சுற்றுச்சூழலுக்கு உகந்த ’மஞ்சப்பை’கள் தயாரிக்கும் மதுரை தம்பதிகள்!
சென்னையில் தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த பணியை தூக்கி எரிந்துவிட்டு, பிளாஸ்டிக் பைகளுக்கு எதிரான முயற்சியாக The Yellow Bag நிறுவனத்தை மதுரையில் தொடங்கி பலருக்கு வேலைவாய்ப்பும் அளிக்கும் கிருஷ்ணன் மற்றும் கௌரி.
ப்ளாஸ்டிக் ஒரு வரம் என்பதைக் காட்டிலும் ஒரு கொடிய விஷம் என்றே பலர் சொல்கின்றனர். ஒரே முறை பயன்படுத்தக்கூடிய வகையைச் சேர்ந்த ப்ளாஸ்டிக்தான் சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்கிறது. இன்று மனிதனால் கண்டுபிக்கப்பட்ட அனைத்து பொருள்களைக் காட்டிலும் ப்ளாஸ்டிக் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அதன் தயாரிப்பு முதல் அப்புறப்படுத்துவது வரை எரித்து சாம்பலாக்குவதன் மூலமாகவும் நிலத்தில் கொட்டி நிரப்புவதன் மூலமாகவும் காற்று, நிலம், நீர் அனைத்தையும் ப்ளாஸ்டிக் மாசுபடுத்துகிறது. நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களை பணியாளர்கள் சுவாசிக்க நேரிடுகிறது. சுற்றுச்சூழலில் புற்று நோய் உண்டாக்கக்கூடிய பொருளை வெளியிடுகிறது.
ப்ளாஸ்டிக் பைகளுக்கான மாற்றை தேடும் முயற்சியில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் கௌரி கையில் பையை எடுத்துச் செல்லும் பழக்கத்தை புதுப்பிக்கும் விதத்தில் ’தி யெல்லோ பேக்’ (The Yellow Bag) துவங்கினர்.
ப்ளாஸ்டிக் மாசு குறைதல்
”நாம் பயன்படுத்தும் முறை காரணமாக சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என்பதை உணர்ந்த பிறகும் நாமும் இந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறோம் என்பதை சென்னையில் வசித்த சமயத்தில் நாங்கள் உணர்ந்தோம். இதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்க விரும்புனோம். ஒத்த சிந்தனையுடைய மக்களுடன் ஒருங்கிணைந்தோம். பல்வேறு முயற்சிகளை புரிந்துகொண்டு என்ன செய்யவேண்டும் என்பதைக் கண்டறிந்தோம்,” என்றார் கிருஷ்ணன்.
2010-ம் ஆண்டு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த சமயத்தில் அவர்களுக்கு வாழ்க்கை குறித்த கண்ணோட்டம் மாறியது. வருங்கால தலைமுறைக்கு நன்மை பயக்கும் விதத்தில் ஏதேனும் செய்ய விரும்பினர். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தற்போதைய வாழ்க்கை முறையை மாற்றும் முயற்சியில் முதல் அடியெடுத்து வைக்கும் விதத்தில் 2014-ம் ஆண்டு ’தி யெல்லோ பேக்’ துவங்கினர்.
’தி யெல்லோ பேக்’ காட்டன் துணி பைகள் மற்றும் பேக்கிங் பைகளை தயாரிக்கிறது. இந்தப் பைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் துணி, பையின் அளவு, அச்சுகள் போன்றவை வாடிக்கையாளரின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்படும். இந்த பைகளின் துவக்க விலை 4 ரூபாயாகும்.
இந்த முயற்சிக்கு அதிக நேரம் ஒதுக்க தீர்மானித்த இந்த தம்பதி சென்னையில் செய்து வந்த பணியைத் துறந்தனர். 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் தங்களது சொந்த ஊரான மதுரைக்குச் சென்றனர். துணி பைகளை சிறப்பாகவும் மலிவான விலையிலும் வழங்குவதற்காக தற்போது கிராமங்களிலுள்ள மகளிர் குழுவுடனும் ஒரு சில சிறு நிறுவனங்களுடனும் பணிபுரிகின்றனர்.
”எங்களது பைகளை விளம்பரப் பைகளாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் பயன்படுத்துகின்றனர். கடைகளில் பணம் செலுத்தும் இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் ஏற்றுமதியாளர்கள் எங்களது பைகளை வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். பொருள்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் எங்களது பைகளை பேக்கிங்கிற்கு பயன்படுத்துகின்றனர். 30,000 பைகள் வாங்கும் அளவிற்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்களும் உள்ளனர். குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு 30 பைகள் வாங்கும் வாடிக்கையாளர்களும் உள்ளனர்,” என்றார் கிருஷ்ணன்.
சுற்றுசூழலுக்கு ஏற்றவாறு மாறுவதில் உள்ள சவால்கள்
“நாங்கள் துவங்குகையில் துணிப் பைகளை தயாரிக்க அனுபவமிக்க தையல்காரர்கள் கிடைக்கவில்லை. பெரும்பாலானோர் துணிப்பைகள் தயாரிப்பில் ஈடுபடவில்லை. பொதுவாக துணிக்கடைகளில் கொடுக்கப்படும் செயற்கை துணிகளாலும் ப்ளாஸ்டிக்கினாலும் தயாரிக்கப்படும் நெய்யப்படாத பை வகைகளை தயாரிப்பதில் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்களிடம் துணிப்பைகளை தைத்துத்தருமாறு கேட்டு பயிற்சியும் வழங்கினோம்,” என்றார் கிருஷ்ணன்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதும் அவற்றை தயாரிப்பதும் தடைகளாக இருந்தது. அத்துடன் சாயம் அல்லது நிறம் பூசப்பட்ட துணிகளுக்கு எதிராக இயற்கையான காட்டன் நிறத்திலான பைகளை பயன்படுத்த மக்களை சம்மதிக்க வைப்பது கிருஷ்ணனும் கௌரியும் சந்தித்த மற்றொரு சவாலாகும்.
"வண்ணமயமாக இல்லாத வெறும் பைகள் கவரும் வகையில் இல்லாததால் அந்தப் பிரச்சனையை கையாளவேண்டியிருந்தது. மொத்த பைகளிலும் சாயம் போடவேண்டுமெனில் அதிக தண்ணீர் செலவாகும் என்பதால் எங்கள் பைகளுக்கு சாயம் போடுவதில்லை என்று தீர்மானித்தோம். எனினும் லோகோக்களையும் வரிகளையும் அச்சிட்டோம்,” என்றார் கிருஷ்ணன்.
’தி யெல்லோ பேக்’ பை தயாரிப்பிற்கான துணி மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலேயே வாங்கப்படுகிறது. பைகள் தயாரிக்கப்படும் வளாகத்தினுள் அமைந்திருக்கும் பிரிவில் துணி வெட்டப்பட்டு, அச்சிடப்பட்டு குழுவைச் சேர்ந்த பெண் தையல்காரர்களுக்கு விநியோகிக்கப்படும். அவர்கள் பைகளை தைத்து திரும்ப அனுப்புவார்கள். அதன் பிறகு தரப்பரிசோதனை செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும்.
இந்த செயல்முறையில் சந்தை அபாயங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்கிறோம். பணியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படுகிறது.
”நாங்கள் தற்போது ஒரு பெரிய குடும்பமாக செயல்படுகிறோம். ஊதியம் பெறும் ஊழியர்கள் அடங்கிய குழுவாக இல்லாமல் சிறு தொழில்முனைவோர்கள் அடங்கிய ஒரு பெரிய குழுவாகவே இயங்குகிறோம். மத்திய உற்பத்தி மையத்தில் 15 பேரும் 25 பெண் தையல்காரர்களும் எங்களது நெட்வொர்க்கில் உள்ளனர்,” என்றார் கிருஷ்ணன்.
கருத்தை பரப்புதல்
கடந்த இரண்டாண்டுகளாக ஒவ்வொரு வருடமும் ’தி யெல்லோ பேக்’கின் வருவாய் 300 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2014-ம் ஆண்டு கிருஷ்ணன் மற்றும் கௌரி இருவருடன் துவங்கிய நிறுவனம் தற்போது ஒரே கூரையின் கீழ் 15 ஊழியர்களுடனும் அத்துடன் கூடுதலாக 25 நபர்களுடனும் செயல்படுகிறது. ’தி யெல்லோ பேக்’ சராசரியாக ஒரு நாளைக்கு 1,000 பைகள் தயாரிக்கிறது. விரைவில் 3,000 பைகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
”தற்போது பல சூப்பர்மார்கெட்டுகள் இணைந்திருந்தாலும் ஒரு முறை வாங்கிய கார்ப்பரேட் வாடிக்கையாளார்கள் எங்களது பைகளை மீண்டும் வாங்குகின்றனர். எங்களது முதல் பத்து கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் இன்றும் எங்களுடன் இணைந்துள்ளனர். சிலருக்கு வருடாந்திர நிகழ்வுகள் இருக்கும். அவர்கள் ஒவ்வொரு வருடமும் எங்களிடம் வாங்குவார்கள் அல்லது அவர்களது தேவைக்கேற்ப வாங்குவார்கள். எனினும் ஆர்கானிக் ஸ்டோர்கள் மற்றும் கடைகள் எங்களது வழக்கமான வாடிக்கையாளர்கள்,” என்றார் கிருஷ்ணன்.
இவர்கள் இதுவரை 500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் பணியாற்றியுள்ளனர். கிருஷ்ணனும் கௌரியும் மாணவர்களிடமும் அனைத்து வயதினரை உள்ளடக்கிய சமூகங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
மலிவான துணிப்பைகளை தயாரிக்க திட்டமிட்டவுடன் ப்ளாஸ்டிக் பூதம் என்கிற கருத்தை அறிமுகப்படுத்தினர். 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் ப்ளாஸ்டிக்கினால் சுற்றுச்சூழல் சந்திக்கும் பிரச்சனைகளை விவரிக்கும் ’நெகிழிபூதம்’ என்கிற சிறிய புத்தகத்தை எழுதியுள்ளனர்.
2016-ம் ஆண்டு ஜூலை மாதம் இவர்கள் நகர்புற துணி பைகள் தையல் குழுக்களை அமைத்தனர். இதன் மூலம் பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைபாடுள்ள தம்பதி துணி பையில் அச்சிடும் பணியில் ஈடுபட்டனர். மனநலம் குன்றிய பெண்கள் ஐந்து பேர் துணி பைகள் தைக்க பயிற்சியளிக்கப்பட்டனர்.
வலைதள முகவரி: The Yellow Bag