Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'மதிப்பெண்கள்தான் முக்கியம்; என் முகத்தில் உள்ள முடி அல்ல' - உருவகேலிக்கு ஆளான டாப்பர் மாணவியின் பதில்!

முகத்தில் உள்ள முடியை சுட்டிக் காட்டி உருவக்கேலிக்கு ஆளான, 10ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி, தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு அளித்துள்ள பதில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

'மதிப்பெண்கள்தான் முக்கியம்; என் முகத்தில் உள்ள முடி அல்ல' - உருவகேலிக்கு ஆளான டாப்பர் மாணவியின் பதில்!

Friday April 26, 2024 , 3 min Read

என்னதான், நாளுக்கு நாள் கல்வியறிவில் நாம் முன்னேறி வருவதாக, காலரைத் தூக்கி விட்டுக் கொண்டாலும். ஒருவரின் வெற்றியை அவரது திறமையை வைத்து நிர்ணயிக்காமல், அவரின் உருவத்தையும், வெளித்தோற்றத்தையும் வைத்து நிர்ணயிக்கும் பக்குவமில்லாத மனிதர்கள் இப்போதும் அதிகளவில் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நீங்கள் சமூகவலைதளப் பக்கங்களில் அதிகம் உலவுபவர் என்றால் நிச்சயம், மாணவி நிகரின் புகைப்படத்தை வைத்து ட்ரோல் செய்யும் பதிவு அல்லது அதற்கு பதிலடி கொடுக்கும் பதிவு என எதையாவது நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.

student prachi nigam

யார் இந்த நிகம்? 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தும், அவர் கேலி கிண்டலுக்கு ஆளானது ஏன்? தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடியாக அவர் கூறியது என்ன? இதோ விரிவாகப் பார்க்கலாம்...

உருவ கேலி

உத்தரப்பிரதேசம் சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம். இவர் தனது கடின உழைப்பால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.5 சதவீத மதிப்பெண்களுடன் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தார். இவரது இந்த வெற்றி ஊடகங்களில் செய்தியாக வெளியானபோது, அவரின் கடின உழைப்பிற்கு பாராட்டு தெரிவிக்காமல் சிலர், அவரின் தோற்றத்தை வைத்து உருவகேலி செய்து கடுமையான விமர்சனங்களை சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர்.

அதாவது, பிராச்சி நிகமின் முகத்தில் மீசை போன்று முடிகள் வளர்ந்திருந்ததை வைத்தே, அவர்கள் அப்படி மோசமான கமெண்ட்டுகளைப் பதிவிட்டனர். ’சம்பந்தப்பட்ட மாணவி படிப்பைவிட முதலில் அவரது தோற்றத்திற்கும், சுயமாக அழகு படுத்திக் கொள்வதற்கும் கற்றுக் கொள்ள வேண்டும்’, ‘இது ஓர் இளம்பெண்ணுக்கான முகமில்லை...' 'மீசை  வளர்ந்திருக்கிறது...' , 'நிகம் தனது அழகில் கவனம் செலுத்தி, முதலில் அதில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும்’ என்பது மாதிரியான கமெண்ட்டுகளைப் பதிவு செய்ததோடு, நிகமின் புகைப்படத்தையும் பகிர்ந்து ட்ரோல் செய்திருந்தனர்.

student prachi nigam

ட்ரோலுக்கு பதிலடி

இந்தப் பதிவுகள் சமூகவலைதளப் பக்கத்தில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, ‘வெற்றியாளர்கள் ஆணோ, பெண்ணோ.. அவர்களது திறமையைப் பற்றி பேசாமல், தோற்றத்தை வைத்து மதிப்பிடும்’ இது போன்றவர்களுக்கு பதிலடி தரும் விதமாக பலர் நிகமுக்கு ஆதரவான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

‘பருவ வயதுப் பெண்களை பாதிக்கும் 'பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்' (Polycystic Ovarian Syndrome) காரணமாக அவரின் முகத்தில் முடிகள் வளர்த்திருக்கலாம்’ என மருத்துவ ரீதியாக பலர் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க, இன்னும் சிலரோ நிகமை ட்ரோல் செய்தவர்களை கண்டிக்கும் விதமாக காட்டமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஒற்றை வாக்கியட்டால் ஓங்கி அடித்த நிகம்

இது ஒருபுறம் இருக்க, தன்னைப் பற்றி வரும் மோசமான கமெண்ட்டுகளைப் பற்றி தான் கவலையே படவில்லை என்பது போல், நிகம் பதிவு செய்துள்ள கருத்து, அவரை ட்ரோல் செய்தவர்களுக்கு சவுக்கடியாக அமைந்துள்ளது.

student prachi nigam

Image courtesy: The better india

“என் மதிப்பெண்கள்தான் முக்கியம்... என் முகத்தில் உள்ள முடி அல்ல...” என ஒற்றை வாக்கியத்தால், தன்னைக் காயப்படுத்தியவர்களை ஓங்கி அடித்துள்ளார் நிகம். அவர் பெற்ற மதிப்பெண்களோடு, அவரின் இந்த துணிச்சலான, தன்னம்பிக்கை மிகுந்த வார்த்தைகளுக்கும் சேர்த்து  தற்போது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

‘இறைவன் படைப்பில் அனைவருமே அழகானவர்கள்தான். இந்த சமூகம் கட்டமைத்துள்ள அழகு என்ற நிர்ணயத்தை நாம் தகர்க்க வேண்டும்’ நிகமுக்காக மட்டுமல்லாமல், அவர் போல் தாக்குதலுக்கு ஆளாகும் அனைவருக்காகவும் இணையத்தில் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளன்ர்.

உலகம் எப்படியும் பேசும்!

அல்டிமேட்டாக மேக்னா என்ற ஊடகவியலாளர்,

‘நான் ஐசிஎஸ்இ தேர்வில் 90% மதிப்பெண்கள் பெற்று விட்டேன் எனக் கூறியபோது, எனது அக்கம்பக்கத்தார் அதனை நம்பவில்லை. நான் அழகாக என்னை அலங்கரித்துக் கொண்டு, நன்றாக படிப்பவள் போல் ஊரை ஏமாற்றுவதாக அவர்கள் சந்தேகித்தனர். எனது மதிப்பெண்கள் உண்மையா என்றுகூட, நேரடியாக என் பள்ளிக்கே சென்று விசாரிக்கவும் செய்தனர்."
"எப்போதுமே வெற்றி அடையும் பெண்கள் விமர்சனத்திற்கு ஆளாக்கப் படுகின்றனர். நீங்கள் ஒல்லியாக இருந்தாலும் சரி, உடல் பருமனாக இருந்தாலும் சரி... இரண்டையுமே அவர்கள் கடுமையாக விமர்சிக்கத்தான் செய்வார்கள். எனவே, அவர்களைப் பற்றியெல்லாம் நாம் எப்போதும் சிந்திக்கவே கூடாது. நம் பயணத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்," என எக்ஸ் பக்கத்தில் அழகான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாராட்டுகளும், வாழ்த்துகளும்

இதேபோல், தி மூட் டாக்டர் என தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும், மூளை நிபுணர், ‘தைரியமாகவும், உண்மையாகவும் பதிலடி கொடுத்துள்ள நிகருக்கு என் பாராட்டுகள். நம்மில் பலர் பியூன் வேலைக்கான தேர்வில்கூட தேர்ச்சி பெற முடியாதவர்கள்தான். நீங்கள் மேற்கொண்டு நிறைய வெற்றி பெற வாழ்த்துகள்,’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இப்படியாக நிகமுக்காக சமூகவலைதளப் பக்கங்களில் பலர் ட்ரோல் செய்தவர்களைக் கண்டித்து, பதிலடி கொடுத்து வரும் நிலையில், வெற்றியோ, தோல்வியோ அல்லது தன்னைப் பற்றி வரும் விமர்சனங்களையோ எதையும் மனதில் ஏற்றிக் கொள்ளாமல், தன் எதிர்காலத்திற்கான அடுத்த அடியில் வெற்றி பெறுவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்து விட்டார் நிகம்.

இன்ஜினீயராக வேண்டும் என்பதுதான் நிகமின் எதிர்கால ஆசையாம். எனவே தற்போது அவர் IIT-JEE நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.