’நேர்மையே உற்சாகம்’ - வைரல் ஆன 92 வயது முதியவரின் வாழ்க்கைப் பாடம்!
கேக்கி என்கிற 92 வயது முதியவர் தன்னிடம் பகிர்ந்துகொண்ட அனுபவங்களையும் கருத்துகளையும் சஞ்சய் முத்னானே என்பவர் லிங்க்ட்இன் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
பெரும்பாலான பிரச்சனைகளுக்குத் தீர்வு எளிமையானதாக இருப்பதுண்டு. உண்மைதான். ஆனால், பிரச்சனைகள் வருவதற்கான முக்கியக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்தால் பெரும்பாலும் நம் எதிர்பார்ப்பு நம்மை பிரச்சனைக்கு ஆளாக்கி விடுவதை நாம் உணர்ந்திருப்போம். நம் மனநிலையையும் அணுகுமுறையையும் மாற்றிக்கொண்டாலே நமக்கு ஏற்படும் பாதி பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்பதே உண்மை.
இது உண்மை என்பதை நிரூபித்திருக்கிறார் 92 வயதான கேக்கி. நேர்மையான சுபாவம், எப்போதும் குறையாத உற்சாகம், பணத்தாசை இல்லை, இப்படிப்பட்ட குணாதிசயங்கள் இருந்தால் நிம்மதியான மனநிலையுடன் கவலையின்றி நீடூழி வாழலாம், என்கிறார்.
சஞ்சய் முத்னானே என்பவர் சமீபத்தில் கேக்கி பற்றிய தகவல்களைப் பதிவிட, அந்தப் பதிவு பரவலாக பலரின் கவனத்தைப் பெற்று வைரலானது.
கேக்கியின் வார்த்தைகள் பலருக்கு வாழ்க்கைப் பாடமாக இருக்கிறது. சஞ்சய் முத்னானே செல்லும் அதே காபி ஷாப்பிற்கு கேக்கியும் ரிக்ஷாவில் வருவது வழக்கம். தினமும் சஞ்சய் அவரைப் பார்ப்பார். அவரைப் பார்த்ததும் சஞ்சய் முதானானேவிற்கு அவரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசவேண்டும் என்று தோன்றியிருக்கிறது.
வயதானவர்களுக்கே பொதுவாக மற்றவர்களுடன் பேசவும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் பிடிக்கும். அதேபோல், கேக்கியும் உற்சாகமாக சஞ்சயிடம் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இது பலருக்கும் படிப்பினையாக இருக்கும் என்பதால் சஞ்சய் இதுபற்றி லிங்கிட்இன் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
”கேக்கியிடம் காணப்படும் உற்சாகம் மற்றவர்களுக்கும் தொற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. ’நேர்மையாக வாழவேண்டும்’ என்பதே இவரது தாரகமந்திரம். எப்போதும் பணத்தை விரட்டிக்கொண்டு இவர் ஓடியதில்லை. நமக்கு சொந்தமானது நிச்சயம் நம்மிடம் வந்து சேரும். கிடைக்காத விஷயத்தை நினைத்துப் புலம்பக்கூடாது. நம்மை மோசமாக நடந்துகொள்பவர்களிடம்கூட கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது என்று சொன்னார். இவையே கேக்கியின் மகிழ்ச்சியான உற்சாகமான வாழ்க்கைக்குக் காரணம்,” என்று சஞ்சய் பதிவிட்டுள்ளார்.
கவலையில்லாத வாழ்க்கையில்தான் உண்மையான மகிழ்ச்சி ஒளிந்திருக்கிறது என்பது கேக்கியின் நம்பிக்கை. ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையை அனுபவித்து ரசிக்கவேண்டும் என்று காபியை ரசித்துக்கொண்டே குறிப்பிட்டிருக்கிறார் கேக்கி.
சஞ்சயின் பதிவைப் படித்த பலரும் தள்ளாத வயதிலும் மனதளவில் இத்தனை உறுதியாகவும் நேர்மறையான கொள்கைகளுடனும் வாழ்ந்துகொண்டிருக்கும் கேக்கியின் அணுகுமுறையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கையின் மிகப்பெரிய படிப்பினையை காபியை ருசித்தபடியே போகிற போக்கில் உதிர்த்துவிட்டு சென்றுள்ளார் 92 வயது இளைஞன் கேக்கி.