‘Made in china’ பொருள்களின் பிறப்பிடம் யீவு- சீனாவின் 'கிறிஸ்துமஸ் நகரம்'
இங்கு எல்லா நாளும் கிறிஸ்துமஸ்...
ஜிங்கிள் பெல்ஸ்... ஜிங்கிள் பெல்ஸ்... ஜிங்கிள் ஆல் தி வே...” வீட்டிற்கு முன் பெரிய ஸ்டார் லைட், வீட்டுக்குள் பெரிய கிறிஸ்துமஸ் மரம் என அனைத்தையும் தயார் செய்து,கிறிஸ்துமஸ் தினத்தை, மிட் நைட்டில் தட்டி எழுப்பி பரிசு கொடுத்த வெள்ளை வித் ரெட் கலர் ஆடையில், தாடியும், தொப்பையுமாக, தோள்பட்டையில் ஒரு பெரிய பரிசுப் பையுடன் தொந்தியாட்டம் போடும் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன், கோலகலமாய் கொண்டாடி மகிழ்ந்தீர்களா?. அப்படியெனில், கிறிஸ்துமசை கலர்புல்லாக்கி குதூகலமாக்கும் லைட் ஸ்டார்களும், குடில் அலங்காரங்களும், எங்கு? எப்படி? எப்போது? தயாராக்கிப் படுகின்றன என்று தெரியுமா?
இம்மூன்று ‘எ’ கேள்விகளுக்கான விடையே “யீவு'’ எனும் சீனாவின் கிறிஸ்துமஸ் நகரம்.
உலக நாடுகளுக்கு தேவையான கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்களில் மூன்றில் இரண்டு பங்கு இங்கிருந்து தான் ஏற்றுமதியாகின்றன. அதில், 30 சதவீத பொருள்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன. மற்றவை, லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவின் பெரும் நகரங்களில் உள்ள வீடுகளை அலங்கரிக்கின்றன.
ஷாங்காய் நகரிலிருந்து சுமார் 200 மைல் தொலைவில் உள்ள யீவு, அதன் 600 தொழிற்சாலைகளிலிருந்து உலகிற்கு தேவையான 60 சதவீத கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்களை ஆண்டுத்தோறும் உற்பத்தி செய்து வருகிறது.
சீனாவில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விடுப்பு அளிக்காவிட்டாலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கலைக்கட்டுவதற்கான காரணக்கர்த்தாவும் யீவு தான். ஏனெனில், கிறிஸ்துமஸ் அங்கு ஜுலை மாதமே தொடங்கிவிடுகிறது. ஆம், ஒட்டு மொத்த உலகில் இருந்து கொடுக்கப் படும் ஆர்டர்களுக்கான தயாரிப்பு பணி அப்போதே தொடங்கிவிடுகின்றனர்.
செப்டம்பர் இறுதியில், கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஈஸ்டர் மற்றும் காதலர் தினத்துக்காக குட்டி க்யூட் இதயங்களை செ ய்யும் தொழிற்சாலையாக மாறிவிடுகின்றன. அதற்குப் பிறகு, அதிக இலாபகரமான அமெரிக்க சந்தைக்கு தேவையான ஹாலோவீன் அலங்காரங்கள். பின்னர், பிற்பகுதியில் வசந்த காலத்தில், மீண்டும் கிறிஸ்துமஸ் நேரம். யீவுவின் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் என்னவெனில் பெரும்பாலான பொருள்கள் கைவினை வேலைபாடுகளால் ஆனவை. இயந்திரங்களுக்கு இடமளிக்காமல், தொழிலாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, சீப்பான விலையில் பொருள்களை விற்பனை செய்யும்படியாக தயாரிக்கின்றது. உள்ளூர்வாசிகளைவிட வெளிநாட்டவர்கள் அதிக அளவில் யீவுவின் வணிகத்துக்கு பங்காற்றுகின்றனர்.
யீவுவில் கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனையில் கிங்காக விளங்கும் 42 வயதான ரெங் குவான், 'சின்ட் அன் பேக்டரி' என்ற நிறுவனத்தின் மேஜேனராக பணிபுரிகிறார்.
இந்நிறுவனம் மட்டும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியன் கிறிஸ்துமஸ் மரங்களை தயாரிக்கின்றனர். அதில் 1,00,000 மரங்கள் இங்கிலாந்துக்கு போய்சேர்கின்றன என்கிறார் அவர்.
ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்துக்காக மட்டும் 5 சரக்கு கப்பல் கிறிஸ்துமஸ் மரங்களை ஏற்றுமதி செய்கிறார்.
உலகம் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கொண்டாட விரும்புகிறார்களோ, அக்கொண்டாட்டத்துக்கு தேவையான சகலத்தையும் விநியோகிக்கும் மகிழ்விப்பானாக விளங்குகிறது சீனா. ஆம், ஏறக்குறைய உலக மக்கள் அனைவரும் வாழ்வில் ஒரு முறையேனும் பயன்படுத்தி இருக்கும் “மேட் இன் சைனா” பொருள்களின் பிறப்பிடம் யீவு.
குட்டி குட்டி விளையாட்டு பொம்மைகள், விதவிதமான பிளாஸ்டிக் பொருள்கள் என யீவு மார்க்கெட்டில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான பொருள்கள் டன் கணக்கில் குவிந்து கிடக்கின்றன. உலகின் பஜாராக திகழும் யீவுவின் நிலை 30 ஆண்டுகளுக்கு முன் தலைகீழானது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வறுமை நிறைந்த விவசாய நிலங்களாக காணப்பட்ட இப்பகுதியில் இருந்து, இன்று உலகின் சந்துபொந்துகளுக்கெல்லாம் சரக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
5 மாவட்டங்களை கவர் செய்து 5.5 மில்லியன் பரப்பளவில் பாகுபலி செட்டை போன்று பன்மடங்கு பிரம்மாண்டாய் இருக்கின்றன பஜாரில் உள்ள கடைகள். ஸ்டால், கடைகள் என கணக்கிட்டால் மொத்தம் 75 ஆயிரம் இருக்கும் என்று குத்துமதிப்பாய் சொல்கின்றனர் உள்ளூர் வாசிகள்.
“இன்று உலகெங்கும் நிறைந்திருக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கு, யீவு தயாரிப்புகளின்றி பிழைப்பில்லை” என்கிறார், கிர்தார் ஜான்வர், யீவுவில் வணிகம் மேற்கொண்ட முதல் இந்திய வர்த்தகர்.“எவரும் யீவுவில் வியாபாரத்தை தொடங்கி, உலகெங்கும் வர்த்தகம் செய்யலாம்.
சீனாவில் மற்றப் பகுதிகளுக்கு சென்று பொருட்களை தேடி அலைய வேண்டிய அவசியமும் ஏற்படாது” என்கிறார் கிர்தார்.
யீவு மார்க்கெட்டுக்கு வணிக நோக்கத்தோடு வரும் வணிகர்கள் மட்டுமே ஒரு லட்சம் பேர். இதில் கேமிராக்களுடன் சுற்றும் போட்டோகிராபர்கள், டிராவலர்கள் என்று மார்க்கெட்டை சுற்றிப் பார்க்க மட்டுமே நாள்தோறும் பெரும் படை யீவு நகரத்தை நோக்கி படையெடுக்கிறது.
மொத்த அங்காடியையும் பய்ய பதறாமல் சுற்றிப்பார்த்தால் சில வாரங்கள் கூட ஆகுமாம். கடல்லயே இல்லையாம் வகையறா பொருட்களும் யீவு மார்க்கெட்டில் கிட்டும். அப்படியில்லை என்றால், ஒரிஜினல் பொருளைச் சொன்னால், அப்படியே ஜெராக்ஸ் போட்ட மாதிரி செய்து கொடுத்துவிடுவர். ஆம், பல ஆண்டுகால வரலாற்றையும், புகழையும் ஏந்தி நிற்கும் யீவு மார்க்கெட் போலிகளையும் கொண்டுள்ளது. அடிடாஸ், நைக், உட்லேண்ட்.. என எந்த கம்பெனி புராடெக்ட்டும், கணகட்சிதமாய் யீவு மார்க்கெட்டில் காப்பி அடிக்கப்பட்டு விடுகிறது.
சிறுப் பொருள்களின் கிங்டம் சீனாவெனில், அதன் கிங்காக விளங்கும் யீவு மார்க்கெட்டில் பணிபுரியும் பலரும் கிறிஸ்துமஸ் என்றால் என்னவென்றே அறியார். அவர்களை பொறுத்தவரை 'Christmas is business.'
தகவல் உதவி: டெய்லி மெயில், சிஎன்என் டிராவல் மற்றும் நேஷனல் ஜியோகிராபி | படங்கள் உதவி: aljazeera