நெருக்கடி காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராகும் மா.சுப்ரமணியன்: மாஸ் ஆக சவாலை சமாளிப்பாரா?
தமிழக மருத்துவ - மக்கள் நல்வாழ்வுத் துறை துறை அமைச்சர் பொறுப்பிற்கு மா.சுப்ரமணியன் சரியான தேர்வா? அவர் முன் இருக்கும் சவால்கள் என்னென்ன?
வாய்ப்பு கிடைத்தால்தான் தகுதியையும், திறமையையும் நிரூபிக்க முடியும். அவ்வாறு தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்துவதில் திறமையானவர் மா. சுப்ரமணியன்.
எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அடித்தட்டு மக்களின் அனைத்து இன்னல்களையும் அறிந்தவர் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் உயர் கல்வியை பயின்ற மா.சுப்ரமணியன், பின்னர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பையும் பெங்களூர் ஹெவனூர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் (எல்.எல்.பி) பயின்றிருக்கிறார். 1976ல் தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்தவர், அந்த காலகட்டத்தில் ‘சைதை பகுத்தறிவாளர் கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கி பகுத்தறிவு வாசகங்களை கைகளாலேயே எழுதி நண்பர்களுடன் சேர்ந்து ரயில்களில் ஒட்டுவதை பழக்கமாக வைத்திருந்தார்.
1987ல் பகுதிவாரியாக இளைஞரணிக்கு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்ட போது மு.க.ஸ்டாலினால் சைதை பகுதி இளைஞரணி அமைப்பாளராக அறிவிக்கப்பட்டார் மா.சுப்ரமணியன். 1992ல் தென் சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், 2002ல் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் என படிப்படியாக உயர்ந்தவர்.
1996 பொதுத்தேர்தலின்போது 135வது வட்டக் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு, பின்னர் 2001ல் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராகி வார்டு குழு தலைவராகவும் உயர்ந்தார். 2002ல் சைதை இடைத் தேர்தலில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டார். இதனைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு சென்னை மேயராக பொறுப்பேற்றார்.
2006-2011 காலகட்டத்தில் சென்னை மாநகர மேயராக பணியாற்றிய மா.சுப்பிரமணியன், பலராலும் பாராட்டப்பட்டார். மீண்டும் 2011ல் நடந்த மேயர் தேர்தலில் அதிமுகவின் சைதை சா.துரைசாமியிடம் தோல்வியடைந்தார். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2021 தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சைதாப்பேட்டை தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பண்பாளர்
2006 – 2011ம் ஆண்டு வரை சென்னை மாநகரத்திற்கு மேயராக பொறுப்பேற்றவர், எண்ணிலடங்கா சாதனைகள், மாற்றங்கள், சமூக நலத்திட்டங்களைச் செய்திருக்கிறார். இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் சிறந்த மாநகராட்சிக்கான பல்வேறு விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மா.சுப்ரமணியனினுக்கு மாஸான வரவேற்பு இருப்பதற்கு முக்கியக் காரணமே மாற்றுக் கட்சியினர் கூட குறை சொல்ல முடியாத பண்புக்குச் சொந்தக்காரர். எளிமையாக யாரும் இவரை அணுகலாம். அநாகரிக பேச்சுகள் கிடையாது, அனைவர் இடத்திலும் சகஜமாகவும் மரியாதையாகவும் நடப்பவர், சிற்ந்த பேச்சாளர், மக்களின் இருப்பிடத்திற்கே சென்று பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண்பது இவரது ஸ்டைல்.
அனைத்து நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக, நேரடியாக ஈடுபடுத்திக் கொள்பவர். மேயராக இருந்த போது சென்னையைப் பற்றி அங்குலம் அங்குலமாக அறிந்து வைத்திருந்தவர், உதவியாளர்கள், அதிகாரிகளின் உதவியின்றி எல்லா புள்ளிவிவரங்களையும் சட்டென்று எடுத்துக் கூறுவார். எந்த நேரத்திலும் சோர்வு காட்டாமல் உற்சாகமாகவும் சூழ்நிலை அறிந்து உடனுக்குடன் செயல்படும் சுறுசுறுப்புக்கு சொந்தக்காரர்.
மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ஊக்கம்
மாற்றங்கள் அனைத்தும் மாணவர்கள் மற்றும் கல்வியில் இருந்து தொடங்க வேண்டும் என்பதனால் மாநகராட்சியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் அறிவித்து, சிறந்த மாணவர்களுக்கு பாராட்டுகள் அளித்து ஊக்கம் தந்தார். மாநகராட்சிப் பள்ளிகளில் வரலாறு காணாத அளவிற்கு பன்னிரெண்டாம் வகுப்பில் 81 விழுக்காடும், பத்தாம் வகுப்பில் 83 விழுக்காடும் தேர்வும் பெற்றனர்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எய்ட்ஸ் பற்றிய கல்வியை சிறப்பாகக் செய்ததற்காக லண்டனில் இருக்கிற உலக தலைமைப் பண்புக்கான விருதை (World leadership Award) சென்னை மாநகராட்சி அப்போது பெற்றது.
சுகாதாரத்துறையில் அக்கறை
சுகாதாரத்துறையில் குழந்தை பிறந்தவுடன் ‘பரிசுப்பை’ வழங்கும் திட்டம், தமிழில் பெயர் வைத்தால் ‘தங்கமோதிரம்’ எனும் சிறப்புக்குரிய திட்டம் உள்ளிட்டவற்றால் மாநகராட்சி மருத்துவமனைகளில் மகப்பேறு அதிகரிக்க வித்திட்டார்.
24 மணி நேர மருத்துவமனைகள் 2 மட்டுமே இருந்த நிலையில் மண்டலத்திற்கு ஒன்று வீதம் 10 மண்டலங்களிலும் மாநகராட்சி சார்பில் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. பிறப்பு, இறப்பு சான்றிதழ்களையும் இலவசமாக வழங்குவதுடன் இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தியவர்.
சாலைகள் சீரமைப்பு
சாலையோரப் பூங்காக்கள் உள்ளிட்ட 1500 பூங்காக்களை உருவாக்கி சென்னையை எழில்மிகு சென்னையாக மாற்றாக உறுதுணையாக இருந்தவர் மா.சுப்ரமணியன். சுமார் ரூ.5.11 கோடி செலவில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அழகுப்படுத்தப்பட்டன. கோடம்பாக்கம் மேம்பாலம் சீரமைப்பு, அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள், 250 பாலங்கள், சுரங்கப்பாதைகளில் விளம்பரங்களை அழித்து அழகான ஓவியங்களால் சென்னையை கலைநயமிக்க மாநகராக மாற்றினார்.
எழில்மிகு மெரினா
கடற்கரையை அழகுப்படுத்தும் திட்டம் 14 இடங்களில் அமரும் மேடைகள் கட்டி, 700க்கும் மேற்பட்ட அலங்கார விளக்குகள், ஏராளமான புல்வெளிகளையும் அமைத்து, மூன்றே-கால் கிலோ மீட்டருக்கு நடைபாதை, அதில் கிரானைட் கற்களைப் பதித்து நவீன குளியலறை, கழிப்பிடங்கள் என்று உலகிலேயே 2 ஆவது பெரிய நீளமான கடற்கரை என்று பெயர் பெற்றிருக்கிற மெரினா கடற்கரை, உலகிலேயே மிக அழகான கடற்கரை எனும் அளவிற்கு உயர்த்தப்பட்டது.
மேயராக சிறப்பாகச் செயலாற்றியவர் அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினராகவும் தன்னுடைய தொகுதி மக்களுக்கு இயற்கை பேரிடர்களான மழை, வெள்ளம், புயல் சூழல்களில் உதவி நாடுவோருக்கு ஓடோடிச் சென்று கைகொடுப்பவராக சிறப்பாக செயலாற்றியவர்.
தன்னம்பிக்கை நாயகன்
உடற்பயிற்சி நிலையத்தில் உடற்பயிற்சி செய்தல், திரைப்படங்கள், யோகா போன்றவற்றில் ஆர்வம் கொண்ட இவர், ஏராளமான மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2004ம் ஆண்டில் விபத்து ஒன்றில் வலது கால் மட்டு உடைந்து சிதறியதால் இனி நடக்கவே முடியாது என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார். ஆனால் தன்னுடைய தன்னம்பிக்கையால் விடாது மெல்ல எழுந்து நின்று, நடந்து, மெல்ல மெல்ல ஓடி பத்து ஆண்டுகளில் ‘மராத்தான் -125’ எனும் தன்னம்பிக்கை நாயகனாக உருவெடுத்திருக்கிறார்.
2014ம் ஆண்டில் புதுச்சேரி மாநிலத்தில் தன்னுடைய மாரத்தான் ஓட்டத்தை தொடங்கியவர் வெளிநாடுகள், யூனியன் பிரதேசங்கள் என 20 மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று அதில் தன்னுடைய அனுபவங்கள், நகரங்கள், நாடுகள் அனைத்தையும் அசத்தலான தமிழ் உரைநடையில் ‘ஓடலாம் வாங்க’ என்ற புத்தகத்தையும் எழுதி இருக்கிறார். உலகமே கொரோனாவில் முடங்கிக் கிடக்க, தனது வீட்டு மாடியில் 8 வடிவ வரைபடத்தில் ஓடி ஓடி ஆசியச் சாதனை படைத்துள்ளள்ளார்.
முதல் முறையாக அமைச்சர்
எண்ணம், செயல், சிந்தனை அனைத்திலும் துடிப்புடனும் சமயோஜிதத்துடனும் செயல்படும் மா. சுப்ரமணியனுக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசில் மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை மிகவும் நெருக்கடியான கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருக்கும் சூழலில் இந்த பொறுப்பேற்றிருக்கும் சுப்ரமணியன் முன் ஏராளமான சவால்கள் உள்ளன.
மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 25 ஆயிரத்தை கடந்து கொண்டிருக்கிறது, மேலும் மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு மட்டுமே போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் அதிகரிக்கும் நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும், மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை தங்குதடையின்றி தேவைப்படுவோருக்கு ஆக்சிஜன் விநியோகிக்க வேண்டும், என பல சவால்கள் முன் நிற்கின்றன.
மக்கள் நலன் காப்பாரா?
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே வழி என்று கூறப்படும் நிலையில், தடுப்பூசிகளுக்கு நிலவும் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பதுடன் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நாளொன்றிற்கு 25 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் பற்றாக்குறை காரணமாக தற்போது 9 ஆயிரம் பேருக்கும் மட்டுமே தடுப்பூசிகள் போடப்படுகிறது. இதற்கு அதிக தடுப்பூசி வரவழைக்கவேண்டும். இவர் ஏற்கனவே சிறப்பான நிர்வாகியாக இருந்துள்ளார் என்ற அடிப்படையில் சுகாதாரத் துறையை நன்றாக நடத்திச் செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது அலையே மக்களை பாடாய் படுத்தி வரும் நிலையில், குழந்தைகளை தாக்கும் என்று எச்சரிக்கப்படும் கொரோனா மூன்றாவது பரவலுக்கு எவ்வாறு தயாராவது, அதனை எப்படி எதிர்கொள்வது என்று பல்வேறு சவால்கள் மா.சுப்ரமணியனின் முன்னால் இருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளை எதிர்கொண்டு சிறப்பான நிர்வாகத்திறனை வெளிப்படுத்தி மக்கள் நலன் காப்பாரா? மா.சுப்ரமணியன் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.