மறைந்த மனைவியை சிலை வடிவில் புதுவீட்டில் அமரவைத்த அன்பு கணவர்!
மனைவி மீதான அன்பால் கணார் ஸ்ரீனிவாஸ் செய்த இச்செயல் பலரையும் நெகிழச்செய்துள்ளது.
பட்டுநூலால் இழைத்த ஜரிகைகள் மின்னிய இளஞ்சிவப்பு நிறச்சேலை அணிந்த, நடுத்தர வயதுபெண் ஒருவர் வீட்டு வரவேற்பு அறையில் வெண்ணிற இருக்கையில் வீட்றிருக்கிறார். அவரது தோள்பட்டையில் கைப்போட்டு, முகமுழுக்க மகிழ்வுடன் அந்த கணவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் நேற்று இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு பல நெஞ்சங்களின் அன்பை பெற்றது. ஏனெனில், மறைந்த மனைவியின் கடைசி ஆசையாகி போன கனவு இல்லத்தை கட்டியெழுப்பிய கணவர், அவருடைய மனைவியை தத்ரூபமாக சிலை வடித்து, புதுவீட்டில் அமர செய்து கொண்டாடிய புதுமனை புகுவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.
கர்நாடகாவிலுள்ள கொப்பால் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான ஸ்ரீனிவாஸ் குப்தா, கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி மனைவியின் கடைசி ஆசையான கனவு இல்லத்தை கட்டிமுடித்து புதுமனை புகுவிழாவை கொண்டாடியுள்ளார்.
புதுவீட்டு விழாவிற்கு வருகைதந்த விருந்தினர்கள் அனைவரும் வரவேற்பறையை அடைந்தவுடனே பேச்சில்லாமல் திகைத்து போயினர். பங்களாவின் அழகைக் கண்டு அவர்கள் வியக்கவில்லை, வரவேற்பறையிலிருந்த இருக்கையில் தத்தரூபமாய் ஸ்ரீநிவாசின் மனைவியே அமர்ந்திருப்பது போன்ற சிலையை கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
“நான் என் மனைவியின் நினைவாக ஏதாவது சிறப்பு செய்ய விரும்பினேன். அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பாரா ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார்...'' என்று ஸ்ரீனிவாஸ் நியூஸ் மினிட்டிடம் விவரித்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ரீனிவாசின் மனைவியான எம்.வி.கே மாதவி அவர்களது இரு மகள்களுடன் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தபோது, ஒருபயங்கரமான விபத்தை சந்தித்துள்ளார். கோலார் நெடுஞ்சாலையில் வேகமாக வந்த டிரக்கை கார் டிரைவர் தவிர்க்க முயன்றும், கண்ணிமைக்கும் நேரத்தில் கார் லாரி மீது மோதியது. லாரியின் பின்புறம் காரில் வேகமாக மோதியதில், மாதவி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
லேசான காயங்களுக்கு ஆளான அவரது மகள்கள் உடல் ரீதியாக குணமடைந்தாலும், மாதவியின் மரணம் குடும்பத்தை உடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவியின் நினைவாக ஒரு வீட்டைக் கட்ட முடிவு செய்ததாகக் கூறும் ஸ்ரீனிவாஸ் அதற்காக அவர் 25க்கும் மேற்பட்ட கட்டிடக் கலைஞர்களை அணுகி உள்ளார்.
ஆனால், அவரது மனைவிக்கு ஏதாவது சிறப்பு உருவாக்கும் எண்ணத்தினை நிறைவேற்றும் வகையிலான பரிந்துரைகளை எவரும் வழங்கவில்லை. தலைமுடியை ஏற்றுமதி செய்யும் வணிகத்தை மேற்கொண்டு வரும் ஸ்ரீனிவாஸ், ஒரு வருடத்திற்கு முன்பாக வணிக நோக்கமாக கடாக் சென்றுள்ளார்.
அப்போது, அவரது விற்பனையாளர்களில் ஒருவர் மூலமாக மகேஷ் ரங்கநாதவர் என்ற கட்டிடக் கலைஞரைப் பற்றி கேள்விப்பட்டார். புதிய வீட்டின் வரவேற்பறையில் மனைவியின் லைஃப் சைஸ் சிலையினை நிறுவுவதற்கான யோசனையை மகேஷ் பரிந்துரைத்தார்.
“ஆந்திரா பாக்யநகரில் ஒரு புதிய வீடு கட்டவேண்டும் என்பது அவளுடைய கடைசி விருப்பமாக இருந்தது. நிலத்தில் பூமி பூஜை விழா நடைபெற்றபோது அவள் இருந்தாள். ஏன், புதிய வீட்டின் 3டி ஓவியங்கள் உட்பட வீட்டிற்காக எல்லாவற்றையும் அவளே திட்டமிட்டாள். ஒரு விபத்தில் நாங்கள் அவளை இழந்துவிட்டோம். ஆனால், புதுமனை விழாவின் போது நாங்கள் அவளை மிஸ் பண்ண விரும்பவில்லை.
அவள் எங்களுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதற்காக, ஆரம்பத்தில் அவளது மெழுகு சிலையை உருவாக்கத் திட்டமிட்டோம். எனது நண்பர் ஒருவர், லைஃப் சைஸ் சிலைகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருந்த பெங்களூருவைச் சேர்ந்த பொம்மை தயாரிக்கும் நிறுவனமான பாம்பே மானேவை பற்றி கூறினார்.
அந்நிறுவனத்தினர் மெழுகு சிலைக்கு பதிலாக சிலிக்கான் சிலை நேச்சுரலாகவும் நேர்த்தியாவும் இருக்கும் என்று பரிந்துரைந்தனர், என்று டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார் ஸ்ரீனிவாஸ்.
“நாங்கள் பாம்பே மானேவுக்கு மூன்று நான்கு முறை சென்று, அவர்களிடம் மாதவியின் புகைப்படங்களைக் கொடுத்தோம். இறுதியாக, ஒரு ஆண்டு முடிவில் அவர்கள் நாங்கள் எதிர்பார்த்ததை உருவாக்கித்தந்து எங்களை திருப்தியடையச் செய்தனர். மாதவியை பார்த்த போது, எனக்கு பேச்சே இல்ல. உண்மையில், ரியாலிட்டிக்குள் திரும்பவே சில நிமிடங்கள் எடுத்தது. அவளுடைய அதே நிறத்தோற்றம், அதே உடலமைப்பு, அதே உயரம், அதே கண்கள், ‘இது அவள் தான், இது தான் படைப்பு,'' என்று நெகிழ்ந்தார் ஸ்ரீனிவாஸ்.
பெங்களூரிலிருந்து மாதவியின் சிலையை பாக்யாநகருக்கு காரில் அழைத்துச் சென்ற அத்தருணங்களில் திளைத்து போன அவர்கள், இதை பகிரங்கப்படுத்த நினைக்கவில்லை என்றும் ஆனால் எப்படியோ செய்தி பரவிவிட்டது என்றும் தெரிவித்தனர்.
வீட்டின் கட்டுமானப் பணிகள் ஜூலை மாத தொடக்கத்தில் முடிக்கப்பட்டது. வீட்டு கிரகபிரவேசத்திற்காக நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்த ஸ்ரீனிவாஸ், அனைவரிடமும் வீட்டில் ஒரு ஆச்சரியம் இருப்பதாக மட்டும் கூறி அழைப்பு விடுத்துள்ளார்.
"வீட்டுக்கு வந்திருந்த எல்லோரும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் சில வினாடிகள், என் மனைவியா தான் இருக்குமோவென நம்பினர். பங்களா கட்ட வேண்டும் என்பது என் மனைவியின் கனவு. இப்போது அவள் இதில் வாழ இல்லை. ஆனால், இந்த சிலை அவள் இன்னும் இங்கே இருக்கிறாள் என்பதை வலுப்படுத்த ஒரு வழியாகும்,'' என்ற உணர்ச்சி மிகுந்து தெரிவித்தார் ஸ்ரீனிவாஸ்.
கட்டுரையாளர்: ஜெய்ஸ்ரீ | தகவல் மற்றும் பட உதவி: தி நியூஸ் மினிட்