புதைந்தழிந்த கிணறுகள் என நினைவில்மட்டுமே எஞ்சியிருந்த எத்தனையோ கிணறுகள் இன்று நீர்ச்சுனைக் கசிந்து கிராம மக்களின் தாகந்தீர்த்து வருகிறது.
கங்கை நதியை பாதுகாக்கக் கோரி 2011 ஆம் ஆண்டு 114 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து இறந்துபோன துறவி நிகமானந்தா நினைவாக, பாழடைந்து, கேட்பாரற்று கிடந்த 15க்கும் மேற்பட்ட ஊர் கிணறுகளை, மக்கள் பயன்படுத்தும் பொருட்டு இலவசமாக சீரமைத்து கொடுத்திருக்கின்றனர்.
ஊர்க்கிணறு புனரமைப்பதற்கு நிதி உதவி வழங்க தொடர்புக்கு : 96007 13701
தயை - பனையோலை பொம்மைகள் பயிற்றகம் :
'ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவுசெய்து மேலைநாடுகளில் ஒவ்வொரு பிளாஸ்டிக் பொம்மையும் உருவாக்கப்படுகிறது.
உதாரணமாக, ஒரு கார் பொம்மை தயாரிக்க பெரிய தொழிற்சாலை தேவை. அதற்கான
ரசாயனச் சேர்மானங்களை உழைக்கும் மனிதர்கள் கையாளவேண்டி உள்ளது. ஆனால், நம் நாட்டில் பொம்மை-மரபு மிகவும் சர்வசாதாரணமானது.
காலைக்கடன் கழிக்கச் செல்கையில் கீழே கிடக்கிற ஓலையை எடுத்து காற்றாடியோ உருவங்களோ செய்வது நம்முடைய காலாகாலப் பழக்கமாக இருந்திருக்கிறது. பொம்மை என்பது நமக்கு பகட்டு அல்ல.
ஆனால், இன்றைய சமூகத்தின் முக்கியப் பிரச்சினையாகவும், நம்மால் தவிர்க்க முடியாத ஒரு முக்கியப் பொருளாக உருமாறிருக்கிறது பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் ஆன பொருள்கள்.
இம்முக்கியமான பிரச்சினையை உணர்ந்து பனை ஓலையிலிருந்து பொம்மைகளும் இன்னபிற பொருட்களும் செய்வதைக் குழந்தைகளுக்கு பள்ளிகள், நிகழ்ச்சிகள் வாயிலாக பயிற்சி வகுப்புகள் எடுத்து கற்றுக்கொடுத்து வருகின்றது.
பனையோலை பொம்மை பயிற்சிக்கு : 7010975252
நூற்பு :
இன்றைய நவீன சூழலில் அழிந்து கொண்டு வரும் தொழில்களில் ஒன்றான கைத்தறி நெசவினை மீட்டுருவாக்கம் செய்து, அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கான முக்கியமான பொறுப்பினை நூற்பு ஏற்றுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள நெசவாளர்களை சிறு குழுக்களாக இணைத்து, அவர்களுக்கு நெசவு செய்வதற்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து, அருகில் கிடைக்கும் தூய பருத்தியில் உருவான நூலைக் கொண்டு கைத்தறி நெசவு செய்து, ஆடையாக உருமாற்றி உற்பத்தி செய்த கைத்தறி ஆடைகளை விற்பனை செய்யும் ஒரு சொசைட்டி அமைப்பாக செயல்படுகிறது.
இதன் மூலம் தொடர்ச்சியான வேலைச் சுழற்சியை நெசவாளர்களுக்குள் ஏற்படுத்தியதே, அவர்களுக்கான நம்பிக்கை அளித்து இருக்கிறது.
குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை கற்றுக்கொள்ள, பள்ளியில் ஒரு பாட வேலைக்கான பாடத்திட்டமாக மீண்டும் கைநூற்பும், கைத்தறி நெசவும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற விருப்பத்தையும் முன்வைக்கிறது நூற்பு.
தன்னறம் நூல்வெளி :
புத்தகங்கள் ஒரு மனிதனின் அறியாமை எனும் இருளில் இருந்து விலக்கி ஒளி என்ற தன் இயல்பை அறிய உதவும் ஒரு நல்ல நண்பன் ஆவான்.
காந்தியம், சூழலியல், தற்சார்பு, கல்வி, வேளாண்மை, இறைமை, வாழ்வியல், தத்துவம் மற்றும் குழந்தைகள் சார்ந்த புத்தகங்களை நற்தேர்ந்த வடிவமைப்புடன், உயரிய தரத்துடன் தமிழில் தொடர்ந்து அச்சுப்படுத்தும் கனவில் முளைத்தது ‘தன்னறம் நூல்வெளி’.
இவர்கள் வெளியிட்ட புத்தகங்கள் ஒவ்வொன்றும் இளைஞர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டியவை.
நியதி :
நியதி என்னும் பயிற்சி வகுப்பு மூலம் மாணாக்கர்களை காட்டுப் பயணம் அழைத்துச் சென்று இயற்கையை சுவாசத்தோடு இணைப்பது, சமூகத்தின் நல்ல ஆளுமைகளை அறிமுகப்படுத்துவது, மலை வாழ் மக்களின் இயல்பான வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்துவது, புத்தக வாசிப்பு மற்றும் தியானத்தின் முக்கியத்துவத்தை உணர வைப்பது, மழை, வெயில், பனி, மரம், செடி, கொடிகள், பறவைகள் என இயற்கையின் சகப் படைப்புகள் அனைத்தையும் மாணாக்கர்களுக்கு அறிமுகப்படுத்தி புரிந்துணர்வை உருவாக்க முயற்சிகின்றன.
மதர்வே கருப்பட்டி கடலை மிட்டாய் :
பாரம்பரிய இனிப்புகளை மீண்டும் அதே தரத்துடன் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற தீவிர ஆசை மற்றும் ஆர்வத்தின் விளைவாக உருவானதே 'மதர்வே' கருப்பட்டி கடலை மிட்டாய்.
நிலக்கடலையை மிக உயர்ந்த தரத்தில் வறுத்து, கவனமாக உருவாக்கப்பட்ட பனை வெல்லத்துடன் கலந்து தயார் செய்த கடலை மிட்டாய். வெறுமனே ஒரு இனிப்பு துண்டு மட்டுமல்ல ஆரோக்கியத்தின் ஊற்று.
குக்கூ திண்ணைப் பள்ளி :
பள்ளிகளில் குழந்தைகளின் இடை நிற்றலை தவிர்ப்பதற்கும், நல்ல சிந்தனைகளை விதைத்து சமூக குற்றங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும், ’திண்ணைப் பள்ளி’ என்னும் பெயரில் குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
மேலும், குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை உலகளாவிய நல்ல படங்களைக் காண்பித்து அவர்களின் எண்ணங்களையும், கனவுகளையும் விசாலமாக்குகின்றனர்.
குக்கூ குழந்தைகள் நூலகம் :
குழந்தைகளின் அக உள்ளத்தை குளிரச் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைக்கு ஆற்றும் தொண்டாக கருதும் குக்கூ அமைப்பினரின் மற்றொரு செயல் தான் குழந்தைகள் நூலகம்.
அரசு உதவிகள் அதிகம் போய் சேராத மிகவும் பின்தங்கிய மலை கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு என அவர்களின் கற்பனைத் திறனும், தூய்மைத்துவமும் மேம்பட அழகிய நூலகத்தை அமைத்து தருகின்றனர்.
அம்பரம் :
பச்சிளம் குழந்தையின் தோல் பூப் போன்று மென்மையானது. இவர்களுக்கான ஆடைகளை நாம் மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அம்முக்கியமான பொறுப்பினை உணர்ந்து ’அம்பரம்’ செயல் புரிந்து வருகின்றனர். சுத்தமான பருத்தியால் ஆன நூலை கைத்தறி செய்து, இயற்கை சாயமிடப்பட்டு, இயற்கையான சாரத்தை ஒரு துளியும் சீர்குலைக்காத ஆடைகளை வழங்குகின்றன.
துவம் :
தையல் பயிற்சி வகுப்புகள் மூலம் பருத்தி உள்ளாடைகள், துணிகள் மறுப்பயன்பாடு, துணிப் பொம்மைகள் என கிராமத்துப் பெண்களின் நிதி சுதந்திரத்திற்கு உதவுகிறது துவம்.
இவ்வாறு நாங்கள் சந்தித்து உரையாடி நெகிழ்ந்த, குக்கூ குடும்பத்தினரின் ஒரு சிலரின் செயல்பாடுகளை மட்டுமே இக்கட்டுரையில் தொகுத்து வெளியிட்டுள்ளோம்.
ஒரு மரத்தின் வளர்ச்சிக்கு வேர்கள் ஆற்றும் வேலைகள் வெளியே தெரிவதில்லை, அதுபோல இக்குக்கூ காட்டுப்பள்ளியின் வேர்களாக இருந்து செயல்படுபவர்களை, இந்த ஒரே கட்டுரையில் குறிப்பிட இயலவில்லை. எனவே, அவ்வேர்களின் அழகிய செயல்பாடுகளை தனித்தனி கட்டுரைகளாக காண்போம்.
கடைக்கோடியில் எங்கோ இருக்கும் ஒரு குழந்தையின் ஏக்கத்தினையும், ஏதோவொரு தாய் தந்தையரின் கண்ணீரையும் துடைக்க விரைவில் குக்கூ காட்டுப்பள்ளி முழு செயல் வடிவம் பெற நாங்களும் பிராத்தனை வைக்கின்றோம்...!