உள்ளாட்சித் தேர்தல்: வெற்றி, தோல்வி, ட்ரோல் என தேர்தலில் ஒரே ஒரு வாக்கு செய்த அதிசயம் என்ன?

விஜய் மக்கள் இயக்கத்தினர் 52 பேர் வெற்றி!
0 CLAPS
0

தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் சில தினங்கள் முன் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

மாலை நிலவரப்படி. மாவட்டப் பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில்,

140 இடங்களுக்கான மாவட்ட கவுன்சிலர்கள் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க கூட்டணி - 85, அ.தி.மு.க கூட்டணி - 06 இடங்களும் வென்றுள்ளன. 1,381 இடங்களுக்கான ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க கூட்டணி 284, அ.தி.மு.க கூட்டணி - 41 , பா.ம.க - 10, அ.ம.மு.க - 02, தே.மு.தி.க - 01 இடங்களும் வென்றுள்ளன.

ஒரேயொரு வாக்கு மட்டுமே பெற்ற பாஜக வேட்பாளர்!

கோவை குருடம்பாளையம் 9வது வார்டில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளரான கார்த்திக் என்பவர் ஒரேயொரு வாக்கு மட்டுமே பெற்று கடைசி இடத்தை பெற்றார். இவரது குடும்பம் 4வது வார்டில் இருப்பதால், குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் வாக்கு கூட கிடைக்க முடியாமல் ஒரே ஒரு வாக்கு மட்டும்பெற்றுள்ளார்.

ஒருவாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்க நகர செயலாளர்!

காஞ்சிபுரம் அருகே கருப்படித்தட்டை காந்தி நகர் 1வது வார்டு உறுப்பினர் தேர்தலில் நடிகர் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் பிரபு என்பவர் போட்டியிட்டார். இதில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பிரபு வெற்றி பெற்றுள்ளார். பின்னர், மறுவாக்கு எண்ணிக்கை நடந்தபோதும் பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அனைத்துச் சின்னங்களிலும் வாக்கு!

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலுக்கு அனைத்துச் சின்னங்களிலும் ஒரு வாக்குச் சீட்டில் வாக்களிக்கப்பட்டு இருந்தது . இதையடுத்து அந்த வாக்கு சீட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

வாக்குப்பெட்டி சாவி மாயம்!

பரமக்குடியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காக அதிகாரிகள் காலையிலேயே வந்திருந்தனர். ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, வாக்குப் பெட்டியின் சாவி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், சுத்தியல் மூலம் வாக்குப்பெட்டி உடைத்து வாக்குகளை எண்ணினர்.

விஜய் மக்கள் இயகத்தினர் 52 பேர் வெற்றி!

விஜய் மக்கள் மன்றப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அளித்துள்ள பேட்டியில்,

“ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 169 இடங்களில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டனர். அவற்றில் இதுவரை மாவட்ட வார்டு உறுப்பினர்கள் பதவியில் 52 பேர் வெற்றி பெற்றுள்ளனர்," என்றுள்ளார்.