இறந்த மகன் நினைவாக அரசுப்பள்ளியில் ரூ.11 லட்சத்திற்கு வகுப்பறை கட்டிய தந்தை!
இயற்கை பேரழிவில் சிக்கி உயிரிழந்த தன்னுடைய மகனின் நினைவாக அவரது தந்தை சாத்தூர் அருகே அரசுப் பள்ளிக்கு வகுப்பறை ஒன்றை கட்டி கொடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தொம்பக்குளத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகன் ராம்கௌதம் பி.டெக் மற்றும் எம்.எஸ் முடித்துவிட்டு அமெரிக்காவில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். மகனின் வளர்ச்சியை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்த அவரின் பெற்றோருக்கு அது நீடிக்கவில்லை.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளப்பெருக்கின்போது அதில் சிக்கிய தனது நண்பரை காப்பாற்ற ராம்கௌதம் முயன்றிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ராம்கௌதம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அவரின் குடும்பத்தினரை சுழற்றிப் போட்டது.
இயற்கை பேரிடரில் சிக்கிக்கொண்டவரை மீட்பதற்காக பொதுநலத்துடன் உதவச் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரின் நினைவாக ராம்கௌதமின் தந்தை அர்ஜுனன் ரூ.11 லட்சத்தில் அரசுப் பள்ளிக்கு வகுப்பறை கட்டி கொடுத்துள்ளார்.
சாத்தூர் தொம்பக்குளம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.11 லட்சம் செலவில் ராம்கவுதம் நினைவு வகுப்பறை ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். மகனின் நினைவாக தந்தை செய்திருக்கும் இந்த செயலை பள்ளிக்கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்றவர் நெகிழ்ந்தனர்.
சாத்தூர் எம்.எல்.ஏ.ரகுராமன், மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் பங்கேற்று தலைமை வகித்து வகுப்பறைக் கட்டிடத்தைத் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மாற்றுத்திறனாளி மகனுடன் தவித்த தாய்க்கு உதவி - 24 மணி நேரத்தில் கோவை ஆட்சியர் செய்த உதவி!