ஊரடங்கில் கிராம மக்களுக்கு காய்கறிகள் இலவசமாகக் கொடுக்கும் விவசாயி!
ஒடிசாவைச் சேர்ந்த சயாராணி சாஹு என்ற விவசாயி தன் நிலத்தில் விளையும் காய்கறிகளை கிட்டத்தட்ட 15 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் தினக்கூலிகளும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் இவர்களுக்கு உதவ பொதுமக்கள், கார்ப்பரேட்கள், என்ஜிஓ-க்கள், அரசாங்கம் என பல்வேறு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இந்திய கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ளனர். ஊரடங்கு காரணமாக இவர்களால் வேலை செய்து வருவாய் ஈட்டவோ வீட்டிற்கு பணம் அனுப்பவோ முடியவில்லை.
இந்தச் சூழலில் ஒடிசாவைச் சேர்ந்த சயாராணி சாஹு என்கிற விவசாயி தன்னுடைய நிலத்தில் விளையும் காய்கறிகளை கிட்டத்தட்ட 15 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக விநியோகித்துள்ளார். மார்ச் மாதம் 24-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் தனது குடும்பத்துடன் சேர்ந்து இந்த உதவியை செய்து வருகிறார்.
“பிரதமர் நிவாரண நிதிக்கும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் மக்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். என்னிடம் பணம் இல்லை. ஆனால் மக்களுக்கு உதவ விரும்பினேன். எனவே என் நிலத்தில் விளைந்த காய்கறிகளை கிராம மக்களுக்கு இலவசமாக கொடுக்க முடிவு செய்தேன். என்னுடைய செயலை மக்கள் பாராட்டி என் குழந்தைகளை வாழ்த்துகின்றனர்,” என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இடம் தெரிவித்துள்ளார்.
அப்போதிருந்து சயாராணியும் அவரது குடும்பத்தினரும் பைராபூர், அலபாகா, லுங்கா, பிரம்மனிகான், பினாயக்பூர், பசுதேவ்பூர் நகராட்சியின் சில வார்டுகள் ஆகிய இடங்களுக்கு 50 குவிண்டாலுக்கும் அதிகமான அளவில் விநியோகம் செய்துள்ளனர். இதில் தக்காளி, பூசணிக்காய், கத்திரிக்காய், வெண்டைக்காய், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், கீரை ஆகியவை அடங்கும்.
“ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பிருந்தே இதுபோன்ற உதவிகளை செய்து வருகிறேன். மக்களுக்கு தேவை எழும்போது காய்கறிகளும் பாலும் கொடுத்து உதவுவேன். பல்வேறு சடங்குகளுக்கு இரண்டு கிலோ வரை நெய் வழங்கியுள்ளேன். முதியவர்களுக்கு பால் விநியோகித்துள்ளேன்,” என்றார்.
பத்ராக் மாவட்டத்தின் குருதா என்கிற கிராமத்தைச் சேர்ந்த சயாராணி கடந்த 20 ஆண்டுகளாக தனது ஏழு ஏக்கர் நிலத்தில் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார். அதுமட்டுமின்றி 20 மாடுகளை வளர்த்து பால் பண்ணை மூலமாகவும் வருவாய் ஈட்டி வருகிறார். இவரது கணவர் சர்பேஸ்வர் சாஹு இவரது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
மேற்குவங்கத்திலிருந்து ஒரு சில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒடிசாவிற்குச் சென்ற பிறகு பத்ராக் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பரவத் தொடங்கியுள்ளது.
கட்டுரை: THINK CHANGE INDIA