500 படங்கள்; 3 தேசிய விருது; 6 மாநில விருது: பத்திரிகையாளராக இருந்து மாபெரும் நடிகர் ஆன நெடுமுடி வேணு!
500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகர் நெடுமுடி வேணு, உடல்நலக்குறைவால் காலமானார். பத்திரிகையாளராக இருந்து நடிகராக மாறியவர், ஒரே ஆண்டில் ஒரே நடிகைக்கு காதலனாக, அப்பாவாக, தாத்தாகவாக என நடித்து பாராட்டுகளைப் பெற்றவர்.
மலையாளம் மட்டுமின்றி தமிழ்த் திரையுலகிலும் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் நெடுமுடி வேணு. எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் அப்படியே பொருந்திப் போகின்ற உடல்மொழியால் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இதனாலேயே சொந்த மாநிலமான கேரளாவைத் தாண்டியும் இந்தியா முழுவதிலும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானார்.
மிடுக்கான போலீசாகட்டும், உருகி உருகி பாசத்தைக் கொட்டும் அப்பாவாகட்டும், அப்பாவியாய் வந்து போகும் கதாபாத்திரம் ஆகட்டும் எல்லாவற்றிற்கும் தனது திறமையான நடிப்பால் உயிர் கொடுத்து மெருகேற்றியவர் நெடுமுடி வேணு. பத்திரிகையாளராக இருந்து நடிப்பின் மீது கொண்ட காதலால் நடிகராக மாறியவர்.
ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த நெடுமுடி வேணுவின் இயற்பெயர் கேசவன் வேணுகோபால் ஆகும். 1978ம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்தவர், தனது பெற்றோரின் சொந்த ஊரான நெடுமுடியைத் தன் பேருடன் சேர்த்து நெடுமுடி வேணு ஆனார்.
1978ல் வெளியான ’தம்பு’ படம் நெடுமுடி வேணுவை பிரபலமாக்கியது. மலையாளப் படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துக் கொண்டிருந்த போதே, நேரடி தமிழ்ப் படங்கள் மூலம் தமிழில் நடிக்கத் தொடங்கினார். மொத்தமான 500 படங்கள் வரை நடித்துள்ள நெடுமுடி வேணு, தமிழில் மோகமுள், இந்தியன், அந்நியன், சிலம்பாட்டம், சர்வம் தாள மயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
1990ம் ஆண்டு 'ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா' திரைப்படத்துக்காக சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருதை வென்ற நெடுமுடி வேணு, 2003ஆம் ஆண்டு, 'மார்க்கம்' திரைப்படத்துக்காக, சிறப்பு நடுவர் தேர்வாக தேசிய விருதை வென்றார். 2006ஆம் ஆண்டு திரைப்படம் அல்லாத படைப்பில் வர்ணனை செய்ததற்காக தேசிய விருது வென்றார்.
மொத்தமாக 3 முறை தேசிய விருது, 6 முறை மாநில அரசு விருது, 3 ஃபிலிம்ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.
ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்கும் ஆசையில் தான் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார் நெடுமுடி வேணு. ஆனால் ஒரு கட்டத்தில் ஹீரோ வேடம் மட்டுமல்ல, எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற முடியும் என்பதை உணர்ந்தார். எனவே தன் நடிப்பிற்குத் தீனி போடும் எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் நடிக்கத் தயங்கவில்லை. சிறுவயதிலேயே வயதான கதாபாத்திரங்களில் நடித்து மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
ஒரே வருடத்தில் அடுத்தடுத்து வெளியான படங்களில் ஒரே நடிகைக்கு காதலனாக, அப்பாவாக, தாத்தாவாக என மூன்று வெவ்வேறான கதாபாத்திரங்களில் நடித்து தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர் நெடுமுடி வேணு. அதாவது 1986ல் வெளியான 'பொன்னும் குடத்தினும் பொட்டு' என்கிற படத்தில் நடிகை ரோகிணிக்கு ஜோடியாக நடித்த அவர், அதே வருடத்தில் வெளியான 'லவ் ஸ்டோரி' என்கிற படத்தில் அவரது தாத்தாவாகவும் 1987ல் வெளியான 'அச்சுவேட்டண்ட வீடு' படத்தில் அவரது அப்பாவாகவும் நடித்திருந்தார். இது திரையுலகில் எந்த நடிகரும் செய்யாத சாதனையாகக் கருதப்படுகிறது.
தமிழ், மலையாளம் மட்டுமின்றி ஜீனத் அமன் நடித்த சவுராஹென் என்கிற ஆங்கில படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நெடுமுடி வேணு. நடிகராக மட்டுமின்றி கட்டத்தே கிளிக்கூட்டு, தீர்த்தம், ஒரு கத ஒரு நுனக்கத உள்ளிட்ட சில படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். மேலும், 1989ல் பூரம் என்கிற ஒரே ஒரு படத்தையும் இயக்கியுள்ளார் நெடுமுடி வேணு. காவ்யதாளங்கள் என்கிற இசை ஆல்பத்திற்காக இருதல பட்சி என்கிற பாடலையும் பாடியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு கொரோனா விழிப்புணர்வு மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து இவர் பாடிய பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது. கேரளா போலீசார் தங்களது அதிகாரப்பூர்வ முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் அப்பாடலை பகிர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தைப் பொருத்தவரை அனைத்து நடிகர்களுடனும் நல்ல நட்பில் இருந்து வந்தாலும், மோகன்லாலின் ஆஸ்தான நடிகராக கூறப்பட்டவர் நெடுமுடி வேணு. அடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் மோகன்லாலின் மரைக்கார் மற்றும் ஆராட்டு ஆகிய படங்களிலும் முக்கிய வேடங்களில் அவர் நடித்துள்ளார். மலையாளத்தில் கடைசியாக 'ஆணும் பெண்ணும்' திரைப்படத்திலும், தமிழில் கமலின் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்துள்ளார் இவர்.
73 வயதான நெடுமுடி வேணு சமீபத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டார். நேற்று திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவரது உடல்நிலை கவலைக்கிடம் என்ற தகவலை மருத்துவர்கள் வெளியிட்டனர். தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் குறிப்பிடத்தகுந்த முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக இருந்த நெடுமுடி வேணுவின் மரணம் சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“நட்சத்திர அந்தஸ்து என்பதே என் கனவில் இருந்ததில்லை. ஏனெனில் நான் சினிமாவில் நடிக்க வந்ததே தற்செயல்தான். அது நடக்கவில்லை என்றால் நாடகக்காரனாகவே இருந்திருப்பேன். நான் ஒரு நடிகர், இப்போதும் அது மட்டும்தான் என் கனவிலும் நனவிலும் இருக்கிறது,” என தனது 70வது பிறந்தநாளையொட்டி தி இந்துவிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் நெடுமுடி வேணு.
அதனாலேயே திருடன், போலீஸ், ரவுடி, பெண் பித்தர், தந்தை, கதாநாயகன், வில்லன் என மலையாள சினிமாவில் அதிகம் வித்தியாசமான கதாபத்திரங்களை அவரால் செய்ய முடிந்தது. நிச்சயம் நெடுமுடி வேணு சினிமாவில் விட்டுச்சென்ற இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்பதே உண்மை..