‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆப் தொடங்கிய நண்பர்கள்’ - ஆங்கில புத்தகத்தின் சுறுக்கத்தை தமிழில் ‘மேஜிக்20 தமிழ்’ ஆப்!
வாழ்க்கையில் தங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறவர்களுக்கு பயன்படும் வகையில், மூன்று நண்பர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஆடியோ ஆப் ‘மேஜிக் 20 தமிழ்’. இதில் 20 நிமிடத்தில் ஆங்கிலப் புத்தகத்தின் சுறுக்கத்தை ஆடியோ வடிவில் கேட்கமுடியும்.
கைகளில் ஆறாம் விரலாய் செல்போன் மாறிப் போனதில் இருந்து, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக படிக்கும் பழக்கத்தைக் குறைத்து, வீடியோ பார்க்கும் பழக்கத்திற்கு மாறி வருகின்றனர் என்பது பரவலாக உள்ள கருத்து. ஆனால், சமீபகாலமாக இந்த வீடியோ பார்க்கும் பழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, ஆடியோவாக கேட்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
ஏனென்றால், வீடியோக்களை பார்க்கும் பொழுது நம் முழு கவனமும் அதில் மட்டுமே இருக்க வேண்டி இருக்கிறது. ஆனால், ஆடியோக்களை கேட்க அப்படி இருக்க வேண்டியதில்லை. மற்றொரு வேலையை பார்த்துக் கொண்டே, பயணம் செய்து கொண்டே, வீட்டு வேலைகளை செய்தபடியே ஆடியோக்களை கேட்டு ரசிக்கலாம்.
அதனால்தான் ஆடியோ உலகின் ஒரு பகுதியான பாட்காஸ்ட்-ன் வளர்ச்சி சமீபகாலமாக நம் நாட்டில் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் இப்படி பாட்காஸ்ட் கேட்கும் ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் இந்த ஆர்வத்தையே மூலதனமாகக் கொண்டு, எதிர்காலத்தை சிந்தித்து, வாசு கார்த்திகேயன், அருண் பாரதி மற்றும் பாலாஜி என மூன்று நண்பர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ள ஆப் ’மேஜிக் 20 தமிழ்’ ( https://bit.ly/Magic20Taamil).
நான் பிக்சன் புத்தகங்கள்
வெவ்வேறு துறையைச் சேர்ந்த இந்த மூன்று பேர்களும் ஒன்று சேர்ந்து இந்த மேஜிக் 20 தமிழை உருவாக்கியுள்ளனர். இதில், புனைவு இல்லாத (Non-fiction) ஆங்கில புத்தகங்களின் சாராம்சத்தை 20 நிமிடத்தில் சுருக்கமாகத் தமிழில் தருகிறார்கள். அதோடு கூடவே, 100 நிமிடங்களைக் கொண்ட நிபுணர்களின், மாஸ்டர்கிளாஸ் பாட்காஸ்ட்களும் இந்த ஆப்பில் கிடைக்கிறது.
“புதிதாக கற்றுக் கொள்ள விரும்புபவர்கள், அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என ஆசைப்படுபவர்கள்தான் எங்களுடைய டார்கெட் ஆடியன்ஸ். நான் ஒரு ஊடகவியலாளன் என்பதால், முன்னணி ஊடகங்களில் பணி புரிந்தபோது மக்களின் ரசனைகளை உடனிருந்தே பயணித்து கற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு கட்டத்தில் தனியாக தொழில் தொடங்க வேண்டும் என திட்டமிட்டு, கன்சல்டிங் கம்பெனி ஒன்றை ஆரம்பித்தேன். அருண் பாரதி எனது நண்பர். அடிக்கடி நானும் அருணும் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து பேசுவோம். அப்போது தோன்றிய யோசனைதான் இந்த மேஜிக் 20 தமிழ்,” என்றார் இணை நிறுவனர் வாசு கார்த்திகேயன்.
முதலில் வேறு ஒரு ஐடியாவைத்தான் யோசித்தோம்.. ஆனால், பல கட்டங்களைக் கொண்ட அதை சோதிக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே, புத்தகங்களை மட்டும் எங்கள் கான்செப்ட்டாக எடுத்துக் கொண்டோம்.
2022ல் இதற்கான வேலைகளை ஆரம்பித்தோம். கண்டெண்ட் உருவாக்கி, தொழில்நுட்பத்துடன் இந்த ஆப்பை ஆரம்பிக்க, சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆனது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த செயலியை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினோம், என ஆப் உருவாக்கியது குறித்து நினைவு கூர்கிறார் வாசு.
அறிவை வளர்க்கும் புத்தகங்கள்
ஆங்கிலத்தில் பிரபலமாக, வாழ்க்கைக்கு உதவும் புத்தகங்களை தேர்வு செய்து, அதனை அந்த புத்தக ஜானருக்கு ஏற்ற துறை வல்லுனர்களிடம் கொடுத்து, அவர்கள் அதை முழுமையாக படித்துவிட்டு சுறுக்கத்தை கொடுத்துவிடுகின்றனர். பின்னர், அந்த கதைச்சுறுக்கத்தை 20 நிமிடங்கள் வரும்வகையில் வாய்ஸ்-ஓவர் செய்து ஆப்’பில் பதிவேற்றுகின்றனர்.
மேலும், இது குறித்து இணை நிறுவனரான அருண் பாரதி கூறுகையில்,
“தகவலை (Information) பெறுவது என்பது வேறு, அறிவை (Knowledge) வளர்ப்பது என்பது வேறு. எங்களது மேஜிக் 20 தமிழிலில் நாங்கள் அறிவை வளர்க்கும் விதத்திலான புத்தகங்களைத் தான் 20 நிமிடங்களில் கண்டெண்ட்களாகத் தருகிறோம். எங்களது கண்டெண்ட்கள் மூலம் கேட்பவர்களின் அறிவு மேலும் அதிகமாகும் என்பது எங்களது நம்பிக்கை,” என்றார்.
தினமும் 20 நிமிடக்கள் கேட்டால் போதும். இதுவும் ஜிம் செல்வது மாதிரியான கான்செப்ட்தான். ஜிம் செல்பவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஒல்லியாகவோ, கட்டுமஸ்தானாகவோ முடியாது. அறிவும் அதே மாதிரிதான். ஒரே நாளில் யாராலும் புத்திசாலியாகவும் முடியாது. தினமும் 20 நிமிடங்கள் நம் மனதிற்கு பிடித்த புத்தகத்தை கேட்பதன்மூலம், நம்மால் அது பற்றி சிந்திக்க முடியும். அது நம்ம அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். இதுதான் ’மேஜிக்20’ தமிழின் நோக்கம், என்கிறார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், இல்லத்தரசிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பயனாளர்களைக் கொண்டுள்ள மேஜிக் 20 தமிழுக்கு, இன்குபேட்டர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகப் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பிரதான சந்தாதாரர்களாக உள்ளனர்.
மேஜிக் 20 தமிழ் ஆப்’பில், நேச்சுரல்ஸ் சலூன் & ஸ்பாவின் சி இ ஓ, சி.கே.குமாரவேல், இப்போ பேவின் சி.இ.ஓ., மோகன், Guvi-யின் இணை இயக்குநர் பாலமுருகன், பிஎம் எஸ் பஜார் நிறுவனர் பல்லவராஜன், ரிப்போர்ட் பீ நிறுவனர் அனந்த் மணி மற்றும் எம்2பி பிண்டெக் இணை நிறுவனர் பிரபு ரங்கராஜன் உள்ளிட்டோர் முதலீடு செய்துள்ளனர்.
இலக்கு
“மார்க்கெட்டிங் மற்றும் கண்டெண்ட்டை வாசுவும், நிதி நிர்வாகத்தை அருணும் பார்த்துக் கொள்கிறார்கள். நான் டெக்னாலஜியைப் பார்த்துக் கொள்கிறேன். வீடியோவாக இல்லாமல், ஆடியோவாக மட்டும் இருக்க வேண்டும் என இதை உருவாக்கியுள்ளதால், கேட்பவர்களை எப்படியெல்லாம் திருப்தி படுத்தலாம் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வடிவமைக்கிறோம்.
“புத்தகங்களை ஆடியோ வடிவமாக தருவது மட்டுமின்றி, சில மாஸ்டர் கிளாஸ்களையும் எங்கள் ஆப் மூலமாக எடுத்து வருகிறோம். அதன் ஒவ்வொரு கண்டெண்ட்டும் 100 நிமிடங்கள் கொண்டது,” என்கிறார் பாலாஜி.
இந்தியா தாண்டி இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா என தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலும் மேஜிக் 20 தமிழுக்கு ஆடியன்ஸ் உள்ளனர். இன்னும் இதனை மேலும் பல நாடுகளுக்கு, அங்கிருக்கும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதைத்தான் மேஜிக் 20 தமிழின் இலக்காக வைத்திருக்கின்றனர்.
வீடியோ, பாட்காஸ்டிங் சேவையை ஏஐ துணையோடு மொழிபெயர்க்க உதவும் ஸ்டார்ட் அப்!