3 லட்சம் பேர்; ரூ.250 கோடி செலவு: முன்னாள் எம்.பி வீட்டு பிரம்மாண்ட திருமண வரவேற்பு!
தெலங்கானாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஒருவர் தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை 3 லட்சம் பேரை அழைத்து, 250 கோடி ரூபாய் செலவு செய்து மிகவும் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளது ஒட்டுமொத்த சோசியல் மீடியாவிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.
தெலங்கானாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஒருவர் தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை 3 லட்சம் பேரை அழைத்து, 250 கோடி ரூபாய் செலவு செய்து மிகவும் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளது ஒட்டுமொத்த சோசியல் மீடியாவிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.
பிரம்மாண்ட திருமண வரவேற்பு:
இந்தியாவில் எப்போதுமே திருமணம் என்பது மிகப்பெரிய கொண்டாட்டமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெரும்பாலான இந்து முறைப்படி திருமணங்கள், 3 முதல் 4 நாட்கள் வரை சடங்கு மற்றும் கொண்டாட்டங்களுடன் கோலாகலமாக நடத்தப்படுகிறது. இத்தகைய திருமணங்களுக்காக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுவது உண்டு.
இந்நிலையில், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான பொங்குலேடி சீனிவாச ரெட்டி தனது மகள் ஸ்வப்னியின் திருமணத்தை வெகு பிரம்மாண்டமாக நடத்தி அனைவரையும் அசத்தியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் கம்மம் மக்களவை தொகுதியின் முன்னாள் எம்.பியும், கோடீஸ்வரருமான இவரது மகளின் திருமணம் ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்தோனேசியாவின் பாலியில் திருமணம் நடைபெற்றது, இதற்காக 500 விருந்தினர்கள் சிறப்பு விமானம் மூலமாக இந்தோனேசியா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தெலங்கானாவை மிரளவைத்த திருமண வரவேற்பு:
இந்தோனேஷியாவில் மகளின் திருமணத்தை நடத்தி முடித்த பொங்குலேடி சீனிவாச ரெட்டி, தனது மக்களவை தொகுதியான கம்மத்தில் உள்ள எஸ்ஆர்கார்டனில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கிட்டதட்ட 3 லட்சம் விருந்தினர்கள் அழைக்கப்பட்டு இருந்ததால், பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் விதமாக மக்கள் ‘பாகுபலி’ கூட்டம் என அழைக்கின்றனர். இந்நிகழ்ச்சிக்காக 100 ஏக்கர் நிலப்பரப்பில் 60,000 கார்கள் நிறுத்தக்கூடிய வகையில் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது.
விழா நடைபெறும் இடத்திற்குச் செல்ல புதிய மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டன. கம்மம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. அழைப்பிதழ் உடன் கிராம மக்களுக்கு அழகிய சுவர் கடிகாரமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
3 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் வரவேற்பு அரங்கமும், உணவுக்கூடமும் மிகப்பெரிய அளவில் டிசைன் செய்யப்பட்டன. அதாவது, 30 ஏக்கரில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி அரங்கமும், 25 ஏக்கரில் உணவுக்கூடம் அமைக்கப்பட்டு இருந்தது.
சுமார் மூன்று லட்சம் பேருக்கு உணவு அசைவம் மற்றும் அறுசுவை உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மேலிட நிர்வாகிகளுக்கு உணவுப்பரிமாறி, தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த பிரபல சமையல் கலைஞர் ஜி யாதம்மாவால் தலைமையில் உணவு தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன.
ரூ. 250 கோடி செலவு:
கலைநயம் மிக்க பிரம்மாண்ட அரங்கம், 3 லட்சம் பேருக்கு தடபுடலான விருந்து, பரிசுப்பொருட்கள் என தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்துவதற்காக மட்டும் பொங்குலேடி சீனிவாச ரெட்டி, 250 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ள இந்த பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கம்மம் சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.
தொகுப்பு - கனிமொழி