'நீங்கள் யார் என்பதை உங்கள் செயலே தீர்மானிக்கட்டும்' - சுதா மூர்த்தி!
ஹெர்ஸ்டோரியின் ’வுமன் ஆன் ஏ மிஷன் சம்மிட்’ நிகழ்வில் யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மா உடனான உரையாடலில் மக்களுக்கு சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறினார் சுதா மூர்த்தி!
”மக்கள் கவனத்தை ஈர்க்கும் இடத்தில் இருக்கவேண்டும் என்பதை நினைத்து நீங்கள் அதிகம் கவலைகொள்ளக் கூடாது. ஏனெனில் அது சுழலும் கேமிரா போன்றது,” என்கிறார் எழுத்தாளர், பத்மஸ்ரீ சுதாமூர்த்தி.
ஹெர்ஸ்டோரியின் ’வுமன் ஆன் ஏ மிஷன் சம்மிட்’ நிகழ்வில் இவரது வரிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மா உடனான உரையாடலில் சுதா மூர்த்தி இந்நிகழ்வில் பங்கேற்ற 700-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உந்துதலளித்தார். ”பெண்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள பகுதியில் செயல்படவேண்டும். மக்கள் கவனத்தை ஈர்க்க போட்டியிடுவதற்கு பதிலாக நீங்கள் யார் என்பதை உங்களது செயல்களே தீர்மானிக்கட்டும். மற்றவர்களின் எதிர்வினை ஒருபோதும் உங்களை பாதிக்க அனுமதிக்கக்கூடாது,” என்று பார்வையாளர்களிடம் கூறினார்.
”நீங்கள் ஈடுபட விரும்பும் செயல் சரியானது எனில் அதைப்பற்றி மட்டும் சிந்தித்தால் போதுமானது,” என்றார்.
எனக்கு திருடுவதில்தான் விருப்பம் அதிகம் என்று யாரும் சொல்லக்கூடாது. அது கண்ணியமான செயல் அல்ல என்று அவர் கூறியதும் பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவரான சுதா மூர்த்தி வாழ்க்கையின் வெவ்வேறு நிலையில் உள்ள மக்களுடன் பணியாற்றியுள்ளார். மக்களுக்கு சேவை செய்வதே லட்சியமாகக் கொண்டுள்ளார். தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் லாப நோக்கமற்ற பிரிவாக இன்ஃபோசிஸ் அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த முயற்சியில் சுதா மூர்த்தி கல்வி, வறுமை ஒழிப்பு, ஹெல்த்கேர், பொது சுகாதாரம், கலை மற்றும் கலாச்சாரம் போன்றவை மூலம் சமுதாயத்தின் நலிந்த பிரிவினைச் சேர்ந்தவர்களின் நிலையை மேம்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.
”மக்களுக்கு சேவை செய்வது என் மனதிற்கு அமைதியளிக்கிறது. எனக்கு வேறு எதைப் பற்றியும் கவலையில்லை,” என்கிறார் சுதாமூர்த்தி.
இருபதாண்டுகளுக்கு முன்பு அவரது வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை அவரது மகள் அவருக்கு உணர்த்தியுள்ளார். அந்த சமயத்தில் சுதா மூர்த்தி பெங்களூரு பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் துறைத்தலைவராக இருந்தார்.
“என் மகள் என்னிடம், “நன்கு படித்த அதிகம் பயணம் செய்துள்ள உங்களைப் போன்ற ஒருவர் வாழ்க்கையில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? மற்றவர்களைக் கவரும் வகையில் இருக்க விரும்புகிறீர்களா? உங்கள் நேரத்தை தொழில்நுட்பத்தில் செலவிட விரும்புகிறீர்களா? உங்கள் பெரிய குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
இந்தக் கேள்வியே அப்போது 45 வயதாகியிருந்த சுதா மூர்த்தியை தனது வாழ்க்கையின் நோக்கம் குறித்து சிந்திக்கவைத்தது. ”நான் என்ன செய்யலாம்? என்னுடைய உழைப்பின் பலனை அனுபவிக்கலாம் என நினைத்தேன். ஆனால் அனுபவிப்பது என்றால் என்ன? பணம் சம்பாதிப்பதா? விருதுகள் வெல்வதா? குழந்தைகளுடன் இருப்பதா? கூடுதல் டாக்டரேட் பெறுவதா? இப்படி வரிசையாய் பல கேள்விகள் என் மனதில் எழுந்தது,” என்றார்.
அதன் பிறகு சுதா மூர்த்தி பல்கலைக்கழகத்தில் தனது முழு நேர பணியை ராஜினாமா செய்துவிட்டு பகுதி நேரமாக தேவைக்கேற்ப பணியாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1996-ம் ஆண்டு நிறுவப்பட்ட இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் முதல் சில பொறுப்பாளர்களில் ஒருவரானார். அப்போதிருந்து சுதா மூர்த்தி இன்ஃபோசிஸ் அறக்கட்டளை வாயிலாக சமூகத்தின் நலிந்த பிரிவினைச் சேர்ந்தவர்களுக்காக மருத்துவமனைகள், பள்ளிகள், அனாதை இல்லங்கள், மறுவாழ்வு மையங்கள், 14,000-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள், 60,000-க்கும் அதிகமான நூலகங்கள் போன்றவற்றை கட்டும் முயற்சிகளுக்கு பொறுப்பேற்றுள்ளார்.
சுதா மூர்த்தி தான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் சிறப்பித்துள்ளார். ”முதல் 24 ஆண்டுகள் சிறப்பாக படித்தேன். அடுத்த இருபதாண்டுகள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் கணவருக்கு உறுதுணையாக இருந்தேன்,” என்றார்.
முன்னணி இந்திய தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் இணை நிறுவனராகவும் இந்தியாவில் அதிகம் கொண்டாடப்படும் தொழில்முனைவோர்களில் ஒருவராகவும் உள்ள அவரது கணவரான நாராயணமூர்த்தியின் பெயரை அவர் குறிப்பிட்டபோது பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கைத்தட்டல் ஒலித்தது.
பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பட சுதா மூர்த்தி 18 ஆண்டுகள் அயராது உழைத்தார். இவரது முயற்சியால் மறுவாழ்வு பெற்ற பாலியல் தொழிலாளர்கள் சுமார் 3,000 பேர் ஒருங்கிணைந்து நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றை ஏற்பாடு செய்தது சுதா மூர்த்திக்கு மறக்கமுடியாத தருணமாக அமைந்துள்ளது.
”நான் மேடையேறினேன். பாலியல் தொழிலாளர்களாக இருந்து பின்னர் சராசரி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த சுமார் 3,000 பேர் நான் பேசுவதைக் கேட்க விரும்பினார்கள். என்னிடம் பேச வார்த்தையில்லை. கண்களில் இருந்து கண்ணீர் வழியத் துவங்கியது. ராமாயணத்தில் வரும் ஸ்லோகம் ஒன்றை மேற்கோள் காட்டினேன்: “கடவுளே, என்னை செல்வந்தராக மாற்றவேண்டாம், அழகாக மாற்றவேண்டாம், ராணியாக மாற்றவேண்டாம். எனக்கு ஏதேனும் கொடுக்க நினைத்தால் மென்மையான உள்ளத்தையும் வலுவான கைகளையும் கொடுங்கள். அப்படிக் கொடுத்தால் மற்றவர்களின் கண்ணீரை நான் துடைப்பேன்,” என்று கூறினேன்.
நான் ஏன் பிறந்தேன் என்பதை அந்த தருணத்தில் உணர்ந்தேன். என் மனதில் அமைதி ஏற்பட்டது,” என்றார்.
கடந்த ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நடவடிக்கைகள் பிரிவு ‘ஆரோஹன் சமூக புதுமைகள் விருதுகள்’ அறிமுகப்படுத்தியது. இது நன்கொடை வழங்குவதைத் தாண்டி சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி சமூக தொழில்முனைவு பகுதியில் செயல்பட்டு புதுமைகளைப் புகுத்தும் தொழில்முனைவோர்களை அங்கீகரிப்பதற்கான முயற்சியாகும்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இன்ஃபோசிஸ் அறக்கட்டளை ஸ்டார்ட் அப்களின் சிறப்பான செயல்பாடுகளுக்காக விருது வழங்கியது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் சக்தியளித்தல், ஹெல்த்கேர், ஆதரவற்றோர் பராமரிப்பு, கிராமப்புற மேம்பாடு, கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய பிரிவுகளின்கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டது.
இன்ஃபோசிஸ் அறக்கட்டளை நலிந்த மக்களின் உதவிக்காக ஏற்கெனவே 1,100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டுள்ளது. இன்ஃபோசிஸ் அறக்கட்டளை தொடர்பான பணிக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவிக்கிறார் சுதா மூர்த்தி. நேரத்தை முறையாக திட்டமிடுவதே பல்வேறு பணிகளை சிறப்பாக முடிக்க உதவியுள்ளது என்கிறார்.
”இயற்கை மிகவும் புத்திசாலி. நீங்கள் அழகானவராகவோ புத்திசாலியாகவோ இருந்தாலும் அவ்வாறு இல்லையென்றாலும் உங்களிடம் இருப்பது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் மட்டுமே. நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்பதற்காக உங்களுக்கு ஒரு நாளைக்கு 48 மணி நேரம் கிடைக்கப்போவதில்லை. நான் இதைத் தெரிந்துகொண்டேன். உங்கள் பிரச்சனைகள், கஷ்டங்கள், தீர்வுகள் எதுவாக இருந்தாலும் அனைத்தையும் இந்த 24 மணி நேரத்தில்தான் கையாளவேண்டும். எனவே எதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று சிந்தித்து செயல்படுவேன்,” என்றார்.
இன்ஃபோசிஸ் அறக்கட்டளை பணிக்கு அடுத்தபடியாக இவர் எழுதுவதற்கு முன்னுரிமை கொடுக்கிறார். குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு மட்டுமே செல்கிறார். ”அதிக நேரத்தை சேமித்து பல்வேறு பணிகளில் ஈடுபடுகிறேன்,” என்றார்.
சுதா மூர்த்தி பொறியியல் படித்த கல்லூரி நாட்களிலேயே பாலியல் பாகுபாடுகளைச் சந்தித்துள்ளார். நீங்கள் யார் என்பதை உங்கள் செயல்பாடுகளே தீர்மானிக்கட்டும். இதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டியது முக்கியம் என்கிறார். இந்த அணுகுமுறைதான் அவரது கல்லூரி நாட்களில் இருந்தே அவருக்கு உதவியுள்ளது. கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்த 150 மாணவர்களில் இவர் மட்டுமே பெண். அதேபோல் டெல்கோ நிறுவனத்தில் முதல் பெண் பொறியாளராக இணைந்துள்ளார்.
”அது கடினமாகவே இருந்தது. ஆனால் என்னிடம் ஒரு உயர்ந்த நோக்கம் உள்ளது என எப்போதும் நினைத்துக்கொள்வேன். ‘நான் ஈடுபடும் செயல் சரியானதாக இருக்கும்வரை மற்றவரின் கருத்துகளை பொருட்படுத்தக்கூடாது’ என்கிற என்னுடைய அணுகுமுறையே எனக்கு எப்போதும் உதவியது,” என்றார்.
நீங்கள் யார் என்பதை உங்கள் செயலே தீர்மானிக்கட்டும் என்றும் பெண்கள் தற்சார்புடன் இருக்கவேண்டும் என்றும் சுதா மூர்த்தி சுட்டிக்காட்டினார்.
”நாம் எப்போதும் நம் அப்பா, சகோதரர், குழந்தைகள் என யாராவது நம் உதவிக்கு வருவார்கள் என நம்புகிறோம். உண்மையில் ஒரு அழகான ஸ்லோகம் உள்ளது, “உன்னுடைய உயிர் நண்பன் யார்? நீங்கள்தான். உங்கள் மோசமான எதிரி யார்? அதுவும் நீங்கள்தான்.” எனவே நீங்கள் தற்சார்புடன் இருக்கவேண்டும். துணிச்சலுடன் இருக்கவேண்டும். இந்த நிலையை எட்ட சற்று அவகாசம் தேவைப்படலாம். ஆனால் நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும்,” என்றார்.
இறுதியாக ஒரு ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார்:
“வாழ்க்கையில் எது முக்கியம்? நீங்கள் தலையில் சூட்டிக்கொள்ளும் கிரீடமோ, உடல் அழகோ, மலரோ, ஆடையோ முக்கியம் இல்லை. உங்கள் பணியில் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையும் துணிவுமே முக்கியம். அதுதான் உண்மையான அழகு. எனவேதான் வெற்றியாளர்களின் அழகு அவர்களது சாதனையிலும் துணிவிலும் மிளிர்கிறது.
ஆங்கில கட்டுரையாளர் : டென்சின் பெமா | தமிழில் : ஸ்ரீவித்யா