12 வயதில் மும்பைக்கு கனவுடன் வந்த இவர், இன்று 100 கோடி வர்த்தகத்தின் அதிபர்!
பீம்ஜி பட்டேல் சிறு வயதில் மும்பையில் பல விதமான வேலைகளை செய்திருக்கிறார். பின்னர் சிறிய மளிகை கடை துவங்கியவர், சூப்பர் மார்கெட்டாக அதை உயர்த்தி, பின்னர் மோனிகா எண்டர்பிரைசஸ் எனும் வெற்றிகரமான மது மொத்த வர்த்தகத்தை நடத்தி வருகிறார்.
1981ல் 12 வயதான, பீம்ஜி பட்டேல் குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள கிராமத்தில் இருந்து கனவுகளின் நகரமான மும்பை சென்றார். வாசிப்பதில் ஆர்வமும், கணித திறனும் கொண்டவர் இந்த திறன்கள் மூலம் மும்பையில் பிழைத்துக்கொள்ளலாம் என நம்பினார்.
மும்பையில் தனது சகோதரருடன் இணைந்து கிடைக்கும் வேலைகளை செய்தார். இந்த எளிமையான துவக்கம், விடாமுயற்சி, ஈடுபாடு மற்றும் கடின உழைப்பால் ஆன வெற்றிக்கதைக்கான அடித்தளமாக அமைந்தது.
சில ஆண்டுகள் சின்ன சின்ன வேலைகள் பார்த்தவர், தனது மூத்த சகோதரரிடம் இருந்து 30,000 கடன் வாங்கி மளிகைக் கடை துவக்கினார். மெல்ல வளர்ர்ந்து அதை சூப்பர் மார்க்கெட்டாக உயர்த்தினார்.
“என் அப்பா அவரை நோக்கி வந்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார். வெளிநாடுகளில் இருந்து வந்த பொருட்களுக்கு, குறிப்பாக மதுவுக்கு கமிஷன் ஏஜெண்டாக இருக்கும் வாய்ப்பை பெற்றார். அவரது நெட்வொரிக்கிங் ஆற்றல், இந்தியாவில் உள்ள தூதரங்களுக்கு இறக்குமதி மதுவை வழங்க உதவியது,” என்கிறார் அவரது மகன் குனால் பட்டேல்.
இதன் மூலம் கிடைத்த அனுபவத்தை கொண்டு, மோனிகா எண்டர்பிரைசஸ் எனும் பெயரில் 2008ல் மொத்த மது விற்பனை வர்த்தகத்தைத் துவக்கினார்.
வெற்றிகரமான விநியோகம்
அதிலிருந்து, பீம்ஜி மற்றும் குடும்பத்தினர், இறக்குமதி செய்த உயர் ரக மதுவை விற்பனை செய்வதில் வெகுவாக முன்னேறி வந்துள்ளனர். பல புகழ்பெற்ற பிராண்ட்களை தருவித்து விநியோகம் செய்தார். இந்த பிராண்ட்களை இறக்குமதி செய்து, இந்தியா முழுவதும் விநியோகித்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் உரிம முறை மாறுபட்டதால் உள்ளூர் விநியோகிஸ்தருடன் இணைந்து செயல்பட்டார்.
இன்று பீம்ஜி நிறுவனத்தில் 125 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த ஆண்டு நிறுவனம் ரூ.100 கோடி விற்றுமுதலை எட்டியதாக, குனால் கூறுகிறார். 2013ல் வர்த்தகத்தில் இணைந்த குனால், நிறுவன செயல்பாட்டில் பல்வேறு முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
“நான் வர்த்தகத்தில் இணைந்த போது, வெளிநாட்டு மது ரகங்களை சிறிய அளவில் இறக்குமதி செய்து மொத்தமாக விற்பனை செய்து வந்தோம். அதாவது, என் தந்தை விற்பனை செய்த பிராண்ட்கள் நிறுவனத்திற்கு பிரத்யேகமானவை அல்ல. நாங்கள் விற்பனை செய்த பிராண்ட்கள் எங்களைப்போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட டீலர்களை கொண்டிருந்தன,” என்கிறார் குனால்.
எனவே, குனால் வெளிநாட்டு பிராண்ட்களை இந்தியாவில் பிரத்யேகமான விநியோகிப்பதற்கான ஒப்பந்தங்களை செய்து கொண்டார். இப்போது நிறுவனம் 42 வெளிநாட்டு பிராண்ட்களின் இந்திய பிரதிநிதியாக இருக்கிறது.
வரி சிக்கல்
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் வரி விதிப்பை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருந்தது. மாநிலங்களுக்கு இடையே வரி தொடர்பான விதிகள் வேறுபட்டதால், புதிய மாநிலங்களில் செயல்படும் போது கூடுதல் கவனம் அவசியமானது.
“மாநிலங்களுக்கிடையே விதிகள் மாறுவதால், அதற்கேற்ப கணக்கு போட வேண்டும். புதிய மாநிலங்களில் நுழைவது என்றால் பதிவு செயல்முறையே சிக்கலானதாக இருக்கும். உள்ளூர் சந்தையை நன்கறிந்தவர்களைக் கண்டறிய முயற்சித்து கற்கும் முறையை கையாள வேண்டும்,” என்கிறார் குனால்.
ஆனால், வரிகள் ஒரே மாதிரியாக இல்லாததை சாதகமாகவும் பார்க்கலாம் என்கிறார். இந்த துறையில் ஒரே மாதிரியான தன்மை இல்லாததால் புதியவர்கள் நுழைவது கடினம், எனவே சந்தையில் அதிக நிறுவனங்கள் மற்றும் போட்டி இல்லை என்கிறார்.
எதிர்காலத் திட்டம்
பீம்ஜியை பொருத்தவரை கனவுடன் தனது நிறுவனத்தை வளர்த்திருக்கிறார். எனினும், இந்த சந்தை வளர்ந்து வருவதால், இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் நல்ல வாய்ப்பு இருக்கிறது,
வளர்ச்சி அம்சங்கள் அடிப்படையில் இந்தியாவில் மது சந்தை ஆண்டு அடிப்படையில் 7.4 சதவீத வளர்ச்சி கண்டு வருவதாக கருதப்படுகிறது. இது 39.7 பில்லியன் டாலரை தொடும் என்று கோல்ட்ஸ்டியன் ரிசர்ச் தெரிவிக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள, நிறுவனம் தனது சொந்த ஸ்காட்ச் மற்றும் ஒயின் மது ரகங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
எனினும் நேரடியாக உற்பத்தியில் இறங்காமல், ஏற்கனவே உள்ள உற்பத்தியாளர்களுடன் இணைந்து இந்தியாவில் புதிய பிராண்ட்களை அறிமுகம் செய்ய தந்தை திட்டமிட்டிருப்பதாக குனால் கூறுகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: சைபர் சிம்மன்