பொய்ச்செய்திகளை தடுக்க வாட்ஸ் அப் புதிய நடவடிக்கை; தகவல் தெரிவிக்க உதவி எண் அறிவிப்பு...
சமூக ஊடகங்களின் வாயிலாக பரவும் பொய்ச்செய்திகள் பெரிய பிரச்சனையாக அமைந்திருக்கும் நிலையில், எதிர்வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு, பயனாளிகள் பொய்ச்செய்திகள் தொடர்பான புகாரை தெரிவிப்பதற்கான உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் பயனாளிகள் தங்களுக்கு வரும் தவறான தகவல்களை +91-9643-000-888 எனும் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்.
மேசேஜிங் சேவையான வாட்ஸ் அப் இந்திய பயனாளிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. எனினும் அண்மைக்காலங்களில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகளில் பொய்ச்செய்திகள் பரவுவது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதனையடுத்து பொய்ச்செய்திகளை கண்டறியவும், அவை பரவுவதை தடுக்கவும் வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒரு செய்தி ஃபார்வேர்டு செய்யப்படுகிறது என்பதை குறிக்கும் வசதி, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஃபார்வேர்டு செய்யப்படும் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை வாட்ஸ் அப் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், பொய்ச்செய்திகளை தடுப்பது தொடர்பான விவாதம் தீவிரமடைந்துள்ளது. சமூக ஊடக சேவையான ஃபேஸ்புக் அண்மையில் 700 க்கும் மேற்பட்ட போலி பக்கங்களை நீக்கியது.
தற்போது வாட்ஸ் அப் பொய்ச்செய்திகள் தொடர்பாக பயனாளிகள் தகவல் தெரிவிக்கும் வசதியை உருவாக்கியுள்ளது. பயனாளிகள் பொய்ச்செய்திகளை +91-9643-000-888 எனும் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்.
ஊடகத் திறன் ஸ்டார்ட் அப் நிறுவனமான ப்ரோடோ (PROTO) உடன் இணைந்து வாட்ஸ் அப் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ் அப் பயனாளிகள் தாங்களுக்கு வந்த தவறான தகவல் அல்லது பொய்ச் செய்திகளை அனுப்பி வைத்தால், அதன் உண்மைத்தன்மையை அறிய வேண்டுமா எனக் கேட்கப்படும். இதற்கு ஆம் அல்லது இல்லை என பதில் அளித்தால், தகவல் பெறப்பட்டது தொடர்பாக உறுதி அளிக்கப்படும். பின்னர், அந்த தகவல் சரி பார்க்கப்பட்டு, அது தொடர்பான விவரம் பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்தி, தெலுங்கு, பெங்காலி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த வசதி தற்போது செயல்படுகிறது. செய்திகள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை சரி பார்க்க பயனாளிகள் அனுப்பி வைக்கலாம்.
இப்படிப் பெறப்படும் பொய்ச்செய்திகள் அடிப்படையில் வாட்ஸ் அப் மற்றும் ப்ரோடோ நிறுவனம், தவறான தகவல்கள் தொடர்பான தரவு பட்டியலை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இது ஆய்வு நோக்கிலான முயற்சியாக அமைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொய்ச்செய்திகள் தொடர்பான ஆய்வுத் திட்டங்களில் பங்கேற்றுள்ள டிக் டீப்பர் மீடியா மற்றும் மீடான் ஆகிய நிறுவனங்கள் ப்ரோடோவுக்கு இந்த ஆய்வில் உதவும்.
பொய்ச்செய்திகள் பரவும் விதத்தை ஆய்வு செய்வது இத்திட்டத்தின் நோக்கம் என்றும் பப்ரோடோ நிறுவனர்கள் ரிர்த்விஜ் பாரிக் மற்றும் நாசர் உல் ஹடி கூறினார். அதிக அளவில் தரவுகள் கிடைக்கும் போது பொய்ச்செய்திகள் தொடர்பான புரிதல் அதிகமாகும் என்றும் அவர்கள் கூறினர். இந்த திட்டம் தொடர்பான தகவல்கள், சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பான இண்டர்நேஷனல் பார் ஜார்னலிஸ்ட் அமைப்பிடம் வழங்கப்பட உள்ளது.