'இனி யாரும் என்னைப் போல் மகனை இழக்கக்கூடாது’ - மகன் நினைவாக 1,500+ சாலைப் பள்ளங்களை மூடியுள்ள தந்தை!
மகனை இழந்த தந்தையின் சோகம் மட்டுமல்ல; தனது மகன் போல் மற்றவர்கள் உயிரை விடக் கூடாது என்பதற்காக சமூக அக்கறையை வெளிப்படுத்தும் ஒரு நடுத்தர வயது தந்தையின் தொடரும் போராட்டக் கதை இது.
“எனது மகனை இழந்துவிட்டேன். ஆனால், இனி எந்த குடும்பத்திலும் இப்படி ஒருவரை இழக்க நான் விடப்போவதில்லை. என் மகனுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு வழியாகவே இதைச் செய்கிறேன். ஒவ்வொரு பள்ளத்தை நிரப்பும்போதும் யாராவது ஒருவரை காப்பாற்றியது போல உணர்வு ஏற்படும். என் மகன் திரும்பி வரப்போவதில்லை. அதேநேரம், மற்றொருவரின் மகன் வீட்டுக்கு பாதுகாப்பாகச் செல்வான் அல்லவா? அதற்காக என் ஆடையில் கரை படிந்தலோ, கைகள் சேற்றில் மூழ்குவதை பற்றியோ கவலைப்பட போவதில்லை..."
- இது, தன்னுடைய 16 வயது மகனைப் பறிகொடுத்த தந்தையின் சோக வார்த்தைகள். அந்த தந்தையின் சோகம் இப்போது உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். இக்கட்டுரையின் முடிவில் நிச்சயம் அந்தத் தந்தையின் வேதனை உங்களை நிச்சயம் தொந்தரவு செய்யும்.
மகனை இழந்த தந்தையின் சோகம் மட்டுமல்ல; தனது மகன் போல் மற்றவர்கள் உயிரைவிடக் கூடாது என்பதற்காக சமூக அக்கறையை வெளிப்படுத்தும் ஒரு நடுத்தர வயது மும்பைக்காரரின் தொடரும் போராட்டக் கதையை பார்ப்போம்.
அன்று நடந்தது என்ன?
2015 ஜூலை அது. 16 வயதான பிரகாஷ் பில்ஹோர் தனது சகோதரர் ராமுடன் வீடு திரும்பும் வழியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிரகாஷ், கல்லூரி ஒன்றில் சேர்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் கனமழை பெய்யத் தொடங்கியதால் ராமுவும், பிரகாஷும் பைக்கை நிறுத்தி நனையாமல் சாலையின் ஓரத்தில் தஞ்சம் அடைந்தனர்.
மழை விட்டதும் மீண்டும் வீட்டை நோக்கி ராம் பைக்கை முறுக்க, பிரகாஷ் பின்னால் அமர்ந்தார். சீப்ஸ் என்ற இடத்தில், தெரு முழுவதும் மழைநீர் தேங்கி நின்றிருந்தது. பள்ளம் எது, மேடு எது எனத் தெரியாத வகையில் தண்ணீர் தேங்கிய அந்த சாலையில் இருந்த ஒரு பள்ளத்தில் கண் இமைக்கும் நேரத்தில் சகோதரர்கள் சென்ற பைக் சிக்க, பைக்கை ஒட்டிய ராம் ஐந்தடி தூரத்துக்கு சென்று விழுந்தார். ஆனால், அவரையும் தாண்டி பத்தடி தூரத்தில் இருந்த தெரு சந்திப்புக்கு தூக்கி வீசப்பட்டார் ராமின் பின்னால் அமர்ந்திருந்த பிரகாஷ்.
நல்லவேளையாக ஹெல்மெட் ராமின் உடலில் காயங்களோடு உயிரைக் காப்பற்றியது. நெற்றியில் ரத்தம் வழிய, நடந்தது என்னவென்று தெரியாமல் விழித்து பார்த்தார் ராம். சாலையின் ஓர் ஓரத்தில் மயங்கிய நிலையில் அசைவில்லாமல் கிடந்தார் பிரகாஷ். நடப்பதை வழக்கம்போல் வேடிக்கை பார்த்த பாதசாரிகள் யாரும் சகோதரர்களுக்கு உதவ முன்வரவில்லை. சுதாரித்துக் கொண்ட ராம் அப்பகுதியில் உள்ள நண்பர்களை உதவிக்கு அழைத்துகொண்டு பிரகாஷை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.
சம்பவத்தின் நிகழ்நேரத்தில் அந்தேரியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் தாதாராவ் பில்ஹோர். பிரகாஷின் தந்தையான தாதாராவ் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்க வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தபோது வந்த மொபைல் அழைப்பு, மகன்கள் விபத்தில் சிக்கியதை அறியவைத்தது.
பெரிய விபத்தாக இருக்காது என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் இல்லாமல் தனியாக மருத்துவமனைக்கு சென்ற தாதாராவுக்கு பாதி வழியில் செல்லும்போது வந்த அடுத்த அழைப்பு இடியாக அமைந்தது.
“பையன்கள் பைக்கில் இருந்து விழுந்துவிட்டார்கள் என்று குடும்பத்தினரிடம் சொன்னேன். அவர்கள் என்னுடன் கிளம்பியபோது காயங்கள் அவ்வளவு பெரிதாக இருக்காது என்று சொல்லிவிட்டு நான் மட்டும் தனியாக மருத்துவமனைக்கு விரைந்தேன். பாதி வழியில் சென்றபோது எனக்கு வந்த இரண்டாவது அழைப்பில் பிரகாஷ் மூளைச்சாவு அடைந்துவிட்டான் என்றார்கள். அந்தக் கணத்தில் எனக்கான உலகம் உடைந்து நொறுங்கியது. நேற்று இதே தருணத்தில் கல்லூரிக்குச் செல்ல புதிய உடைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்துகொண்டிருந்த எனது 16 வயது மகன் இனி இல்லை என்ற செய்தி, என்னால் தாங்க முடியாத துயரத்தை கொடுத்தது..." என்று நினைவுகூர்கிறார் தாதாராவ்.
துக்கத்தை மறைத்துகொண்டு மருத்துவமனைக்கு விரைந்த தாதாராவுக்கு ஆறுதலாக இருந்தது, ராம் உயிரோடு இருக்கும் தகவல். பிரகாஷைக் காப்பாற்ற முடியவில்லை, ஆனால், ராமைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பிரகாஷ் இறந்துவிட்டதை அவர் தனது குடும்பத்தினரிடமோ அல்லது உறவினர்களிடமோ அல்லது ராமுடனோ கூட சொல்லவில்லை. 24 மணி நேரம் கழித்து, குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காலையில் டிப் டாப்பாக கல்லூரிக்கு கிளம்பிச் சென்ற பிரகாஷ், வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட வெற்று உடலாக திரும்பி வந்ததை கண்ட பிரகாஷின் அம்மாவின் அழுகுரல் தாதாராவை நோக்கிக் கேட்டது,
"மகனை நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறியதைப் போலவே மீண்டும் அழைத்து வருவதாக நீங்கள் உறுதியளித்தீர்கள். வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட உடல் என் மகன் அல்ல. என் மகனைத் திருப்பிக் கொடுங்கள்...” என்று கதறினார் அந்தத் தாய்.
நாட்கள் கடந்தன. தங்களின் கனவாக இருந்த மகனின் மறைவு குடும்பத்தின் சந்தோசத்தை பறித்தது.
ஒரு தந்தையின் உன்னத முடிவு
தாதாராவ் குடும்பத்தில் ஆங்கில வழிக் கல்வி பயின்றது பிரகாஷ் மட்டுமே. தனது குடும்பத்தை முன்னேற்ற ஒவ்வொரு செயலையும் செய்தது பிரகாஷே. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ஆங்கிலத்தில் பேச தந்தைக்கு கற்றுக்கொடுத்து முதல் கடைக்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது என பிரகாஷ் செய்த செயல்கள் குடும்பத்தின் நீங்கா நினைவுகளாக நினைவுப்படுத்தி கொண்டே இருந்தது.
மகனை இழந்த துக்கம் அவர்களை வாட்டி வதைத்தாலும் தாதாராவ் யாரும் எதிர்பார்க்காத ஒன்றைச் செய்ய முடிவு செய்தார். உடைந்த பேவர் பிளாக்குகள், கற்கள் மற்றும் மண்வெட்டியுடன் ஆயுதம் ஏந்திய அவர், பிரகாஷ் இறப்புக்குக் காரணமாக இருந்த சாலை பள்ளங்களை சரிசெய்ய புறப்பட்டார்.
பிரகாஷ் இறந்த ஒரு மாதத்திற்குள் தான் கண்ட ஒவ்வொரு பள்ளத்தையும் தனது சொந்த முயற்சியில் சரிசெய்தார்.
மகனின் மரணம் மட்டுமே இந்த முயற்சியை எடுக்க தாதாராவை தூண்டவில்லை. அடுத்தடுத்த நாட்களில் மும்பையின் அம்பர்நாத்தில் தாய் - மகள் இதேபோல் சாலை பள்ளத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது, பாந்த்ரா பகுதியில் ஓர் இறப்பு என தொடர்ச்சியான சம்பவங்கள் தொந்தரவு செய்ய, இனியொரு மரணம் இப்படி நடக்கக் கூடாது என்ற எண்ணத்தால் தனி ஆளாக சாலை பள்ளங்களை சரி செய்ய முடிவெடு்த்தார்.
ஆகஸ்ட் 2015 முதல் இன்றுவரை தாதாராவ் சரிசெய்த பள்ளங்களின் எண்ணிக்கை 1500+ இருக்கும். ராவின் சமூக அக்கறை அவருக்கு 'மும்பையின் பாத்ஹோல் தாதா' என்ற பெயரை பெற்றுகொடுத்தது.
“குழிகளை நிரப்பவும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் ஒருவர் இறக்கும் வரை அதிகாரிகள் எப்படி காத்திருந்தார்கள் என்பதை நான் கவனித்தேன். பிரகாஷைப் போல இனி யாரையும் சாக விடக் கூடாது என்பதால் இதை சொந்தமாக செய்ய முடிவு செய்தேன். உடைந்த பேவர் பிளாக், மண் மற்றும் கற்களைப் பயன்படுத்தி, பள்ளங்களை நிரப்ப ஆரம்பித்தேன். நான் நிரப்பிய சாலையில் கார்களும் வாகன ஓட்டிகளும் எளிதில் கடந்து செல்வதைப் பார்த்ததும், இதைத் தொடர வேண்டும் என்று நினைத்தேன். இப்படித்தான் இந்த பயணம் தொடங்கியது,” என்கிறார்.
தாதாராவ் தனது பணியில் தெளிவாக இருந்தாலும் விமர்சனங்கள் அவரை விடவில்லை. மும்பை மாநகராட்சி செய்ய வேண்டியதை இவர் செய்வதால் அதிகாரிகள் வேலையில்லாமல் ஓய்வெடுக்கிறார்கள். அரசு அதிகாரிகளை சோம்பேறி ஆக்குகிறார் என்பதே அவர் மீதான விமர்சனம். அதற்கு தாதாராவோ,
“ஒரு பள்ளத்தை அதிகாரிகள் தங்கள் நடைமுறைப்படி அதை நிரப்ப 15 முதல் 20 நாட்கள் வரை ஆகும். அந்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் காயமடையலாம். அதனால், அதுவரை ஒரு செயல்பாட்டுத் தீர்வைக் கொடுக்க நான் ஏன் என் ஆற்றல்களைப் பயன்படுத்தக் கூடாது என்று நினைத்தேன். எனக்கு இது சிரமம்தான். பள்ளங்களைச் சரிசெய்வதில் நாம் அனைவரும் கைகோர்த்தால், மும்பை மட்டுமல்ல, இந்தியாவும் குழியில்லாத நாடாக மாறும் என்று நான் நினைக்கிறேன். அதற்குத் தேவையானது உங்கள் நேரத்தின் பத்து நிமிடம் மட்டுமே. உங்கள் கைகளும் கால்களும் மட்டுமே அழுக்காகிவிடும். ஆனால் அதை நிரப்பிய பிறகு நீங்கள் அடையும் திருப்தி ஈடு இணையற்றது. இது ஓர் உயிரைக் காப்பாற்றுவது போன்றது,”என்கிறார்.
இப்படி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் தாதாராவின் மற்றொரு வேண்டுகோள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது.
“தயவுசெய்து ஹெல்மெட் அணியுங்கள். நீங்கள் வேறொரு நபருடன் சவாரி செய்தாலும் சரி, அவர்களையும் ஹெல்மெட் அணியச் சொல்லுங்கள். நான் இதை வலியுறுத்தாமல் இருந்ததால்தான் இன்று என் மகன் பிரகாஷை இழந்து வருந்துகிறேன். பிரகாஷைப் பறிகொடுத்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் நிம்மதி இல்லை.”
பிரகாஷ் இழப்புக்கான சட்டப் போராட்டம் ஒருபுறம் நடந்து வருகிறது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் சரியான நீதி கிடைக்கவில்லை என்றாலும் என்றோ ஒருநாள் தன் மகன் இறப்புக்கான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சாலை பள்ளங்களை சரி செய்யும் முயற்சியை தொடர்ந்து வருகிறார்.
இந்தப் பணியில் இப்போது தாதாராவ் தனியாள் இல்லை. அவர் ஏற்படுத்திய மாற்றத்தின் விளைவு மும்பைவாசிகள் 'பில் இன் தி பாட்ஹோல்ஸ் ப்ராஜெக்ட்' என்கிற திட்டத்தை தொடங்கி, அதற்காக ஒரு மொபைல் செயலியை உருவாக்கி உள்ளனர். சாலையில் பள்ளத்தை மும்பை மாநகராட்சியுடன் சேர்ந்து சரிசெய்ய இந்த மொபைல் ஆப் உதவுகிறது. மக்கள் சாலை பள்ளங்களை கண்டால் அவற்றை புகைப்படத்துடன் ஆப் மூலமாக புகார் செய்தால் போதும் அதிகாரிகள் தரப்பில் இருந்து சரிசெய்யப்படுகிறது.
இந்த மாற்றம் தாதாராவ் காரணமாக ஏற்பட்டது. இன்று, மும்பையை மட்டுமின்றி, இந்தியாவை குழிகள் இல்லாத நாடாக மாற்றும் பணியில் நூற்றுக்கணக்கான மக்கள் தாதாராவ் உடன் இணைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஹைதராபாத்தில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் பால கங்காதர திலக். இதுவரை 1,500 குழிகளை நிரப்பி 'தெலுங்கானாவின் பெருமை' என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.
சாலைப் பள்ளங்கள் ஏதோ மும்பைக்கான பிரச்சினை என்பதல்ல. சமீபத்தில் வெளியான மலையாள படம் ‘ஞான் தான் கேஸ் கொடு’ பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் இது இந்தியாவுக்கான பிரச்சினை என்று. அந்தப் படம் சாலை பள்ளங்களால் உண்டாகும் விளைவுகளை அரசியல் சட்டயர் தன்மைகளுடன் பேசி இருக்கும். பலருக்கும் தெரியாத ஒன்று, அந்தப் படம் தமிழகத்தில் சாலை பள்ளத்தால் ஒருவர் உயிரை இழந்த உண்மைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
இந்தியாவில் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாத தேசியப் பிரச்சனையை ஒற்றை ஆளாக மாற்ற முற்பட்டு வரும் தாதாராவ் போன்றவர்கள் ரியல் ஹீரோக்களே!
இறந்த மகன் நினைவாக அரசுப்பள்ளியில் ரூ.11 லட்சத்திற்கு வகுப்பறை கட்டிய தந்தை!
Edited by Induja Raghunathan