சமூக ஊடகக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் கோரிக்கை: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு!
சென்னை உயர்நீதிமன்றம் இது வரை 18 முறை இவ்வழக்கை விசாரித்திருப்பதாகவும், விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆதார் எண்ணை, சமூக ஊடக பயனர் கணக்குடன் இணைப்பது தொடர்பாக சென்னை, மும்பை மற்றும் மத்திய பிரதேசங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மனுவை உச்சநீதிமன்றம் அண்மையில் ஏற்றுக்கொண்டது.
இது தொடர்பாக செப்டம்பர் 13 க்குள் பதில் அளிக்குமாறு, மத்திய அரசு, கூகுள், டிவிட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
தீபக் குப்தா மற்றும் அனிருத்தா போஸ் அடங்கிய பெஞ்ச், இந்த நோட்டீஸ் இ-மெயில் வாயிலாக அனுப்பப்பட வேண்டும் என தெரிவித்தது. 12 இலக்க ஆதார் எண்ணை சமூக ஊடகக் கணக்குடன் இணைப்பது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரும், ஆனால் இறுதித் தீர்ப்பு வழங்கப்படக்கூடாது என பெஞ்ச் தெரிவித்தது.
தமிழக அரசு சார்பாக, ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், சென்னை உயர் நீதிமன்றம் இதுவரை 18 முறை விசாரணை நடத்தியுள்ளதாகவும், விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சேவை நிறுவனங்கள், தரவுகளை விசாரணை அமைப்புகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்பது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதால் உச்சநீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டும் என ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் சார்பில் ஆஜரான முகுல் மோகத்கி மற்றும் கபில் சிபல் தெரிவித்தனர்.
ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவை 150 நாடுகளில் செயல்பாடுகளை கொண்ட சர்வதேச நிறுவனங்கள் என்றும், சென்னை நீதிமன்றத்தின் எந்தத் தீர்ப்பும் அவற்றின் சர்வதேச செயல்பாடுகள் மீது தாக்கம் கொண்டிருக்கும் என்றும் தெரிவித்தனர்.
வேணுகோபால், புளுவேல் கேம் பற்றியும், அதில் கொடுக்கப்பட்ட கட்டளைகள் இளம் உயிர்களை பறித்தது பற்றியும் குறிப்பிட்டார். புளுவேல் விளையாட்டு மற்றும் அதன் கியூரேட்டர் பற்றி எதுவும் தெரியவில்லை என்றும், எனவே சமூக ஊடகங்களில் தோன்றும் இத்தகைய மோசமான செய்திகள் அல்லது பொய்ச்செய்திகளை உருவாக்கியவரை அறிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் தரப்பில், தங்கள் மேடைகளுக்கும் புளுவேல் விளையாட்டிற்கும் தொடர்பில்லை என்றும், தரவுகள் மூன்றாம் தரப்புடன் பகிரப்பட்டால் அது தனியுமை மீறல் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தனியுரிமை மற்றும் தேசத்தை நிர்வகிப்பதற்கு இடையே முரண் இருப்பதாகவும், இதற்கான சமநிலை காணப்பட வேண்டும் என்றும் பெஞ்ச் தெரிவித்தது.
பொய்ச்செய்திகள், அவதூறுச் செய்திகள் மற்றும் ஆபாசச் செய்திகள் பரவுவதை தடுக்க மற்றும் தேச விரோத, பயங்கரவாத தகவல்கள் பரவுவதை தடுக்கவும் சமூக ஊடக கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.
ஆதார் எண்ணை பகிர்வது பயனாளிகளின் தனியுரிமை மீறலாக அமையும் என ஃபேஸ்புக் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. வாட்ஸ் அப் செய்திகள் என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளது என்றும் அதை தாங்களே கூட அணுக முடியாது என்றும், எனவே மூன்றாவது தரப்புடன் ஆதார் எண்ணை பகிர முடியாது என்றும் ஃபேஸ்புக் தெரிவித்தது.
இதே போன்ற கோரிக்களை அடங்கிய நான்கு மனுக்கள்– சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 மற்றும் மும்பை மத்திய பிரதேச நீதிமன்றங்களில் 1– நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஃபேஸ்புக் தெரிவித்தது.
செய்தி பிடிஐ : | தமிழில் : சைபர்சிம்மன்