ரூபாய் நோட்டில் காந்திப் படம் நீக்கமா? என்ன சொல்கிறது RBI!
இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்துடன் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல் கலாம் படங்கள் இடம்பெறப் போகிறதா என்ற செய்திகளுக்கு ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது.
இந்திய ரூபாய் நோட்டுகள் அனைத்திலும் 1969ல் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழா வந்தபோது முதல் முறையாக ரூபாய் நோட்டுகளில் அவருடைய புகைப்படம் அச்சிடப்பட்டது. ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.100 ஆகிய தாள்களில் தனது 'சேவாகிராம்' ஆசிரமத்தில் காந்தி அமர்ந்திருப்பது போன்ற படம் இடம்பெற்றது.
1987 அக்டோபரில் வெளியான 500 ரூபாய் தாளில் காந்தியின் முகப்படமும், அவர் தண்டி யாத்திரை சென்ற படமும் இடம்பெற்றன என்றாலும், 1996ல் இருந்துதான் பிற ரூபாய் தாள்களிலும் காந்தியின் படம் அச்சிடப்பட்டது.
2000ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 1000 ரூபாய் தாளும் அறிமுகமானது. அதே ஆண்டு நவம்பரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 500 ரூபாய் தாள் அறிமுகமானது. 2005ம் ஆண்டு முதல் ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்ட ஆண்டும் அந்தத் தாளிலேயே குறிக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்ததுடன், காந்தி படம் அச்சிடப்பட்ட தாள்களின் இடையில், நூல் பட்டையும் பாதுகாப்புக்காக சேர்க்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியால் 2016ம் ஆண்டு நவம்பரில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளின் மதிப்பு இழப்பு செய்யப்பட்ட பின், ரூபாய் தாள்களின் நிறங்கள் மாற்றப்பட்டு, அதன் பின் அச்சிடப்பட்டவையே இப்போது பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளன.
இந்நிலையில், அடுத்த மாற்றமாக ரூபாய் நோட்டில் காந்தி படத்துடன், வங்காளக் கவிஞர் ரபீந்திரநாத் தாகூர் மற்றும் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும் ஏவுகணை நாயகனுமான அப்துல் கலாமின் புகைப்படங்களை இடம்பெறச் செய்யும் யோசனையில் ரிசர்வ் வங்கி இருப்பதாக சில செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் Security Printing and Minting Corporation of India (SPMCIL) இணைந்து காந்தி, தாகூர், கலாம் படங்களுடன் கூடிய வாட்டர் மார்க் சோதனை நோட்டுகளை ஐஐடி டெல்லியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் திலீப் டி ஷஹானிக்கு அனுப்பி வைத்து, எந்த ரூபாய் தாளை இறுதி செய்யலாம் என்று கருத்து கேட்டதாகக் கூறப்படுகிறது.
மற்ற தலைவர்களின் படம் அச்சிடப்பட்ட தாளில் எதை இறுதி செய்யலாம் என்று அறிக்கையாக சமர்ப்பிக்கக் கோரி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. பேராசிரியர் ஷஹானி, வாட்டர்மார்க்ஸை ஆய்வு செய்தல், மின்காந்த கருவியில் நிபுணத்துவம் பெற்றவர். இந்த ஆண்டு ஜனவரியில் மோடி அரசால் பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஷஹானி.
அயல்நாடுகள் பல தங்களின் வெவ்வேறு மதிப்பிலான நாணயங்களுக்கு பல தலைவர்களின் படங்களைப் பயன்படுத்துகின்றன அதனால் மூன்று பேரின் படங்களுமே அச்சடிக்கப்படலாம் என்றும் கூட சில ஊடகங்கள் உறுதியாகத் தகவல்களை வெளியிட்டன.
இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை நீக்கும் திட்டம் எதுவும் இப்போதைக்கு பரிசீலனையில் இல்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஊடகங்களில் பரவும் இது போன்ற செய்தி உண்மையல்ல என்றும் அவர் தனது ட்விட்டர் பக்க்ததில் பதிவிட்டுள்ளார்.
உலகளாவிய நாணயங்களும் தலைவர்களின் படங்களும்
அமெரிக்க டாலர்களின் வெவ்வேறு மதிப்புகள் ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் ஃபிராங்க்ளின், தாமஸ் ஜெபர்சன், ஆண்ட்ரூ ஜாக்சன், அலெக்சாண்டர் ஹாமில்டன் மற்றும் ஆபிரகாம் லிங்கன் உட்பட சில 19 ஆம் நூற்றாண்டின் ஜனாதிபதிகள் போன்ற சில ஸ்தாபக தந்தைகளின் உருவப்படங்களைக் கொண்டுள்ளன.
ஜப்பான் நாணயமான யென் பாக்டீரியாவியலாளர் ஹிடியோ நோகுச்சி, பெண் எழுத்தாளர் இச்சியோ ஹிகுச்சி மற்றும் யுகிச்சி ஃபுகுசாவா ஆகியோரின் படங்களைக் கொண்டுள்ளது - இருப்பினும் அவை அனைத்தும் 2024ல் மாற்றப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.