16 வயதில் தொடங்கிய பயணம்; டோக்கியோ ஒலிம்பிக்கில் கலக்க இருக்கும் தமிழ்ப் பெண் நேத்ரா குமனன்!
டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தில் இருந்து 4 பேர் பங்கேற்கும் சரித்திரம்!
டோக்கியோ ஒலிம்பிக் தொடர் சென்ற ஆண்டே நடந்திருக்க வேண்டியது. ஆனால் உலகை முடக்கிய கொரோனா ஒலிம்பிக் தொடரையும் விட்டு வைக்கவில்லை. இதனால் ஓராண்டு தள்ளி ஜூலை மாதம் 23ம் தேதி டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நடக்க இருக்கிறது.
இதற்காக ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. தற்போது இந்த தொடருக்கு பல்வேறு விளையாட்டு வீரர்கள் தேர்வாகிக் கொண்டு வருகின்றனர். முன் எப்போதும் இல்லாத அளவு, இந்த முறை ஒலிம்பிக் தொடருக்கு தமிழகத்தில் இருந்து வீரர்கள் தேர்வாகி வருவது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது.
சமீபத்தில் டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஷரத் கமல், சத்யன் ஞானசேகரன், வாள்சண்டை வீராங்கனை பவானிதேவி, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஆகியோர் ஒலிம்பிக் தொடருக்கான தகுதி சுற்றில் வென்று சாதித்துள்ளனர். இதில், பவானிதேவி வாள்சண்டை பிரிவில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் வீரர் ஆவார். இவர்கள் வரிசையில் தற்போது மேலும் ஒரு தமிழ்ப்பெண் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு தேர்வாகி இருக்கிறார்.
அவர் சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமனன் என்பவர் தான். படகோட்டுதல் வீராங்கனையான நேத்ரா ‘Laser Radial' பிரிவில் தகுதி சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்று டோக்கியோவுக்கு பயணப்பட இருக்கிறார்.
படகோட்டுதல் ‘Laser Radial' பிரிவானது தனிநபர் போட்டி ஆகும். இதன்மூலம் இந்தப் பிரிவில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் பெண் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் தமிழ்ப்பெண் நேத்ரா. இதனையடுத்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
யார் இந்த நேத்ரா?
சென்னையைச் சேர்ந்த நேத்ரா சிறுவயது முதலே படகோட்டும் போட்டிகளில் தீரா ஆர்வம் கொண்டு அதற்காக பயிற்சி எடுத்தது வந்தார். அதில் தேறிய நேத்ரா, 2014, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டிகளில் பங்கேற்றார். அதிலும் 2014 ஆசிய விளையாட்டு போட்டிகளில் நேத்ரா பங்கேற்றபோது அவரின் வயது 16 மட்டுமே. அந்த தொடரில் 7ம் இடம் வந்தவர்,
அடுத்த 2018 போட்டியில் 5ம் இடத்துக்கு முன்னேறினார். இதன்பின் நடந்த மியாமி உலகக்கோப்பை போட்டியில் வெண்கலம் வென்று உலகக்கோப்பை போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார். இப்படி கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தன் முயற்சிகளால் முன்னேறிக்கொண்டு வந்த நேத்ரா தற்போது இந்த சரித்திர சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஸ்பெய்னுக்கு சென்று பயிற்சி எடுத்து வந்தவர், அந்த பயிற்சி கைகொடுக்க அதன்படியே ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வாகி இருக்கிறார்.
வாழ்த்துக்கள் நேத்ரா!