Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இந்தியா முழுதும் ஏழை மக்களைத் தேடிப் போய் உதவிகள் செய்யும் ‘சென்னை வாரியர்ஸ்’

கொரானா சமயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் அன்றாடத் தேவைகளுக்குக் அல்லல்படும் கூலித் தொழிலாளர்களுக்கு அரிசி பருப்பு, மருத்துவப் பொருள்கள், சானிடைசர்கள், முகக்கவசம் வழங்கி வருவம் Rapid Response குழுவினர்.

இந்தியா முழுதும் ஏழை மக்களைத் தேடிப் போய் உதவிகள் செய்யும் ‘சென்னை வாரியர்ஸ்’

Sunday April 12, 2020 , 4 min Read

200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கிய கொரோனா, தற்போது இந்தியாவிலும் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. ஆனால் இந்திய அரசு தனது அசுர பலத்தை காட்டி, வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைத்துள்ளது.


லட்சக்கணக்கான மருத்துவக் குழுக்கள், காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் இரவு, பகலாக இந்த தொற்று நோய்க்கெதிராகப் போராடி வருகின்றனர். பல்வேறு என்.ஜி.ஓ.க்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அரசுக்கு உதவியாக மக்கள் நலப் பணி, சுகாதாரப் பணிகளில் களமிறங்கியுள்ளனர்.

rapid response

ஆனால் அரசின் இந்த திடீர் ஊரங்கு உத்தரவால் கிராமப் பகுதிகளில் வசிப்போரும், கூலி வேலை செய்பவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. மேலும், அவர்களுக்கு இந்நோய் குறித்த விழிப்புணர்வும், நோய்த் தடுப்பு முறைகள் குறித்த விவரங்களும் தெரியவில்லை என்பதே உண்மை.


இத்தகைய மக்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கிக் கூறி, அதில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வழிமுறைகளை விவரித்து, அவர்களுக்குத் தேவையான அடிப்படை மருத்துவப் பொருள்கள், சானிடைசர்கள், முகக்கவசம் மற்றும் அரிசி பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கி வருவதையே பணியாக Rapid Response என்ற என்.ஜி.ஓ. செய்து வருகிறது .

பரூக்

Rapid Response-இன் நிறுவனர் முகமது பரூக்.

இது குறித்து Rapid Response-ன் நிறுவனர் முகமது பரூக் நம்மிடம் தெரிவித்ததாவது, எனது சொந்த ஊர் தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டம். நான் யூகே-வில் இன்டர்நேஷனல் டெவலப்மெண்ட் படித்துள்ளேன். எல்லோரையும் போல படித்துவிட்டு, வேலைக்குச் செல்லாமல், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனுள்ள வகையில் ஏதாவது செய்யவேண்டும் என சிந்தித்து தொடங்கியதுதான் Rapid Response. இது இந்தியாவிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்ட ஓர் பேரிடர் மீட்புப் பணி என்.ஜி.ஓ. ஆகும், என்றார்.


நாங்கள் இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பலவிதமான பேரிடர்களின் போது சம்பவ இடத்துக்குச் சென்று பல்வேறு சேவைகளையும், பேரிடர் மீட்பு நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டுள்ளோம்.

தற்போது கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள அன்றாடத் தேவைகளுக்குக் கூட அல்லல்படும் கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மருந்து மற்றும் உணவுப் பொருள்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் எங்களது சேவையை ஆந்திராவிலும் தொடங்க உள்ளோம் என்றார்.
Rapid

கூலித் தொழிலாளர்களுக்கு வீடு தேடி சென்று நிவாரண உதவி வழங்கும் Rapid Response.

இவர்களது Rapid Response-ல் 21 நிரந்தரப் பணியாளர்களும், 600 பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டர்களும் இந்தியா முழுவதும் பணிபுரிந்து வருகின்றனர். நாட்டில் எங்கு என்ன பேரிடர் ஏற்பட்டாலும் உடனே நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இவர்கள் கிளம்பி விடுகின்றனர். இந்த என்.ஜி.ஓ. தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை இந்தியா முழுவதும் 18 பேரிடர்களில் இவர்கள் சேவை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு பணி மேற்கொண்டு வரும் இவர்கள், அப்பகுதியில் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் கூலித் தொழிலாளர்களுக்கு சோப்புகள், முகக்கவசம், உணவுப் பொருள்கள் போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

சேவை

தமிழகம் மட்டுமன்றி கேரளத்தில் எர்ணாகுளம், கர்நாடகத்தில் பெல்காம், மஹாராஷ்டிரத்தில் கோலாப்பூர் போன்ற பகுதிகளிலும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு நாள்களில் ஆந்திராவிலும் தங்களது நிவாரணப் பணிகளைத் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


எங்களது கொரோனா நிவாரணப் பணிகளானது அன்றாடம் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வரும் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதோடு, அவர்களுக்குத் தேவையான மருத்துவப் பொருள்களான ஹேண்ட்வாஷ், சோப், டெட்டால், பினாயில், ப்ளீச்சிங் பவுடர், முககவசங்கள், கர்ச்சீஃப்கள் மற்றும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்டவை அடங்கிய ரூ.600 மதிப்பிலான சுகாதாரத் தொகுப்பை இலவசமாக வழங்கி வருகிறோம்.

மேலும், அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, உப்பு, சமையல் எண்ணெய், பிஸ்கெட் பாக்கெட்கள் அடங்கிய ரூ.1000 மதிப்புள்ள உணவுப் பொருள்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. 5 நபர்கள் உள்ள ஓர் குடும்பத்துக்கு தேவையான இந்த சுகாதார, உணவுப் பொருள்கள் இரு வாரங்களுக்கு அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்கிறார் பரூக்.
உணவு

உணவுப் பொருள்களை நிவாரணம் வழங்க பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர்.

இதுவரை கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,200 நபர்களுக்கு இந்த சுகாதார, உணவுப் பொருள்கள் தொகுப்பை வழங்கியுள்ள Rapid Response இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களில் 2500 தொகுப்புகளை வழங்கியுள்ளது. அடுத்த 1 மாதத்தில் 10 ஆயிரம் நபர்களுக்காவது இத்தகைய நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என்பதை இலக்காக கொண்டு Rapid Response செயல்பட்டு வருகிறது.


தற்போது முகக்கவசங்களின் தேவை அதிகரித்துள்ளதால் கடலூரில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் உதவியுடன் முகக் கவசங்களை தைத்து தயாரிக்கும் ஓர் யூனிட்டையும் நிறுவியுள்ளனர். இதே போல மற்ற மாநிலங்களிலும் சுய உதவிக்குழுக்கள் மூலம் முகக் கவசம் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

சேவை

மேலும் பரூக் கூறும்போது, இதுவரை இதுபோன்ற ஓர் போரிடரை நாங்கள் சந்தித்தது இல்லை. ஏனெனில் இதுவரை மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர்கள் ஓர் மாவட்டத்தையோ அல்லது மாநிலத்தையோ மட்டும்தான் பாதிக்கும். இதனால் எங்களுக்கு மற்ற மாநிலங்களில் இருந்து உதவிகள் குவியும். நிவாரணப் பணிகளையும் மேற்கொள்ள எளிதாக இருக்கும்.

ஆனால் தற்போதைய சூழலில் இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த கொரோனா பாதிப்பால் பல்வேறு பகுதிகளில் இருந்து உதவிகள் பெறுவது சற்று கடினமாக உள்ளது என்கிறார். இவர்களுக்கு நிதியுதவி அளிக்க விரும்புவோர் இவர்களின் கீழ்கண்ட வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பலாம்.

Account Name: Rapid Response

Account Number: 50200002115108

IFSC Code: HDFC0001038

Account Type: Current

Bank: HDFC Bank, Branch: Avadi


இவ்வாறு கிடைக்கப்பெறும் பணமானது மருந்து, உணவுப் பொருள்களாக மாறி ஏழை, எளியவர்களுக்கு பயனளிக்கும். இவர்களுக்கு செய்யும் நிதியுதவிக்கு இந்திய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 G-யின் கீழ் 50% வரை வரிவிலக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


நாம்தான் ஊரடங்கு உத்தரவால் வெளியே சென்று உதவ முடியாத சூழலில் உள்ளோம். ஆனால் நாம் அளிக்கும் நிதி, நாடு முழுக்கச் சென்று தேவையில் உள்ள பலருக்கு உணவாகவும், மருந்தாகவும் பயன்படட்டுமே.


மேலும் இவர்கள் குறித்த தகவல்களை Rapid Response என்ற இணைய இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.