தூய்மைப் பணியாளர்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மதுரை புகைப்படக் கலைஞர்!
பொறியியல் பட்டதாரியான பழனிகுமார், தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை முறை மற்றும் அதில் பணிபுரியும் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த கடந்த 4 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார்.
கொரோனாவின் கோரத் தாண்டவத்தை எதிர்த்து இந்திய அளவில் மருத்துவத் துறையினர், சுகாதாரத் துறையினர் மற்றும் காவல் துறையினர் முழுவீச்சில் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக சுகாதாரப் பணியாளர்களின் பணிகளைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. தக்க பாதுகாப்பு உபகரணங்கள்கூட இன்றி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள இடங்களில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய போற்றத்தகு பணிகளை மேற்கொள்ளும் இவர்களை பஞ்சாப் மக்கள் மலர் தூவி பாராட்டியும், பண மாலை அணிவித்தும் பாராட்டி வரும் காட்சிகள் ஊடகங்களில் வரும்போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகதான் உள்ளது.
ஆனால், இவர்களை இன்று பாராட்டிவிட்டு, நாளை மீண்டும் அவர்களை அதே இடத்திலேயே தான் அமர வைக்கப்போகிறீர்கள். ஓர் தூய்மைப் பணியாளரின் குழந்தை, பெரும்பாலும் ஓர் தூய்மைப் பணியாளராகத்தான் மாறுகிறான். என்னதான் இவர்கள் சமூகத்துக்காகப் பாடுபட்டாலும் அவர்களின் நிலை மாறப்போவதில்லையே என ஆதங்கப்படுகிறார் மதுரைச் சேர்ந்த பழனிக்குமார்.
பொறியியல் பட்டதாரியான பழனிகுமார், தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை முறை மற்றும் அதில் பணிபுரியும் பெண்களின் வாழ்க்கையை புகைப்பட ஆவணமாக காட்சிப்படுத்தி, அவர்களின் வாழ்வை மேம்படுத்த கடந்த 4 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் நம்மிடம் கூறியதாவது,
“தூய்மைப் பணியாளர்களின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. ஆனால் இந்த கொரோனா தொற்றுநோய் அதனை நமக்கு உணர்த்திவிட்டது. இவர்கள் 4 நாள்கள் பணிபுரியவில்லை எனில் நாடே நாறி விடும். மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விடும். நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் இவர்களின் வாழ்க்கை முறையோ என்றும் பரிதாபகரமாகவே இருக்கிறது,” என்கிறார் பழனி.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது குற்றம் என சட்டம் இருந்தாலும், நாள்தோறும் நாட்டில் அதுதானே நடக்கிறது. பாதாளச் சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளின்போது எத்தனைபேர் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர். இவ்வாறு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது என்பது வருந்தத்தக்கது எனத் தெரிவிக்கும் பழனி, தூய்மைப் பணியாளர்களின் வாழ்வியல் முறைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
பொதுவாக, தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளும் தங்களின் கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டு எதிர்காலத்தில் தங்களின் பெற்றோரின் வேலையான தூய்மைப் பணிக்கே வருவது இங்கு தொடர்கதையாக இருக்கிறது. இந்நிலையை மாற்றவே நான் பாடுபட்டு வருகிறேன் என்கிறார்.
இதற்காக அவர் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளிடம் பரிவுடன் பழகி, அவர்களுக்கு ஓவியம் உள்ளிட்ட கலைகளை கற்றுத் தருவதோடு, ஆர்வமுள்ளவர்களுக்கு புகைப்படக் கலையையும் பயிற்றுவிக்கிறார்.
இதற்காக இவர் சுமார் 8 கேமராக்களை சேகரித்து வைத்து, அதை மாவட்டம் வாரியாக அப்பகுதியில் உள்ள துய்மைப் பணியாளர்களின் குழந்தைகளான ஆர்வமிகு இளைஞர்களுக்கு வழங்க உள்ளார். இவ்வாறு பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளின் கல்வி இடைநிற்றலை தடுத்து, அவர்களுக்கு கலை ஆர்வம் ஏற்படுத்தி, அவர்களை பல்வேறு துறைகளில் ஈடுபடச் செய்யவேண்டும் என்பதே தனது கனவு என்கிறார், பழனிகுமார்.
இதற்காக இவர் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து, பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்த தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து வருகிறார். இவரின் முயற்சிக்கு ஆங்காங்கே நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இவரின் பணிகளைப் பாராட்டி, Top Ten Youngster என்ற விருது கிடைத்தது. மேலும், விரைவில், நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் பயிற்சி பட்டறையிலும் பங்கேற்க இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஓர் புகைப்படம் உலகையே மாற்றிவிடும் என்பதை உலக வரலாறுகள் நிரூபித்து இருக்கின்றன. இதையே தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். எனது புகைப்படங்களின் மூலமும் சமூகத்தில் சிறுசிறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
சட்டம் போட்டு மட்டும் மக்கள் மனதை மாற்ற முடியாது. தற்போது கொரோனா நோய்த் தொற்று நேரங்களில் இவர்களின் தன்னலமற்ற உழைப்பை பார்த்து சமூகமே மாறவேண்டும். இவர்களின் இச்சேவையை வெளியுலகத்துக்கு கொண்டு செல்லும் பணியை மட்டுமே நான் செய்து வருகிறேன் என்கிறார் தன்னடக்கத்துடன்.
இவர் மட்டுமன்றி இவரைப் போலவே பல்வேறு நபர்கள், தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக பாடுபட்டு வருகின்றனர். இவ்வாறு இவர்கள் ஓவ்வொருவரும் போடும் விதையானது, விருட்சமாகி, காடாகும்போது சமுதாயத்தில் மிகப் பெரிய நல்ல மாற்றங்கள் நிகழ்ந்திடும் எனும் இவர்களின் நம்பிக்கை கட்டாயம் ஓர் நாள் பலிக்கும் என்பதில் ஐயமில்லை.