தமிழக முதல்வர் ஆகிறார் மு.க.ஸ்டாலின்- எதிர்பார்ப்பும்; சவால்களும்!
மேயர், அமைச்சர், துணை முதல்வர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ள மு.க.ஸ்டாலின், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சியை வெற்றி பெற வைத்ததன் மூலம் முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்கிறார்.
உழைப்பு, உழைப்பு, உழைப்பு!
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியிடம் அவரது 86வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நேர்காணலின் போது, அவரது மகன் மு.க.ஸ்டாலின் பற்றி கேட்ட கேள்விக்கு கலைஞர் கருணாநிதி அளித்த பதில் இது... என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்.
திமுக தலைவராக ஸ்டாலின், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை திறம்பட வழிநடத்தி, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க வைத்துள்ள நிலையில், மகன் ஸ்டாலின் பற்றிய தந்தை கருணாநிதியின் இந்த பதில் கச்சிதமாக பொருந்துகிறது.
வெற்றி தரும் செய்தி
தற்போதைய அரசியல் சூழலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் இந்த வெற்றியின் மூலம் ஸ்டாலின் பல விஷயங்களை நிரூபித்துள்ளார். அரசியல் நோக்கர்கள் கருதுவது போல, தமிழகம் பாஜக கொள்கை மற்றும் மோடி செல்வாக்கை ஏற்கவில்லை, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியுள்ளனர் என்பது போன்ற விஷயங்களுடம் தனிப்பட்ட நோக்கிலும் ஸ்டாலின் ஒரு விஷயத்தை நிரூபித்துள்ளார்.
வாரிசு அரசியல் தொடர்பான விமர்சனங்களுக்கு தொடர்ந்து உள்ளாகி வந்திருக்கும் ஸ்டாலின், தனது தந்தையின் நிழலில் இருந்து விலகி சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்கும், கூட்டணிக்கும் வெற்றியை தேடித்தந்திருக்கிறார்.
தமிழக அரசியலின் இரு பெரும் ஆளுமைகளான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாமல் நடந்துள்ள இந்த தேர்தலில், ஸ்டாலின் செயல்பட்ட விதம் கவனத்திற்குறியது. ஒரு தலைவராக தன்னால் தேர்தலை வெற்றிகரமாக சந்திக்க முடியும் என்பதை உணர்த்தியதோடு, தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுவதாக சொல்லப்படும் கருத்தையும் தகர்த்தெறிந்திருக்கிறார்.
வாரிசு அரசியல்
வாரிசு அரசியல் உள்ளிட்ட தன்மீதான பல்வேறு விமர்சனங்களுக்கும் இதன் மூலம் ஸ்டாலின் தீர்மானமாக பதில் அளித்திருக்கிறார். இந்த வெற்றி ஒரு விதத்தில் எதிர்பார்க்கப்பட்டது என்றும், எளிதாகக் கிடைத்த வெற்றி என்றும் கருத்து நிலவுவதை மீறி, ஸ்டாலின் களத்தில் கடினமாகவே உழைத்திருக்கிறார்.
தமிழக அரசியல் சூழலில், ஸ்டாலின் இந்த வெற்றி எத்தனை முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள அவரது கடந்த கால அரசியல் செயல்பாடுகளைக் கவனமாக பார்க்க வேண்டும்.
ஸ்டாலினின் நீண்ட நெடிய அரசியல் பயணம் அனைவரும் நன்கு அறிந்தது என்பதால், இந்த தேர்தலை புரிந்து கொள்ள உதவும் அண்மை ஆண்டு நிகழ்வுகளை மட்டும் பார்க்கலாம்.
எதிர்கட்சித் தலைவர்
ஸ்டாலினின் இந்த வெற்றியை கடின உழைப்பின் பலன் என்று மட்டும் அல்லாமல் காத்திருப்பின் பலன் என்றும் தான் சொல்ல வேண்டும். ஏனெனில், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகம் முழுவதும் அவர் சுற்றுச்சுழன்று வாக்கு சேகரித்தார் என்பது மட்டும் அல்ல, எதிர்கட்சித் தலைவராக அவர் பொறுப்புடன் காத்திருந்தார்.
2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தாலும், தேர்தல் முடிவுகள் கடும் போட்டியாக இருந்ததை மறந்துவிடக்கூடாது. அதிமுக அதிக இடங்களை வென்றாலும், திமுகவுடனான வாக்கு வித்தியாசத்தை பார்த்தால் ஒரு சதவீதத்திற்கும் சற்று கூடுதலாக மட்டுமே இருந்தது.
இதனிடையே, முதல்வராக இருந்த ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு காலமாகவே, அதிமுகவில் அடுத்த முதல்வர் யார் எனும் கேள்வி அக்கட்சிக்குள் கடும் போட்டியை உண்டாக்கியது. இந்த போட்டியில் எடப்பாடி பழனிசாமி மற்றவர்களை முந்தி முதல்வரானார்.
ஜனநாயக வழி
இந்த நிகழ்வுகளை ஆய்வு செய்வது நம் நோக்கம் இல்லை என்றாலும், ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பலவீனமான நிலையிலும், எதிர்கட்சியாக இருந்த திமுகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்பது ஸ்டாலின் மீது வைக்கப்பட்ட விமர்சனமாக இருந்தது.
அதே நேரத்தில் எதிர்கட்சியையும் சமாளித்து, உட்கட்சி பூசலையும் சமாளித்து எடப்பாடி பழனிசாமி நான்கு ஆண்டுகள் முதல்வராக தொடர்ந்தது சாதனை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதே கருத்தை ஸ்டாலின் மீதான ஆளுமை விமர்சனமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், விமர்சனக் கருத்துகளை மீறி, அதிமுக ஆட்சியை ஜனநாயக விரோதமாக அகற்றி குறுக்கி வழியில் ஆட்சிக்கு வராமல், அடுத்த தேர்தல் வரை காத்திருப்பது எனும் ஸ்டாலின் முடிவு அரசியல் முதிர்ச்சியானதாகவே பலரால் பார்க்கப்பட வேண்டும்.
களப்பணி
இடைப்பட்ட காலத்தில், அவர் எதிர்கட்சி தலைவராக தனது பணியை சிறப்பாகவே நிறைவேற்ற முயன்றிருக்கிறார், சட்டமன்றத்தில் ஆளும்கட்சிக்கு எதிராக இடைவிடாமல் குரல் எழுப்பியதோடு, மாநில மக்கள் பிரச்சனைக்காக அவர் களத்தில் இறங்கி போராடவும் தயங்கவில்லை.
அந்த வகையில், 2011 முதல் 2016 வரையான காலத்தில், எதிர்கட்சி தலைவராக தமிழகம் முழுவதும் பயணம் செய்து, ஆட்சிக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்ததன் தொடர்ச்சியாகவே இது அமைகிறது.
நிச்சயம் ஸ்டாலின் நினைத்திருந்தால், எம்.எல்.ஏக்கள் பேரத்தில் இறங்கி ஆட்சி கலைப்பு ஆட்டத்தை முயற்சித்துப் பார்த்திருக்கலாம். ஆனால், அவர் அதை விரும்பவும் இல்லை. ஒரு வாய்ப்பாக பரிசீலிக்கவும் இல்லை. மக்கள் மன்றத்தில் நம்பிக்கை வைத்தே செயல்பட்டு வந்தார்.
கூட்டணி வியூகம்
இந்த நிலையில் தான் 2021 சட்டமன்ற தேர்தலை சந்தித்தார். பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லாத கட்சியை மீண்டும் ஆட்சி பொறுப்பில் கொண்டு வர வேண்டும் எனும் எதிர்பார்ப்பு அவருக்கு ஒரு சுமையாக கூட அமைந்திருக்கலாம். கலைஞர் இல்லாத நிலையில் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்த முடியுமா எனும் கேள்வியும் கூட முன்வைக்கப்பட்டது.
ஆனால், ஸ்டாலின் எந்த பதற்றமும் இல்லாமல் தேர்தல் பணியாற்றினார். அதைவிட முக்கியமாக, மிகவும் புத்திசாலித்தனமாக வியூகம் அமைத்தார். முந்தைய காலங்களில் கூட்டணி அமைப்பதில் அவரது பங்களிப்பு விமர்சனத்திற்கு உள்ளானது உண்டு.
ஆனால், இந்த முறை கூட்டணி உத்தி வகுப்பதில் அவர் எந்த குறையும் வைக்கவில்லை. கொள்கை நோக்கில் அரவணைக்க வேண்டிய கட்சிகளை சேர்த்துக்கொண்டார். இடதுசாரி கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுக கூட்டணியில் இருந்தது பெரும் பலமாக அமைந்தது. மதிமுகவையும் விட்டுவிடவில்லை.
தேர்தல் உத்தி
அதே நேரத்தில் தொகுதி பங்கீடு விஷயத்தில் அவர் கறாராகவும் நடந்து கொண்டார். காங்கிரஸ் கட்சிக்கு வழக்கத்தைவிட குறைந்த தொகுதிகளே ஒதுக்கினார். மற்ற கட்சிகளுக்கும் அவற்றின் செல்வாக்கிற்கு ஏற்பவே இடங்கள் அளித்து திமுகவுக்கு கணிசமான இடங்கள் இருக்குமாறு பார்த்துகொண்டார்.
அதே போல, வேட்பாளர் தேர்விலும் பக்குவத்தை வெளிப்படுத்தினார். அனுபவசாலிகள் மற்றும் புதிய முகங்கள் என கலைவையாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. எழிலன், கார்த்திகேய சேனாபதி போன்ற புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. மகன் உதயநிதிக்கு வாய்ப்பளித்தது விமர்சனத்திற்கு உள்ளானாலும், பொதுவில் அவரது வேட்பாளர் தேர்வு ஏற்புடையதாகவே இருந்தது அவரின் வெற்றி மூலம் தெரியவந்தது எனலாம்.
பிரச்சார வியூகம்
தேர்தல் பிரச்சாரத்திலும் அவரது வியூகம் கச்சிதமாகவே அமைந்தது. தேர்தலின் மைய பிரச்சனைகள் என்ன என்பதில் தெளிவாக இருந்தார். ஆட்சி மாற்றம் மற்றும் அதிமுக அரசு மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக சொல்லப்படுவதை மக்களிடன் முன்னிறுத்தினார்.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்ததை சாதகமாக்கி, இந்த தேர்தல் தமிழகத்தை பொருத்தவரை திராவிட சித்தாந்தம் மற்றும் அதற்கு எதிரான சங்க்பரிவார் கொள்கைக்கு இடையிலான போட்டி என்பதை உணர்த்தினார்.
ஆளும்கட்சியின் தவறுகளையும் சுட்டிக்காட்டத்தவறவில்லை. மாநிலம் முழுவதும் சளைக்காமல் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார். தேர்தல் அறிக்கை தயாரிப்பும், தமிழக பிரச்சனைகள் மற்றும் மக்கள் எதிர்பார்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
களத்தில் மும்முனை போட்டி ஐந்து முனை போட்டி என்றெல்லாம் கூறப்பட்டாலும், சீமான், தினகரன், கமல்ஹாசன் பற்றி எல்லாம் கவலைப்படாமல் திமுக கூட்டணியின் வியூகத்தை தெளிவாக அமைத்துக்கொண்டார்.
முதல் வெற்றி
இவற்றின் பயனாக திமுக 126 அதிக இடங்களை வென்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளது. 1996க்கு பிறகு முதல்முறையாக திமுக தனிப்பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. இது நிச்சயம் ஸ்டாலினின் சாதனையாகும்.
ஆக, நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் ஸ்டாலின் முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்கிறார். அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், கொரோனா இரண்டாம் அலையால் உண்டாகியுள்ள சவாலான சூழலில் அவர் முதல்வர் பொறுப்பேற்கிறார். மேலும், பல்வேறு சவால்கள் காத்திருந்தாலும், புதிய முதல்வர் செயலாற்றுவதற்கு அவகாசம் கொடுத்து காத்திருப்போம்.