பெற்றோர் மீது அதீத பாசம்; தாய், தந்தைக்கு சிலை வைத்து கோயில் கட்டிய இளைஞர்!
பெற்றோர்களை பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் இதே காலத்தில், தாய், தந்தை மீது கொண்ட அதீத அன்பால் அவர்களுக்கு பாசக்கார மகன் ஒருவர் கோயில் கட்டி, ஆண்டு தோறும் கும்பாபிஷேகம் செய்து வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்களைப் பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் இதே காலத்தில், தாய், தந்தை மீது கொண்ட அதீத அன்பால் அவர்களுக்கு பாசக்கார மகன் ஒருவர் கோயில் கட்டி, ஆண்டு தோறும் கும்பாபிஷேகம் செய்து வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவசர அவசரமான ஆன்லைன் யுகத்தில் பாசம், நேசம், பந்தம் ஆகியவை அர்த்தமற்றதாகி வருகிறது. குறிப்பாக கூட்டுக்குடும்பம் என்ற பழக்கம் வழக்கொழிந்து வருவதால், முதியவர்கள் எனும் அனுபவ பொக்கிஷங்களை வீடுகளில் வைத்து பாதுகாக்க முடியாமல், முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் அவலம் அதிகரித்து வருகிறது.
’தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற பொன்மொழிகளை குழந்தை பருவத்திலேயே கற்பித்தாலும் மனைவி, குழந்தைகளுக்கு அடுத்த நிலையில் தான் பெற்றோர் மதிக்கப்படுகின்றனர்.
2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் முதியவர்களின் எண்ணிக்கை 46சதவீதம் அதிகரிக்கும் என்று ஐநாவின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, தற்போது 943 மில்லியனாக இருக்கும் உலக முதியவர்களின் எண்ணிக்கை 1.4 பில்லியனாக உயருமாம்.
முதியவர்களின் முக்கியத்துவத்தை போற்றும் விதமாக ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே முதியோரை இன்றைய தலைமுறை கொண்டாடுகிறதா எனக்கேட்டால், அதற்கு கேள்விக்குறி மட்டுமே பதிலாக மிஞ்சுகிறது.
தாய், தந்தை நினைவாக கோயில் கட்டி கும்பாபிஷேகம்:
இப்படி தன்னை பெற்று, பேணி வளர்த்து சான்றோன் ஆக்கி அழகு பார்த்த பெற்றோரை புறக்கணிக்கும் பிள்ளைகளுக்கு மத்தியில் அவர்களை போற்றி பாதுக்காக்கும் பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை காட்டியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த ரமேஷ் குமார்.
புளியங்குளம் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் குமார், கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். பெற்றோர் மீது அளவற்ற அன்புடன் வாழ்ந்து வந்த இவர், அவர்கள் மறைவிற்கு பிறகு திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தீபாலபட்டி என்ற கிராமத்தில் 2 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில், தமது பெற்றோருக்கு கோயில் கட்டியுள்ளார். அத்துடன் தத்ரூபமான தனது தாய், தந்தையின் மார்பளவு சிலையையும் வைத்து வழிபட்டு வருகிறார்.
கிடா வெட்டி, கிராம மக்களுக்கு விருந்து:
ரமேஷ்குமார், ஆண்டுதோறும் அப்பா, அம்மாவின் நினைவு தினத்தை அவர்களது நினைவிடத்தில் சிறப்பான முறையில் வழிபாடு நடத்தி நினைவுகூர்ந்து வருகிறார். தற்போது பெற்றோரின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களது நினைவாக கட்டப்பட்ட கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.
இந்த கும்பாபிஷேகத்திற்கு சொந்த பந்தம், கிராமத்தினர் என 500க்கும் மேற்பட்டோரை அழைத்து கிடா வெட்டி தடபுடலாக விருந்து வைத்து சிறப்பித்துள்ளார். மேலும், மேள, தாளங்கள் முழங்க, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் ஒரு திருவிழாவைப் போலவே தமது தாய், தந்தையரின் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்திருக்கும் ரமேஷ் குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பெற்ற மகன் தாய், தந்தைக்கு கோயில் கட்டி, சிலை நிறுவியுள்ள செய்தியைக் கேள்விப்பட்ட கோவை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அதனைக் காண குவிந்து வருகின்றனர்.
தொகுப்பு: கனிமொழி