4.3 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்; 500 மில்லியன் வியூஸ்: யூடியூப்பில் கலக்கும் மதுரை மைந்தன் ‘மதன் கவுரி’

By YS TEAM TAMIL|6th Jan 2021
பிளாக்ஷீப்பின், ஆண்டின் சிறந்த Vlogger விருது பெற்ற மதன் கவுரி, தனது வீடியோ உருவாக்கம் மற்றும் அனிமோஜி பாடல் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

மதுரையைச் சேர்ந்த 26 வயதான மதன் கவுரி யூடியூப்பில் மக்களை உற்சாகப்படுத்துபவராக இருக்கிறார். பொதுவெளியில் பேசுவது மற்றும் நிகழ்த்துதலை தானாக கற்றுக் கொண்டுள்ளவர், சமூகப் பிரச்சனைகள் மக்களிடம் சென்றடைய வேண்டும் என விரும்புகிறார்.


2013ம் ஆண்டு மதன் தொடங்கிய யூட்யூப் சேனலில், பெண்கள் பிரச்சனை, வரலாறு, ஊக்கம் அளிக்கும் விஷயங்கள் பற்றி பேசி வரும் கவுரி, உடனடியாக பார்வையாளர்களுடன் தொடர்பு எற்படுத்திக்கொள்ளும் தன்மை பெற்றிருக்கிறார்.


இந்த ஏழு கோயில்களுக்கு செல்ல வேண்டாம், இந்தியா பற்றி உலகம் என்ன நினைக்கிறது, சுந்தர்பிச்சை ஊக்கம் அளிக்கும் கதை ஆகியவை அவருடைய பிரபல வீடியோக்களில் சில.

அண்மையில் பொதுமுடக்கத்தின் நடுவே, இது முடிவுக்கு வராது, 4வது லாக் மற்றும் 20 லட்சம் கோடி போன்ற கொரோனா தொற்று தொடர்பான வீடியோக்களை உருவாக்கினார்.


தனது யூடியூப் சேனலில் 4.3 மில்லியன் சந்தாதாரர்கள் மற்றும் 500 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ள மதன் கவுரி, நன்கு ஆய்வு செய்த உள்ளடக்கம் மற்றும் காட்சி விளக்கங்களுக்காக அறியப்படுகிறார்.

மதன் கவுரி

பிளாக்‌ஷீப் அவார்டு நிகழ்ச்சியில் அவர் ஆண்டின் சிறந்த Vlogger விருது பெற்றார். அண்மையில் தெருக்குரல் மூலம் பிரபலமான, அறிவுடன் இணைந்து முதல் ராப் பாடலையும் உருவாக்கியுள்ளார்.


யூட்யூபில் மாதம் சுமார் $5.5K – $88K (சுமார் 4 லட்சம் ரூபாய்) வரை அதிக பணம் ஈட்டும் தனிப்பட்ட தமிழ் யூட்யூபர் என பிப்ரவரி 2019ல் ‘சோஷியல் ப்ளேட்’ எனும் யூட்யூப் தகவல்கள் ஆய்வு தளம் வெளியிட்டிருந்தது.


யுவர்ஸ்டோரி வீக்கண்டர் பதிப்பிற்கான பிரத்யேக நேர்காணலில், மதன் கவுரி தனது வீடியோக்கள் மற்றும் அவற்றை உருவாக்கும் முறை பற்றி பகிர்ந்து கொள்கிறார்.


யுவர்ஸ்டோரி: 26 வயதில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய யூடியூபர்களில் ஒருவராக இருப்பது எப்படி இருக்கிறது?


மதன்: நம்ப முடியாமல் இருக்கிறது. இதை நான் கற்பனை கூட செய்யவில்லை. நான் எப்போதுமே, கூட்டத்தால் அலட்சியம் செய்யப்பட்ட ஒல்லியான, தயக்கம் நிறைந்த சிறுவனாக இருந்திருக்கிறேன். ஒரு பொறியாளராகத் துவங்கி யூடியூப்பராகி இருப்பது நம்ப முடியாததாக இருக்கிறது.


யுவர்ஸ்டோரி: இளம் வயதில் இருந்தே காமிரா முன் இருப்பதில் ஆர்வம் இருந்ததா?


மதன்: என் முதல் வீடியோவை உருவாக்கும் முன் நான் வீடியோ காமிரா முன் நின்றதில்லை. நான் பொறியாளர் என்பதால் வீடியோ முன் பேசுவதை நினைத்து கூட பார்க்கவில்லை.  

Young madan

யுவர்ஸ்டோரி: உள்ளடக்கம் உருவாக்கும் துறைக்கு எப்படி வந்தீர்கள்?


மதன்: 2016ல், வெளிநாட்டில் மேற்படிப்பு படித்த படி, தனிப்பட்ட தொலைதூர உறவால் தடுமாறிக்கொண்டிருந்த போது முதல் வீடியோவை பதிவேற்றினேன். அதன் பிறகு, ஸ்வாதி கொலை வழக்கு பற்றி கேள்விப்பட்டு, எதிர்வினை ஆற்ற முடியாத நிலை குறித்து வருந்தினேன். அப்போது அமெரிக்காவில் இருந்து உணர்வு மயமான வீடியோவை பதிவேற்றினேன். இந்த வீடியோ 50 ஆயிரம் முறைக்கு மேல் பார்க்கப்பட்ட போது, பொறியாளர் வேலையை விட்டு விட்டு வீடியோ உருவாக்கத்தில் ஈடுபடத்துவங்கினேன்.


யுவர்ஸ்டோரி: இந்த துறையில் உங்களின் ஆரம்ப கால ஊக்கமாக அமைந்தவர்கள் யார்?  


மதன்:  : PewDiePie (Felix Arvid Ulf Kjellberg)   மற்றும் மார்குவஸ் பிரவுன்லீயின் தீவிர ரசிகன் நான். என்னுடைய ஆரம்பக் கால ஊக்கம் ஸ்டீவ் ஜாப்ஸ்.


யுவர்ஸ்டோரி: கொரோனா கால பொதுமுடக்க பாதிப்பு மக்களை எப்படி பாதித்துள்ளது? உங்கள் ரசிகர்களுக்கு ஊக்கம் அளிக்க என்ன கூறுகிறீர்கள்?


மதன்: நாம் நெருக்கடிக்கு உள்ளாகும் போது தான் சிறந்த படைப்புகள் வெளிப்படுவதாகக் கருதுகிறேன். உலகம் இப்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. மக்கள் மாதக் கணக்கில் வீட்டுக்குள் இருக்கின்றனர். இது வரலாற்றில் முதல் முறை. எல்லோரும் பூஜ்ஜியத்திற்கு வந்து புதிதாக துவங்க வேண்டியிருக்கிறது. நம்முடைய கனவுகளை முழுவீச்சில் நினைவாக்க முயற்சிக்க வேண்டும்.


யுவர்ஸ்டோரி : உங்கள் வீடியோக்களுக்கான ஐடியா எப்படி வருகிறது. உங்கள் சேனலில் உங்களுக்கு பிடித்தமான வீடியோக்கள் எவை?


மதன்: என் சந்தாதாரர்களிடம் வீடியோக்களுக்கான பரிந்துரைகளைக் கேட்கிறேன். அவர்கள் தான் என் எஜமானர்கள். அவர்கள் கேட்பதை அளிக்கிறேன். வரலாறு பற்றி பேசும் வீடியோக்கள் எனக்கு பிடித்தமானவை. நமக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் என்னை ஈர்க்கின்றனர்.

 

யுவர்ஸ்டோரி: அண்மையில் நீங்கள் தெருக்குரல் புகழ் அறிவு பாடகருடன் இணைந்து பணியாற்றினீர்கள். அந்த அனுபவம் பற்றி?


மதன்: இது மிகப்பெரிய கற்றல் அனுபவமாக அமைந்தது. இசை பற்றி இதுவரை நான் அறியாத விஷயங்களைப் புரிந்து கொள்ள அறிவு உதவினார். இதற்கு முன் இசையை கேட்டது மட்டுமே இசைக்கலைஞர்களுடன் என் அனுபவம்.


யுவர்ஸ்டோரி: இந்த பாடல் பற்றி கூறுங்கள்?


மதன்: இந்த பாடல் எனக்குத் தெரிந்தவரை, ஐபோன்-11 ல் எடுக்கப்பட்ட முதல் அனிமோஜி வீடியோ பாடல். மனிதர்களாக உருவாகிய நாம் எப்படி சாதிய வேறுபாடுகளில் மூழ்கி இருக்கிறோம் என இப்பாடல் உணர்த்துகிறது. நாம் நீண்ட தொலைவு வந்துவிட்டாலும் வெறுப்பை விட மறுக்கிறோம். மனிதம் ஒன்றே முக்கியமானது என்பதை இந்த பாடல் வலியுறுத்துகிறது.

சாதி, மத வேறுபாடுகள் மனிதர்கள் உண்டாக்கியது. இவற்றை மனிதர்களுக்கான அளவுகோளாக ஒரு போதும் கொள்ளக்கூடாது. ஒரு சமூகமாக இந்த வேறுபாடுகளை பின்பற்றினால் தொழில்நுட்ப வளர்ச்சியை மீறி நாம் விலங்குள் தான்.


யுவர்ஸ்டோரி : யூடியூபர்களுன் இணைந்து செயல்படுவீர்களா?  


மதன்:  ஆம், சுயேட்சை இசைக்கலைஞர்கள், உள்ளடக்க உருவாக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.


மேலும் யூடியூப்பில் மொழிகளைக் கடந்த ஒத்துழைப்பு உற்சாகமாக இருக்கும். யூடியூபர்கள் அசிஷ் சன்லானி, பீர்பைசப்ஸ் ஆகியோருடன் அண்மையில் குழு உரையாடலில் ஈடுபட்டேன். அவர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்.


யுவர்ஸ்டோரி : பெண்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பிரச்சனை பற்றி எல்லாம் உங்கள் வீடியோக்களில் பேசுகிறீர்கள். சிக்கலானை விஷயங்களை எப்படி எளிதாக விளக்குகிறீர்கள்?


மதன்: என்னைப் பார்வையாளர்கள் இடத்தில் வைத்துக்கொள்கிறேன். என் பார்வையாளர்கள் 3 வயது முதல் 80 வயதானவர்கள் என்று தெரியும். எனவே முதல் சில நிமிடங்கள் விஷயத்தை விளக்கி விட்டு, வழக்கமாகப் பேசுகிறேன். இதை தான் பார்வையாளர்கள் விரும்புகின்றனர் என நினைக்கிறேன். இன்போகிராபிக், படங்கள் மூலமும் விளக்குகிறேன்.  


யுவர்ஸ்டோரி : உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன? தற்போது உருவாக்கி வரும் உள்ளடக்கம் என்ன?


மதன் :  ஒவ்வோரு நாளாக கவனம் செலுத்துகிறேன். ரசிகர்களுக்கு அதிக உள்ளடக்கம் தர விரும்புகிறேன். ஒரு குறும்படத்திலும் செயல்பட்டு வருகிறேன். யூட்டியூப் சேனல் துவக்கிய விதம் பற்றிய படம். இயற்கை மற்றும் பயணம் பற்றிய பாடலும் திட்டத்தில் இருக்கிறது.

Madan gowri

யுவர்ஸ்டோரி:  வார இறுதி நாட்களை எப்படி செலவிடுகிறீர்கள்?


மதன்:  வருடம் முழுவதும் உள்ளடக்கம் உருவாக்குகிறேன். வீடியோ பதிவேற்றிய பிறகு சில மணி நேரங்கள் எனக்காக எடுத்துக்கொள்கிறேன். சில நேரங்களில் இரவு நேரத்தில் மெரினா கடற்கரையில் என்னைப் பார்க்கலாம். நண்பர்களுடன் அல்லது தனியே இருப்பேன்.


ஆங்கில கட்டுரையாளர்: ஊர்வி ஜேகப் | தமிழில்: சைபர் சிம்மன்