'தாய், தந்தை இல்லை; அரசு விடுதியில் வாழ்க்கை- ஒலிம்பிக் செல்லும் மதுரை ரேவதி!
கலப்பு 4*400 மீ ரிலே பிரிவில் ஒலிம்பிக்கிற்கு தகுதி!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 26 போ் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் நேற்று அறிவித்தது. இதில் தமிழ் மக்கள் பெருமைப்படும் வகையில் கலப்பு 4*400 மீட்டர் ரிலே தடகளப் போட்டியில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றிருக்கிறார் தமிழக பெண்ணான ரேவதி வீரமணி.
ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்த ஒலிம்பிக் பயிற்சி முகாமில் கலப்பு 4*400 மீ ரிலே பிரிவுக்கு நடந்த போட்டியின் மூலம், தற்போது ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் ரேவதி.
ஏற்கனவே பல சர்வதேச தடகளப் போட்டிகளில் தனது தடத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் ரேவதி, தற்போது ஒலிம்பிக் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அடுத்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த வெற்றிக்குப் பின்னால் பல்வேறு துயரங்கள் நிறைந்த கதையை பின்னணியாகக் கொண்டவர் இந்த ரேவதி.
தமிழ் மண்ணின் கலாச்சார நகரமாகப் புகழப்படும் மதுரையை அடுத்த சக்கிமங்களம் என்று சிற்றூரைச் சேர்ந்தவர் ரேவதி. நிதி ரீதியாக நிலையற்றக் குடும்பத்தில் பிறந்த இவர், நான்காம் வகுப்பு படிக்கும்போதே இவரின் தந்தை மரணமடைந்துவிட்டார்.
இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் அடுத்த வருடமே அவரின் தாயும் மரணம் அடைந்த செய்தி அந்தக் குடும்பத்தை நிலைகுலையவைத்தது. தாய், தந்தை இல்லாத நிலையில் தனது தங்கையுடன் நிர்கதியாக நின்ற ரேவதிக்கு இருந்த ஒரே ஆறுதல் அவரின் பாட்டி மட்டும்தான்.
பாட்டியின் அரவணைப்பில் இருந்தாலும், கல்விக்காக அரசு விடுதியிலேயே தங்க வேண்டிய நிலை. தனது சகோதரியுடன், அரசாங்கத்தால் நடத்தப்படும் விடுதிகளில் தங்கி, தினசரி கூலித் தொழிலாளியாகப் பணியாற்றிய தனது பாட்டியின் ஆதரவோடு அரசு நடத்தும் பள்ளிகளில் படித்து வந்தார் ரேவதி.
பள்ளியில் தான் இவரின் ஓட்டப்பந்தய ஆரம்பக் காலகட்டம். ஒருமுறை மண்டலப் போட்டிகளில் கலந்துகொண்டு ஷூ இல்லாமல் ரேவதி ஓடும்போது அவரின் பயிற்சியாளர் கண்ணன் அதை கவனித்து இருக்கிறார். அந்த பயிற்சியாளர் பின்னாளில் ரேவதிக்கு அடைக்கலம் கொடுத்து இந்த நிலைக்குக் கொண்டுவர காரணமாகி இருக்கிறார்.
இடையில், ரேவதி விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் முழு உதவித்தொகையுடன் கல்லூரியில் படித்து வந்தபோது திடீர் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தனது படிப்பை கைவிட வேண்டியிருந்தது. அதே உடல்நல பிரச்னை அவரின் தடகள பயிற்சியில் இருந்தும் வெளியேற வைத்தது.
இந்தமுறையும் அவரை களத்துக்கு மீண்டும் வர உதவியது அவரின் பயிற்சியாளர் கண்ணன் தான். ரேவதியின் பாட்டியிடம் சென்று ரேவதியின் எதிர்காலம் குறித்து விரிவாக எடுத்துரைத்து அவரை படிப்பிற்கும், தடகளப் போட்டிக்கும் மீண்டும் திரும்ப உதவியிருக்கிறார்.
அவரின் உதவியால் அடுத்த ஒரு வருடத்திற்குள் தனது முதல் தேசியப் பதக்கத்தை வென்று அசத்தினார் ரேவதி. இந்த வெற்றி அவரை கிராமத்தில் ஒரு மினி பிரபலமாக மாற்றியது.
அவரது சாதனைகள் செய்தித்தாள்களில் வெளியாக மக்கள் அவரை ஊக்குவிக்கத் தொடங்கினர். இப்படி அவருக்குக் கிடைத்த உதவி, மற்றும் ஊக்கம் காரணமாக கடினப் பயிற்சியை மேற்கொண்டு தற்போது ஒலிம்பிக் போட்டி வரை சென்றுள்ளார். தற்போது ரயில்வேயில் பணிபுரிந்து வரும் ரேவதி, நிச்சயமாக இந்த நாட்டில் வளர்ந்து வரும் பல விளையாட்டு வீரர்களுக்கு ஒரு உத்வேகம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
தகவல் தொகுப்பு: மலையரசு