Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஏழை எளிய மக்களுக்கு மொபைல் மருத்துவமனை மூலம் சிகிச்சை அளிக்கும் டாக்டர் சுனில்!

பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் சுனில் குமார் ஹெப்பி ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க தனது காரை மொபைல் மருத்துவமனையாக மாற்றி ஓய்வின்றி நோயாளிகளை குணப்படுத்தி வருகிறார்.

ஏழை எளிய மக்களுக்கு மொபைல் மருத்துவமனை மூலம் சிகிச்சை அளிக்கும் டாக்டர் சுனில்!

Monday November 08, 2021 , 3 min Read

டாக்டர் சுனில் குமார் ஹெப்பி, பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர். ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கவேண்டும் என்பதே இவரது நோக்கம். இதற்காக Matru Siri Foundation என்கிற என்ஜிஓ நடத்தி வருகிறார்.


இதன் மூலம் ஒரு மொபைல் கிளினிக் ஏற்பாடு செய்து ஏழை நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று இலவசமாக சிகிச்சையளித்து வருகிறார்.

1

சுனில் விஜய்புரா பகுதியில் பிறந்து வளர்ந்தவர். பிஜாபூர் மருத்துவக் கல்லூரியில் படித்தார். பெங்களூரு பிஜிஎஸ் மருத்துவமனையில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். மொபைல் கிளினிக் நடத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2011ம் ஆண்டு இந்த மருத்துவமனையில் இருந்து விலகினார்.

“நான் சிறிய கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தேன். மருத்துவ வசதி இல்லாமல் போனால் அந்தப் பகுதி மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். என் கிராமத்தில் இருந்தவர்கள் ஆரம்ப சுகாதார மையம் செல்ல கிட்டத்தட்ட 50 கி.மீட்டர் வரை செல்லவேண்டிய அவல நிலை இருந்தது. இதற்காக மொபைல் கிளினிக் திறக்க நினைத்தேன்,” என்கிறார் டாக்டர் சுனில்.

மூலை முடுக்கில் இருப்பவர்களையும் சுகாதார வசதி சென்றடையவேண்டும் என்று நினைத்த சுனில், தனது காரை மொபைல் கிளினிக்காக மாற்றினார். மருந்துகளை வாங்கி அதில் நிரப்பினார். ஆக்சிஜன் சிலிண்டர், இசிஜி மெஷின் போன்றவற்றை அதில் வைத்துத் தயார்படுத்தினார். தன்னார்வலர்களாக மருத்துவர் ஒருவரும் செவிலியர் ஒருவரும் உதவிக்கு இவருடன் இணைந்துகொண்டனர்.

தற்சமயம் பெங்களூருவிலும் சொந்த ஊரான விஜயபுரா பகுதியிலும் மொபைல் மருத்துவச் சேவையை வழங்கி வருகிறார். தினமும் 80 முதல் 100 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிறார்.

கோவிட் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாட்ஸ் அப் மூலம் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்களுக்கும் சுனில் தன் மொபைல் கிளினிக்கில் வலம் வந்தபடி சிகிச்சையளிக்கிறார்.

சேவையில் ஈடுபடுவதற்கான உந்துதல்

அடிப்படை மருத்துவ வசதி பலருக்குக் கிடைப்பதில்லை என்பதை சுனில் கவனித்தார். மக்களைத் தேடிச் சென்று சிகிச்சையளிக்கும் எண்ணம் தோன்றியது. இதை வலுப்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்தது.

2

பெங்களூருவில் ஓசூர் சாலை வழியாக சுனில் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது விபத்து ஒன்றை நேரில் பார்த்தார்.

”விபத்தில் அடிபட்ட நபர் சாலையில் விழுந்து கிடந்தார். அவருக்கு எந்தவித மருத்துவ உதவியும் கிடைக்கவில்லை. என்னிடம் முதலுதவி பெட்டி இருந்தது. என் காரை நிறுத்திவிட்டு அவருக்கு சிகிச்சையளித்தேன்,” என்று சுனில் நினைவுகூர்ந்தார்.

மருத்துவச் சேவை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்படவேண்டும். அது அவர்களது உரிமை என்று சுனில் நினைத்தார். எனவே மருத்துவ உதவி தேவைப்படுவோரைச் சென்றடைய Matru Siri Foundation என்கிற என்ஜிஓ நிறுவினார். தனது காரை மொபைல் கிளினிக்காக மாற்றினார்.

வீடில்லாமல் தவிப்பவர்கள், முதியோர், கட்டுமானப் பணியாளர்கள் என மருத்துவ வசதி தேவைப்படுவோரைத் தேடிச்சென்று இலவசமாக சிகிச்சையளித்து வருகிறார்.

தன்னலமற்ற சேவை

சுனில் பகல் நேரத்தில் தனது மொபைல் கிளினிக்கில் சென்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிறார். 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பெங்களூரு கோரிப்பாளயம் பகுதியில் இருக்கும் BBMP கோவிட் பராமரிப்பு மையத்தில் இரவு ஷிஃப்ட் வேலை செய்கிறார். இங்கு நோயாளிகளிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கிறார். இடையில் கிடைக்கும் சில மணி நேரங்களில் மட்டுமே ஓய்வெடுக்கிறார்.

3
”இரவு எட்டு மணி முதல் காலை எட்டு மணி வரை BBMP மருத்துவமனையில் வேலை. இரண்டு மணி நேரம் ஓய்வெடுத்துவிட்டு 10 மணிக்கு திரும்ப புறப்படுவேன்,” என்கிறார் சுனில்.

கொரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கியதிலிருந்து மருந்து மற்றும் இதர உபகரணங்களுக்காக தன்னிடம் இருந்த மொத்த சேமிப்பையும் செலவிட்டுள்ளார். இதனால் தற்போது நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டு என்ஜிஓ நடத்தி வருகிறார்.

“குளுக்கோமீட்டர், ஆக்சிஜன் டேங்க், பிபி மானிட்டர், ஈசிஜி மெஷின் போன்ற அத்தியாவசிய உபகரணங்கள் என் காரில் எப்போதும் இருக்கும்,” என்கிறார் சுனில்.

சுனில் கர்நாடகா முழுவதும் இதுவரை 785 இலவச மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்துள்ளார். 90,000 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளார்.


வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத நிலையில் தனிமையில் இருக்கும் முதியவர்கள், லேசான பாதிப்புள்ள கொரோனா நோயாளிகள் போன்றோருக்கு முன்னுரிமை அளித்து சிகிச்சையளிக்கிறார்.

ஆரோக்கியமான எதிர்காலம்

Matru Siri Foundation செயல்பாடுகளைப் பலர் பாராட்டியுள்ளனர். இவரது நோக்கத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்ட பலர் தன்னார்வலர்களாகவும் இணைந்து கொண்டுள்ளனர். இன்று 120 மருத்துவர்களும் மருத்துவம் அல்லாத இதர சேவைகளில் 350க்கும் மேற்பட்டோரும் இணைந்துள்ளனர்.

4

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் டாக்டர் சுனிலின் முயற்சியைப் பாராட்டியுள்ளனர்.


700-க்கும் மேற்பட்ட மல்டி ஸ்பெஷாலிட்டி ஹெல்த் செக்-அப் முகாம்களை ஏற்பாடு செய்ததற்காக இந்த என்ஜிஓ பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் வென்றுள்ளது. ஏழை எளியவர்களுக்கும் மருத்துவ வசதி சென்றடைய வேண்டும் என்கிற கனவுக்காகவே தன் வாழ்க்கை அர்ப்பணித்துள்ளார் டாக்டர் சுனில்.

”சுகாதாரத் துறை மோசமான நிலையில் இருக்கிறது. என்னால் இயன்ற வகையில் மக்களுக்கு உதவ முயற்சித்து வருகிறேன்,” என்கிறார்.

வரும் நாட்களில் தன் சொந்த ஊரில் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றைத் தொடங்கவேண்டும் என்பதே இவரது இலக்கு.


ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா